பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Saturday, 17 December 2016

பூங்காவனம் இதழ் 26 பற்றிய பார்வை

பூங்காவனம் இதழ் 26 பற்றிய பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனெல்ல.

கலை, இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனம் இதுவரை மூத்த படைப்பாளிகள், இலக்கியவாதிகளான பெண் எழுத்தாளர்களை நேர்காணல் செய்து அவர்களது புகைப்படத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து அவர்கள் பற்றிய தகவல்ளையும் பிரசுரித்து வந்தது. 26 ஆவது இதழில்; பன்முகப் படைப்பாளியாக விளங்கும் இளம் தலைமுறை எழுத்தாளரான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் அழகிய புகைப்படம் முன் அட்டையை அலங்கரிக்கின்றது. வழமை போன்று சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என பல்வேறுபட்ட அம்சங்கள் இதழில் இடம்பெற்றுள்ளன.

யுனெஸ்கோ 1965 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்திய எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8 ஆம் திகதி என்பதை ஆசிரியர் வாசகர்களுக்கு நினைவுபடுத்தி எழுத்தறிவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இலக்கியத்தின் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருக்கிறார்.

அட்டைப்படத்தை அலங்கரிக்கும் எச்.எப். ரிஸ்னாவைப் பற்றி இலக்கிய உலகம் நன்கு அறிந்திருந்தாலும் இதழிலுள்ள குறிப்புக்கள் அவர் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு உறுதுணையாக இருக்கின்றன. மலையகத்தின் பதுளை மாவட்டத்தில் தியத்தலாவையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஜனாப். கே.எம். ஹலால்தீன் - பீ.யூ. நஸீஹா தம்பதியரின் புதல்வியாவார். தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியர். இதனால் இவரது கல்வியில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எச்.எப். ரிஸ்னா கஹகொல்லை அல் பத்ரியா மு.ம.வி, வெலிமடை மு.ம.வி, பண்டாரவளை சேர் ராசிக் பரீட் மு.ம.வி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளதுடன் தனியார் நிறுவனங்களில் கணினிப் பயிற்சிப் பாடநெறிகளை பூர்த்தி செய்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல்துறை பாடநெறியையும் மேற்கொண்டுள்ளார். தற்பொழுது கல்வி வெளியீட்டுத்த திணைக்களத்தில் பணியாற்றி வருகின்றார்.

பாடசாலைக் காலத்திலேயே கவிதைத் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் பாடசாலை மட்டப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைத் தட்டிக்கொண்டுள்ளார். காத்திருப்பு என்ற கவிதையை 2004 இல் எழுதியதைத் தொடர்ந்து இலக்கியத் துறையில் நுழைந்து இதுவரை ஒன்பது நூல்களை வெளியிட்டிருக்கின்றார். கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் இலக்கியம், மெல்லிசைப் பாடல்கள் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.  இவரது பாடல்கள் நேத்ரா அலைவரிசையில் ஒலி, ஒளிபரப்பப்பட்டுள்ளதுடன் பாடகர் கலைக்கமல் அவர்களால் வெளியிடப்பட்ட ஷஷமண் வாசனையில் மகரந்தப் பூக்கள்|| இறுவட்டிலும் வெளிவந்திருப்பது இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

இவர் அகில இலங்கை மட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுள்ளதோடு சிறந்த பாடலாசிரியர், சிறந்த சிறுகதை எழுத்தாளர், காவிய பிரதீப, எழுசுடர் ஆகிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இதழில் நாட்காட்டிகளோடு நாம், வாழ்க்கைச் சங்கிலி, புலப்பெயர்வு, செறிவோம் தமிழ்மொழி, சுயநலம், தடம் மாறிய மனிதம், தண்ணீரும் கண்ணீரும், விடை கேட்கிறேன், நினைவுகள் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இவற்றை முறையே பதுளை பாஹிரா, பி.ரி. அஸீஸ், திக்வல்லை கமால், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, மிஹிந்தலை பாரிஸ், என். சந்திரசேகரன், ஆ. முல்லைதிவ்யன், காத்தான்குடி றுஷ்தா ஆகியோர் எழுதியியுள்ளனர்.

பயண அனுபவம், மனித மனங்கள், நல்ல உம்மா, மாற்றங்கள், உண்மை பேசும் இதயங்கள் என்ற தலைப்புகளில் சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன. இவற்றை முறையே சூசை எட்வேட், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, கலாபூஷணம் எம்.எம். அலி அக்பர், ச.முருகானந்தன், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோர் எழுதியுள்ளனர்., இலக்கிய அனுபவ அலசலை கவிஞர் ஏ. இக்பாலும், கவிதைகளுடனான கைகுலுக்கல் நூல் பற்றிய மதிப்பீட்டை பதுளை பாஹிராவும், எழுத்தாளர் முத்துமீரான் பற்றிய குறிப்புகளை ரிம்ஸா முஹம்மதும் எழுதியுள்ளனர்.

நூலகப் பூங்காவில் 16 நூல்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் வாசகர் கடிதமும் இடம்பெற்றிருக்கின்றமை இதழில் காத்திரத்துக்கு வலு சேர்க்கின்றது. மொத்தத்தில் பூங்காவனம் இதழ் பல்சுவைக் களஞ்சியமாக இருக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் இதழ் 25 பற்றிய கண்ணோட்டம்

பூங்காவனம் இதழ் 25 பற்றிய கண்ணோட்டம்

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்

பூங்காவினுள்ளே ஆசிரியர் தனது பக்கத்தில் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய செய்தியை குறிப்பிட்டிருக்கின்றார். 2016 மே மாதம் இலங்கையின் வெள்ள அனர்த்தங்களால் அநேக மக்கள் பாதிக்கப்பட்டார்கள். மனித உயிர்கள் மாத்திரமன்றி கால்நடைகள், சொத்துக்கள், உடமைகள் என்பனவும் காவுகொள்ளப்பட்டன. வெள்ள அனர்த்தம் மாத்திரமன்றி மண் சரிவினாலும் பல அழிவுகள் ஏற்பட்டன. தென்கிழக்கு ஆசியாவிலே ஏற்பட்ட மாபெரும் மண்சரிவு அனர்த்தம் அரநாயக்காவில் ஏற்பட்ட அனர்த்தம் என கணிப்பிடப்பட்டிருக்கின்றது. இறைவனின் கட்டளைகளை ஏற்று நடக்காததால் ஓர் எச்சரிக்கையாக இந்த நிகழ்வுகள் ஏற்பட்டுவிட்டன. இது பற்றிய கருத்துக்களை ஆசிரியர் தனது பக்கத்தில் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

இதழின் உள்ளே வழமை போன்று நேர்காணல், சிறுகதைகள், கவிதைகள் உட்பட இலக்கிய அனுபவ அலசல், கட்டுரைகள், உருவகக் கதை என பல்வேறுபட்ட ஆக்கங்களை உள்ளடக்கியதாக இந்த இதழ் வெளிவந்திருக்கின்றது.

நேர்காணலில் எழுத்தாளர் திருமதி. மைதிலி தயாபரனை சந்தித்து அநேக இலக்கிய விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் இதழாசிரியர். திருமதி. மைதிலி தயாபரன் பற்றிய தகவல்களை பார்க்கும்போது இவர் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் பாடசாலையில் கல்வி பயின்று 1996 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி 2001 ஆம் ஆண்டு பொறியியலாளராக பட்டம் பெற்று இலங்கை மின்சார சபையில் வவுனியா பிரதேசத்தில் பிரதம பொறியிலாளராகவும், வடக்கின் வசந்தம் என்ற செயற் திட்டத்தின் முகாமையாளராகவும் பணியாற்றி வருகின்றார். முழுக்க முழுக்க இவர் ஓர் இலக்கியவாதியாக இல்லாமல் துறை சார்ந்த தொழில்களோடு இடையே தனது இலக்கிய ஆர்வத்தின் காரணமாக இலக்கியச் செயற்பாடுகளில் அவ்வப்போது ஈடுபட்டு வரும் ஓர் இலக்கியவாதி மைதிலி தயாபரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மரபுக் கவிதை, புதுக் கவிதை, நாவல், ஆய்வு என பல்முக இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர் வாழும் காலம் யாவிலும், சொந்தங்கள் வாழ்த்தி என்ற இரு நாவல்களை 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி ஒரே நாளில் வெளியிட்டதோடு பின்னர் விஞ்சிடுமோ விஞ்ஞானம் என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கின்றார். அதேபோன்று 2015 ஆம் ஆண்டு அநாதை எனப்படுவோன் என்ற நாவலையும் சீதைக்கோர் ராமன், தவறுகள் தொடர்கின்றன ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார்.

இவர் பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களின் இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி பல பரிசில்களையும்  சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு கலாசார திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கையெழுத்துப் பிரதிப் போட்டியில் என் செல்வ மகளே என்ற நாவலுக்கான பரிசையும் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதழின் உள்ளே அஸாத் எம். ஹனீபாவின் பக்கவாத தேசம், பதுளை பாஹிராவின் நிஜங்களைத் தொலைத்தல், மாளிகா அஸ்ஹரின் வேகா வெயில், வெலிப்பன்னை அத்தாஸின் கூலிகள்,  பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரியின் தேர்வுகள், எஸ்.ஆர். பாலசந்திரனின் ஒப்பற்ற அழகி, ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் தொலைந்த நிம்மதி, வில்லூரானின் அச்சம் தவிர், கவிதாயினி சஹீகாவின் மழைநாள், செதுக்குகிறேன் ஆகிய இரண்டு கவிதைகள் போன்றவை இந்த இதழில் இடம்பிடித்துள்ளன. அத்துடன் சூசை எட்வேர்டின் எது சரி?, கினியம இக்ராம் தாஹாவின் காலம் மாறிவிட்ட போதிலும் என்ற இரண்டு சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன.

கவிஞர் ஏ. இக்பாலின் 20 ஆவது இலக்கிய அலசலில் சரித்திர விரிவுரையாளர் முஹம்மது சமீம் அவர்களைப் பற்றிய பல பிரயோசனமுள்ள தகவல்களைத் தந்திருக்கின்றார். மிகவும் அருமையான இந்தக் கட்டுரை மூலம் முஹம்மது சமீம் அவர்களது இலக்கிய ஈடுபாடுகளினால் இலக்கிய உலகுக்குக் கிடைத்துள்ள நன்மைகளைப் பற்றியும், கவிஞர் அவர் பால் கொண்டிருந்த பற்றுதல் பற்றியும் தகவல்களை மிகத் தெளிவாகவும், விபரமாகவும் தந்திருக்கின்றார்.

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா சமூக ஊடகங்களைப் பற்றி சிறப்பானதொரு கட்டுரையைத் தந்திருக்கின்றார். இக்கட்டுரையின் வாயிலாக சமூக ஊடகங்கள் என்றால் என்ன? அவை எவ்வகையின? அவற்றின் செயல்முறைத் தொழிற்பாகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? போன்ற விபரங்கள், சூத்திரங்கள் மூலம் தெளிவாக விளக்கியிருக்கின்றார்.

சூசை எட்வேர்டின் எது சரி? என்ற சிறுகதை தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் காணப்படும் சமூகப் பண்பாடுகளை விளக்கி நிற்கின்றது. இரண்டு சமூகங்களுக்கும் இடையில் காணப்படும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களின் இருபக்க நியாயங்களை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

கினியம இக்ராம் தாஹாவின் காலம் மாறிவிட்ட போதிலும் என்ற சிறுகதை மனிதன் இன்னும் மாறாமல் மூட நம்பிக்கையிலேயே மூழ்கியிருக்கின்றான். திருந்தாத சமூகமும், திருத்த முடியாத சமூகமும் இருக்கும் வரை மூட நம்பிக்கைகளும், முட்டாள் தனங்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதோடு எத்தனையோ குமரிப் பெண்களின் வாழ்க்கை வரன் இன்றி வரண்டு போய்விடுகின்றது என்பதையும் தெளிவு படுத்துகின்றது.

மருதூர் ஜமால்தீனின் போட்டியால் மலர்ந்த உறவு என்ற உருவகக்கதை வித்தியாசமான கோணத்தில் நோக்கப்பட்டிருக்கின்றது. ஆமையும் முயலும் என்ற கதை பல்லாண்டு காலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் ஒரு சாதாரண கதைதான். முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் கதை. ஆனால் இந்தக் கதையை ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் தந்திருக்கின்றார். வித்தியாசமான கதை, வித்தியாசமான முடிவு.

எழுத்தாளர் அறிமுகத்தில் வெலிமடையைச் சேர்ந்த எம்.எப். சஹீகா பற்றிய குறிப்புகளும் அவரது இரு கவிதைகளும் தரப்பட்டிருக்கின்றன. தாய் நிலம் என்ற நூல் பற்றிய மதிப்புரையை நிலாக்குயில் எழுதியிருக்கின்றார். ஆ. முல்லை திவ்யன் என்ற இளம் எழுத்தாளரால் எழுதப்பட்ட இச்சிறுகதை நூல் பற்றிய ஆய்வு மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நூலகப் பூங்காவில் பதினான்கு நூல்களைப் பற்றிய விபரங்களையும் பூங்காவனம் ஏந்தி வந்திருக்கின்றது. அத்தோடு வாசகர் கடிதமும் வழமை போல இடம்பெற்றிருக்கின்றது. மொத்தத்தில் சகல விடயங்களும் உள்ளடங்கியதாக வெளிவந்திருக்கும் பூங்காவனம் இதழ் வாசகரை திருப்திப்படுத்திவிடும் என்பதில் ஐயம் இல்லை!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் 24 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்

பூங்காவனம் 24 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்


கலாபூஷணம் மாவனல்லை எம்.எம். மன்ஸூர்


பூங்காவனம் 24 ஆவது இதழ் வழமை போன்று அழகாகவும், நேர்த்தியாகவும் வெளிவந்துள்ளது. ஆசிரியர் தன் தலையங்கத்தில் கவிதை தினத்;தை வாசகர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டு உள்ளே என்னென்ன தலைப்புக்களில் எத்தகைய விடயங்கள் இடம்பிடித்திருக்கின்றன என்பதை அறியும் ஆவலைத் தூண்டியிருக்கின்றார்.

மார்ச் மாதம் 21 ஆம் திகதி உலக கவிதைத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனால் கவிதையின் பண்புகள் பற்றியும், அதன் பரிணாம வளர்ச்சியின் இன்றைய நிலை எப்படியிருக்கின்றது என்பதைப் பற்றியும் கருத்துக்கள் ஆசிரியர் தலையங்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கவிதை வெறும் காதலுக்காகவும் சுவாரஷ்யத்துக்காகவும் கையாளப்படாமல் சமூக எழுச்சிக்காகவும் சிந்தனை மலர்ச்சிக்காகவும் எழுதப்பட வேண்டும் என்பது ஆசிரியர் தலையங்கத்தில் ஆணித்தரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய பெரும்பாலான கவிதைகள் காதலை மையப்படுத்தியே எழுதப்படுகின்றன. காதல் என்பது இளம் வயதில் ஏற்படும் ஒரு உணர்வு. இது இளம் வயதில் தவிர்க்க முடியாததாயினும் வயோதிபத்தில் நிலைக்கும் காதலானது உணர்வுகள் நிரம்பியதாகக் காணப்படுகின்றது.

திருமதி. செல்வி திருச்சந்திரனை நேர்காணல் செய்திருக்கும் பிரதம ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் பல தகவல்களை அதிதியிடமிருந்து வாசகர்களுக்கு அறியத் தந்துள்ளார். திருமதி. செல்வி திருச்சந்திரன், குமாரி ஜெயவர்தனவின் வொய்ஸ் ஒப் வுமன் என்ற ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியரானதோடு அதன் தமிழ் சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தார். யாழ்ப்பாணத்தில் பிறந்து மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்று பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று தந்தையின் ஆதரவில் முற்போக்கு இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு பின் எயார் லைன்ஸில் உயர் பதவியில் அமர்ந்து சேவையாற்றியதன் பின்னர் மேற்குறிப்பிட்ட பெண்கள் குரல் சஞ்சிகையில் சேர்ந்து கொண்டார். தற்போது பெண்ணிலைவாதியாக பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் பணிப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர்களின் விமோசனத்துக்காகவும் பாடுபட்டு உழைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில் பல்வேறு பணிகளும் சேவைகளும் என்ற வகையில் பெண்களுக்கு அறிவூட்டல், சாதி நிலையிலும் வர்த்தக நிலையிலும் தாழ்ந்த பெண்கள், அகதிகள், போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு துறைசார்ந்த பயிற்சிகளையும் வலுவூட்டல்களையும் மேற்கொண்டு பெண்களின் உயர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். இலக்கிய செயற்பாடுகளைவிட, இவர் இவற்றில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார்.

குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பன்னிரண்டு பெண்களை நல்வழிப்படுத்தி அவர்களை நாட்டின் நற்பிரஜைகளாக மாற்றி அவர்களுக்கு நியாயமான தொழில்களையும் பெற்றுக்கொடுத்த பெருமை இவரையே சாரும். சமூகவியல், மானுடவியல் என்ற கற்கை நெறிகளுக்குள் ஆழ்ந்து அவற்றை வாசித்தலையும் அரசியல் கட்டுரைகளை வாசித்தலையும் தனது வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் மேற்கொண்டு வந்ததால் இலக்கிய ஆர்வம் என்று சொல்லும் அளவுக்கு அதிதீவிரம் அவரிடம் காணப்படவில்லை. எனினும் பெண்ணிலைவாதக் கருத்துக்களைக் கொண்ட இலக்கியங்களை வாசித்து ஆய்வுகள் மேற்கொள்வதும் பெண்களுக்கு எதிராக பழமைசார் இலக்கியங்களுக்கு எதிர்வாதம் செய்வதும் இவரது சிறப்புக்களுள் ஒன்று எனலாம். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மொத்தம்; 14 நூல்களை இவர் எழுதியிருக்கின்றார்.

பூங்காவனத்தில் பதுளை பாஹிராவின் கடலோரக் கவிதைகள், பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரியின் இறுதி இலக்கு, கவிதாயினி சஹீகாவின் தேவதை, சம்மாந்துறை பீ.எம். கியாஸ் அகமட்டின் தாங்கிடாத உள்ளம், ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் மரணம், உ. நிஸாரின் வாழ்க்கை, அட்டாளை நிஸ்ரியின் விடுதலை மீதான பாடல், டாக்டர் நாகூர் ஆரிபின் நட்பு ஆகிய சிறப்பான கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

சூசை எட்வேர்டின் மரியாதை வேண்டும், எஸ். முத்துமீரானின் சுல்தான் காக்கா, எஸ்.ஆர். பாலசந்திரனின் உண்மையின் சொரூபம், புதுக்குடியிருப்பு அலெக்ஸ் பரந்தாமனின் துரோகங்கள் ஆகிய சிறுகதைகளோடு ஏ.ஆர். மாஹிராவின் அகோரம் குறுங்கதையும் பூங்காவனத்தில் இடம்பிடித்திருக்கின்றன.

மரியாதை வேண்டும் என்ற கதை மக்களின் இன்றியமையாத தேவையான வங்கி நடவடிக்கைகளில் நடந்தேறும் யதார்த்தங்களை சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. அப்பாவிகளும், வயோதிபர்களும் படுகின்ற துன்பமும் இக்கதையினூடே நன்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சுல்தான் காக்கா என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து அகதியாக இன்னொரு ஊருக்கு வந்து அங்கு  எல்லோர் மனதையும் கவர்ந்த சுல்தான் காக்கா என்பவரின் கதையாகும்.  தன் மண்ணின் பெருமையைப் பேசிப்பேசி தனக்குள்ளே திருப்தி கண்டவர் அவர். திடீரென ஒருநாள் அவர் மரணித்த பின்பு முழு ஊரும் இவரது மரணக்கிரியைகளில் கலந்துகொள்கிறது. சொந்த மண்ணில் தன் உடல் அடக்கப்பட வேண்டும் என்ற அவரது ஆசை கடைசியில் நிறைவேறவே இல்லை என்ற கதையின் முடிவு வாசகரின் உள்ளத்தைப் பிழிகிறது.

உண்மையின் சொரூபம் என்ற கதை பெண்களின் இயல்புகளையும், அவர்களின் எண்ணவோட்டத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. ஆபரணங்களுக்கு ஆசைப்படாத பெண்கள் இல்லை. இரவல் நகைகளைப் பெற்று அதன் பின் படுகின்ற பாட்டை இக்கதை நன்கு தெளிவுபடுத்தியுள்ளது.

என்ன நடந்தது, ஏது நடந்தது  என்று தெரியாமல் தாலி கட்டிய கணவன் இன்னொருத்தியுடன் வாழ்வதை எந்தப் பெண்ணாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அத்தகையதொரு வேதனையையும் வலியையும் உணர்த்தும் கதையாக துரோகங்கள் என்ற கதை அமைந்திருக்கின்றது.

சாரதியின் கையில்தான் பயணிகளின் உயிர் தங்கியிருக்கின்றது. கவனக் குறைவாக வாகனம் செலுத்தினால் இறுதியில் விபத்து நடந்துவிட ஏதுவான காரணியாகின்றது. அத்தகைய ஒரு விபத்து நல்லாசிரியர் ஒருவருடைய உயிரையும் குடித்துவிட்ட உண்மைச் சம்பவத்தை விளக்குகிறது அகோரம் என்ற குறுங்கதை.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசலில் கவிதை பற்றிய விளக்கங்களும்,  கவிதை இதழ்கள் பற்றிய விளக்கங்களும் இதழின் ஆசிரியர் பெயர்களோடு தரப்பட்டிருக்கின்றது. அதேவேளை வெலிப்பண்ணை அத்தாஸ், ஈழமேகம் எம்.ஐ.எல். பக்கீர்தம்பி (1923 – 1985) பற்றி தனது அனுபவங்களையும் பூங்காவனத்தில் பதிவு செய்துள்ளார்.

பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்களும், பதினாறு நூல்கள் பற்றிய குறிப்புக்களும் பூங்காவனம் இதழ் 24 இல் காணப்படுகின்றது. இதில் எனது பட்டி பற்றிய நூலின் குறிப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றமை எனக்கு மகிழ்வைத் தருகின்றது. பூங்காவனம் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனத்தின் 23 ஆவது இதழ் மீதான பார்வை

பூங்காவனத்தின் 23 ஆவது இதழ் மீதான பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர் - மாவனல்லை.                                                                                                                                                                          

பூங்காவனத்தின் 23 ஆவது இதழ் வழமையான அம்சங்களுடன் நேர்த்தியான அட்டை, படைப்பாளி திருமதி. லறீனா அப்துல் ஹக்கின் படத்தை தாங்கி வெளிவந்திருக்கிறது. வாசகரை ஒரு நிமிடம் நிற்கச் செய்து நல்ல பல செய்திகளைத் தந்து இதழின் உள்ளே நுழையச் செய்யும் ஆசிரியரின் கருத்து அழகானது. இலங்கை வருவாயில் பெரும் பகுதியை ஈட்டித் தரும் தேயிலை, தோட்ட மக்களின் அவல நிலை பற்றி நினைவு படுத்தியிருக்கின்றது ஆசிரியர் தலையங்கம். இலங்கையில் குறைந்த வருமானத்தைப் பெறும் மிகவும் கஷ்டமான வாழ்க்கை நடத்தும் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற கருத்தை ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கின்றார். இது டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச தேயிலை தின நினைவுச் செய்தியாக எடுத்து நோக்கத்தக்கது.

அட்டைப் படத்தை அலங்கரிக்கும் திருமதி லரீனா அப்துல் ஹக் பிரபல சிங்களப்பட இசையமைப்பாளர் திரு எம்.எம்.ஏ. ஹக் - பௌசுல் இனாயா தம்பதியரின் புதல்வியாவார். கலையும் இலக்கியமும் கைவந்த குடும்பத்தில் மாத்தளையில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று மொழிபெயர்ப்புக் கற்கைகளில் நான்கு வருடங்களாகப் பணியாற்றியவர். தற்போது சிங்களத் துறையில் வருகை நிலை விரிவுரையாளராகப் பணிபுரியும் இவர், மும்மொழிப் புலமை பெற்றுள்ளார். அக்காலத்தில் மாத்தளை பர்வீன் என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் தொடர்களை எழுதி வந்தவர் இவரது தாயார் பௌசுல் இனாயா. தாயின் வழியில் தனது இலக்கியப் பயணத்தையும் இவர் அமைத்துக் கொண்டுள்ளார். தந்தை எம்.எம்.ஏ. ஹக் அவர்கள் சுஜீவா, சுனேத்திரா, சூகிரி கெல்ல, கீதா, ஒபய் மமய் போன்ற பிரபல சிங்களப் படங்களுக்கு இசையமைத்த பிரபல சிங்களப்பட இசையமைப்பாளராக மாத்திரமன்றி பயிற்சி பெற்ற ஒரு ஆங்கில ஆசிரியரும் அதிபரும் ஆவார். இவர் இசையமைத்து பாடகர் எச்.ஆர். ஜோதிபால பாடிய ''சந்தன அல்லென் நாலா...'' என்ற பாடல் விருது பெற்ற பாடலாகும்.

திருமதி. லறீனா அப்துல் ஹக் அவர்கள் எருமை மாடும் துளசிச் செடியும், வீசுக புயலே, தமிழ் மொழியும் இலக்கியமும் சில சிந்தனைகள், ஒரு தீப்பிழம்பும் சில கரும்புகளும், செ. கணேசலிங்களின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள் ஒரு நோக்கு, மௌனத்தின் ஓசைகள், வார்த்தைகளின் வலி தெரியாமல், பொருள் வெளி, நீட்சி பெறும் சொற்கள் ஆகிய தொகுதிகளையும், சுயமி எனும் பெயரில் மெல்லிசைப் பாடல் இறுவட்டு ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றார். மேலும் சிங்களத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்களத்துக்கும் மொழிபெயர்த்து அசல்வெசி அப்பி என்ற சிறுகதைத் தொகுதிக்காக ஐந்து சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்திருக்கிறார். ஆய்வு, சிறுகதை, கவிதை, கட்டுரை, பாடல், சிறுவர் இலக்கியம், நாடகம் போன்ற துறைகளில் பல பட்டங்களும், பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.

பதுளை பாஹிராவின் மனச்சாட்சி, ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பரிதாப நிலை, பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரியின் பெருமைகொள், புத்தளம் நுஸ்ரி ரஹ்மதுல்லாஹ்வின் மௌனத்தின் சபதம், மருதூர் ஜமால்தீனின் உயிரை நோட்டமிடு, மொரட்டுவ கா. தவபாலனின் பரம ரகசியம், கெக்கிராவ சாஜஹானின் தாய்க்கு ஒரு மடல் ஆகிய கவிதைகள் பூங்காவனத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன் எஸ்.ஆர். பாலசத்திரன், சூசை எட்வேட், கிண்ணியா எம்.எம். அலி, ஆகியோரின் சிறுகதைகளும் எஸ். முத்துமீரானின் உருவகக் கதையும் இந்த இதழை அலங்கரித்துள்ளன.

காதலை உள்ளத்தில் பூட்டி வைத்திருக்கக் கூடாது. சந்தர்ப்பம் வரும்போது சொல்லிவிட வேண்டும் என்ற உண்மையை சொல்லியிருக்கிறது எஸ்.ஆர் பாலசந்திரனின் உறங்கும் உண்மைகள் என்ற கதை. அதேபோன்று சூசை எட்வேட்டின் இவன் நல்ல சேவகன் என்ற சிறுகதை ஐயறிவு ஜீவனான நாயின் பக்குவத்தை எடுத்துக்காட்டுகின்றது. கிண்ணியா எம்.எம். அலி அக்பரின் மறக்க முடியாதவர்கள் குறுங்கதையும், எஸ். முத்துமீரானின் ஈசான் சிரிக்கிறான் என்ற உருவகக் கதையும் இடம்பெற்றுள்ளன.
இலக்கிய அனுபவ அலசலில் கவிஞர் ஏ. இக்பால், பேராசிரியர் க. கைலாசபதி வானொலி தமிழ் நிகழ்ச்சி ஒன்றுக்காக வழங்கிய பேட்டிக்கான கேள்வியையும் பதிலையும் தந்திருக்கின்றார். தலைப்பு அறிஞர் சித்தி லெப்பை பற்றியது.  

நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் தனது கட்டுரையில் மறைந்த இந்திய விஞ்ஞானி குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களைத் தந்திருக்கின்றார். அப்துல் கலாமின் மரணம், அவர் பெற்ற விருதுகள், பெற்ற பட்டங்கள், எழுதிய நூல்கள், மறைவின் பின்னரான நிகழ்வுகள், அவர் விட்டுச் சென்ற சொத்துக்கள் என பலதரப்பட்ட தகவல்களை பல தலைப்புகளின் கீழ் முக்கியமான நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக நிரல்படுத்தியிருக்கின்றார்.

மற்றும் பூங்காவனம் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள், 12 நூல்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளோடு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் கா. தவபாவன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நூல் அறிமுக விழாவில் பூங்காவனம் 22 ஆவது இதழ் அறிமுகப்பட்டுத்தப்பட்ட செய்தியும் காரணப்படுகின்றது. மொத்தத்தில் ஏனைய பூங்காவனம் இதழ்களைப் போலவே இவ்விதழும் சிறப்புற்று விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்
தொடர்புகளுக்கு - 0775009222                                                                                                       மின்னஞ்சல் - poetrimza@gmail.com

பூங்காவனம் 22 ஆவது இதழ் மீது ஒரு பார்வை

பூங்காவனம் 22 ஆவது இதழ் மீது ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்

பூங்காவனத்தின் 22 ஆவது இதழ் சுற்றுலாத் தினத்தை நினைவுபடுத்துவதோடு ஆசிரியரின் கருத்துக்களுடன் திறந்து கொள்கிறது. 1970 ஆம் ஆண்டு ஐ.நா. சபை செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதியை சுற்றுலா தினமாகப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து வருடாந்தம் அத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பாரிய வெளிநாட்டுச் செலாவணியை ஒவ்வொரு நாட்டுக்கும் ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை மூலம் மனம் களிப்படைந்து உடல் புத்துயிர் பெறுவது போலவே ஒவ்வொரு இடங்களையும் சுற்றிப் பார்வையிடும் போது அப்பகுதியின் பழக்க வழக்கங்கள், சம்பிரதாய நடைமுறைகளை அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல பாடசாலை மாணவர்களின் சுற்றுலாவின் மூலம் மாணவர்களுக்குத் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்ள முடிகிறது என்ற கருத்தினை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். அதேபோல ''சிரமங்கள் உங்கள் வாழ்வை அழிக்க வருவதில்லை. உங்கள் சக்தியைப் பரிசோதிக்கவே வருகின்றன. அந்தச் சிரமங்கள் உங்களை நெருங்க சிரமப்படும் அளவுக்கு உழையுங்கள்'' என்ற மறைந்த விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாமின் கூற்றினை எடுத்துக் காட்டி நமக்குக் கிடைத்திருக்கும் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படியும் அறிவுரை பகன்றுள்ளார்.

வழமைபோன்று பூங்காவினுள்ளே நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், உருவகக் கதைகள், கட்டுரைகள் என்பவற்றோடு, நூல் மதிப்புரை, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

கா. தவபாலன், சூசை எட்வேட், பதுளை பாஹிரா, உ. நிசார், வெலிப்பண்ணை அத்தாஸ், குறிஞ்சி நிலா, ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, மருதூர் ஜமால்தீன், பூவெலிகட சப்ரி எம். ஷாஃபி ஆகியோரது கவிதைகளும், சஞ்சிகையில் இடம்பெற்றிருக்கக் கூடிய இரண்டு சிறுகதைகளையும் கினியம இக்ராம் தாஹாவும், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் எழுதியுள்ளார்கள்.

திருமதி சுகிலா ஞானராசாவின் முன்னட்டைப் படத்தைத் தாங்கி வந்துள்ள இந்த இதழில் அவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான இவர், ''சின்னச் சிட்டுக் குருவி'' என்ற சிறுவர் இலக்கிய நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த நூல் கல்வி அமைச்சின் நூலக அபிவிருத்தி சபையினால் 2010 ஆம் ஆண்டு சான்றிதழுக்கு உரியதாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இவரது கணவர் ஞானராசா சிறந்ததொரு எழுத்தாளரும், கவிஞருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி சுகிலாவின் எழுத்துப் பணிக்கு கணவரின் ஒத்தாசை எப்பொழுதும் கிடைத்தே வந்திருக்கிறது. பட்டதாரி ஆசிரியையான இவருக்கு கடமை நேரம் போக ஏனைய நேரத்தை வாசிப்பிலும் எழுதுவதிலும் செலவிடுவதாகச் சொல்லுகிறார்.

அத்துடன் இச்சஞ்சிகையில் கா. தவபாலனுடைய நேர்காணலொன்றையும் காண முடிகிறது. திரு. கா. தவபாலன் 2009 ஆம் ஆண்டு ஞானம் சஞ்சிகையில் எழுதிய சிறுகதையின் மூலமாகவே எழுத்துலகை எட்டிப் பார்க்கிறார். இவர் பூங்காவனம், ஜீவநதி, தாயக ஒலி, மல்லிகை, நீங்களும் எழுதலாம், சுவைத்திரள், செங்கதிர் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வருகின்றார். கா. தவபாலன் அரசியல் விஞ்ஞானப் பட்டதாரியாக இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.

இதழில் இடம்பெற்றிருக்கும் இரண்டு சிறகதைகளையும் கினியம இக்ராம் தாஹாவும், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் தந்திருக்கிறார்கள். கினியம இக்ராம் ''தீர்வு'' என்ற தனது சிறுகதை மூலமாக கஷ்டத்துக்காக வெளிநாடு செல்லும் சில இளம் பெண்கள் பொய்த் தகவல்களைக் கொடுத்து வயதையும், பெயரையும் மாற்றி வெளிநாட்டுக் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர். இப்படியாகப் பெறப்பட்ட கடவுச் சீட்டின் மூலமாக வெளிநாடு சென்று கடைசியில் மரண தண்டனை அளிக்கப்பட்ட ரிஸானா நபீக் போன்றவர்கள் உருவாகாமல் இருப்பதற்காக வெளிநாட்டு முகவர் நிலையங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், வசதி குறைந்தவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

''கிளை இழந்த விருட்சங்கள்'' என்ற ரிஸ்னாவின் சிறுகதை உறவுகள் இருந்தும் இறுதியில் ஒருவருமற்ற அநாதையாக ஆகிப்போன ஒரு தாயின் வலியைக் கூறி நிற்கிறது. தான் வளர்த்த பிள்ளை தனது மனைவியின் பேச்சுக்களை நம்பி ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தது பெற்ற தாய்க்கு பொறுக்க முடியாத இதய வலியை ஏற்படுத்தி வைக்கிறது. பெற்றோர்களை இறுதிக் காலத்தில் நல்லபடியாக காப்பாற்றுவதுதான் ஒவ்வொரு பிள்ளையினதும் கடமையாகும். என்றாலும் இன்றைய காலத்தில் தாயையும் தகப்பனையும் மதிக்காத பிள்ளைகளைத்தான் இன்றைய சமூகத்தில் காண முடிகிறது.

மேலும் எஸ்.ஆர். பாலசந்திரனின் குறுங்கதைகள் இரண்டு இடம்பெற்றிருக்கிறது. ''பாவபலன்'' என்ற குறுங்கதை ஒருவருக்குச் செய்யும் கெடுதியானது முடிவில் தன்னையே வந்து தாக்கும் என்பதை விளக்குகிறது. ''எதிர்பாரரதது'' என்ற சிறுகதை வேலியே பயிரை மேய்வதைப் போல குற்றம் செய்பவர்கள் பொது மக்களாகவே அல்லாமல் பொலீஸ் உத்தியோகத்தரே குற்றமிழைத்து கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் நிலையை எடுத்துக் காட்டகிறது. குற்றங்களை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சட்டத்தின் பிடியில் சிக்கியதன்பின்னால் எல்லோரும் ஒரே சமன் என்பதைப் போல கந்தசாமி ஐயாவும் ஏனைய குற்றவாளிகளுடன் ஒருவராக கம்பிக் கூட்டுக்குள் காணப்பட்டார். காரணம் அவர் வேலைக்காரனை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இலக்கிய அனுபவ அலசல் அம்சத்தில் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தன்னைக் கவர்ந்தவர்கள் பட்டியலில் பாடகர் நாகூர் ஹனீபா, எழுத்தாளர் ஜெயகாந்தன், ஒளிபரப்பாளர் இஸட்.எல்.எம். முஹம்மத் என்ற மூன்று துறைகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்கள் பற்றி எழுத எண்ணி முதலில் பாடகர் நாகூர் ஈ.எம். ஹனீபா பற்றிய சில குறிப்புக்களைத் தந்திருக்கிறார். தனது மாணாக்கருக்கு ஒரு துறையைப் பற்றி விளக்குவதற்காக நாகூர் ஈ.எம். ஹனீபாவைப் பற்றிய தலைப்பைக் கொடுத்திருக்கிறார்.

நிலாக்குயில் மதிப்பிட்டுள்ள நூல் மதிப்பீட்டில் கிழக்கிலங்கை எழுத்தாளரான ஜெனீரா கைருல் அமானின் ''மழலையர் மாருதம்'' நூலைப் பற்றிய கண்ணோட்டத்தைச் செலுத்தியிருக்கிறார். ஜெனீரா கைருல் அமான் ஓர் ஆசிரியராக இருப்பதால் பாடசாலைப் பிள்ளைகளுக்கு ஏற்ற விதத்தில் சிறுவர் இலக்கியம் படைத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிறுவர் பாடல், சின்னக் குயில் பாட்டு, மிதுஹாவின் நந்தவனம், கட்டுரை எழுதுவோம், முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் என்பன பாடசாலைப் பிள்ளைகளுக்காகவே படைக்கப்பட்ட சிறுவர் நூல்கள் என இனங்கான முடிகிறது. இவர் பிரியமான சிநேகிதி என்ற சிறுகதை நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

எஸ். முத்துமீரானின் உருவகக் கதைகள் மூலம் எது எது நடக்க வேண்டுமோ அது அது அந்ந அந்த நேரத்தில் அணுபிசகாமல் நடக்கும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார். படைத்த இறைவனுக்கும் படைக்கப்பட்ட உயிருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் நுளம்பின் சீவன் ஆண்டவன் சந்நிதானத்தில் நிற்கிறது.

இதழில் உ. நிசார் அவர்களின் பெண் என்ற கவிதை பெண்ணின் பெருமையைச் சொல்லுவதாக உள்ளது. அதே போன்று மக்களின் ஏக்கம் தீரவில்லை, வீதிகளில் விசர் நாய்கள், கருத்துச் சுரங்கம், நாடோடியின் நாட்குறிப்புக்கள், மரணவலி, நிரந்தரம், அல்லாஹ்வை நினைத்து, சிந்தித்து உணர் போன்ற தலைப்பில் அமைந்த கவிதைகளுடன் மறைந்த எஸ்.எச்.எம். ஜெமீல் பற்றிய இரங்கல் கவிதையை வெலிப்பண்ணை அத்தாஸ் அவர்களும் எழுதியுள்ளார்கள். அத்துடன் குறும்பாக்கள் சிலவற்றை மருதூர் ஜமால்தீன் எழுதியுள்ளார்.

இவைதவிர பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்களும், நூலகப் பூங்காவில் பதினேழு நூல்களுக்கான விபரக் குறிப்புக்களும் காணப்படுகிறது. அத்தோடு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ரிம்ஸா முஹம்மதின் அறுவடைகள் நூல் வெளியீட்டு விழா சம்பந்தமான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. குறையேதுமில்லாத நிறைவான ஓர் இதழ். ஆசிரியரின் இலக்கியப் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் - poetrimza@gmail.com
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் 21 ஆவது இதழ் பற்றிய ஒரு கணிப்பீடு

பூங்காவனம் 21 ஆவது இதழ் பற்றிய ஒரு கணிப்பீடு

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை

பூங்காவனம் தொடங்கிய காலம் முதல் இன்று 21 ஆவது இதழ் வெளிவந்தது வரை கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்திருக்கிறார் ஆசிரியர். பல தடைகளுக்கு மத்தியில் பலரது இகழ்வுகளுக்கு உட்பட்டு மனம் சோர்ந்த நிலையிலும் தைரியம் என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு விடாப்பிடியாக முயற்சி செய்ததால் 21 ஆவது இதழை அடைய முடிந்தது என்பதை ஆசிரியர் குறிப்பிட்டு இருப்பதானது தன்னம்பிக்கை எப்போதும் தோற்றதில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. தனது ஆசிரியர் தலையங்கத்தில் மேற்படி விடயங்களுடன் அன்னையர் தினத்தையும் நினைவுபடுத்தி இருப்பது மிக்க மகிழ்ச்சியானது.

பூங்காவனத்தின் உள்ளே படைப்பாளி திருமதி. ஜெனீரா ஹைருல் அமானைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். அத்தோடு ஒன்பது கவிதைகள், மூன்று சிறுகதைகள், நான்கு கட்டுரைகள், நூல் மதிப்புரை, வாசகர் கடிதம், நூலகப்பூங்கா என்பன இடம்பெற்றுள்ளன.

கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட படைப்பாளி திருமதி ஜெனீரா ஹைருல் அமான் பூங்காவனம் 21 ஆவது இதழின் முன் அட்டையை அலங்கரிக்கிறார். ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஈ.எச்.எம். தௌபீக் - அபீபா உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியான இவர், ஓர் ஆசிரியையாவார். கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று அங்கேயே ஆசிரியையாகவும் கடமையாற்றுகிறார். மூன்று ஆண் பிள்ளைகளுக்கும், ஒரு பெண் பிள்ளைக்கும் தாயான இவர் ஐந்து சகோதர சகோதரியினதும் சிரேஷ்ட சகோதரியாவார். மர்ஹூம் கவிஞர் அண்ணல், கவிஞர் கஹ்ஹார், கவிஞர் கிண்ணியா அமீர் அலி போன்றோர் இவரது குடும்பத்தினராக இருப்பதால் குடும்பப் பின்னணி இவரது எழுத்துலகப் பிரவேசத்துக்குக் காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது. கலாநிதி கே.எம். இக்பால், உபைதுல்லாஹ், அதிபர் அஷ்ரபா நூர்தீன் போன்ற கல்விமான்கள் குடும்பத்தில் பிறந்ததென்றால் சும்மாவா கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும் கவிபாடுமல்லவா?

இவர் சினேகிதி என்ற சிறுகதைத் தொகுதியையும், பாலர் பாடல், சின்னக்குயில் பாட்டு, சிறுவர் கதைகள், சிறுவர் கானங்கள், மழலையர் மாருதம் என்ற வகையில் ஏழு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். சினேகிதி என்ற சிறுகதைத் தொகுதியை விடுத்து ஏனையவை யாவும் சிறுவர் நூல்கள். இவர் தன் பாடத்துடன் தொடர்புடையதாக சிறுவர்களுக்கான நூல்களை எழுதியுள்ளார். இதன் மூலம் சிறுவர்களது கல்விக்கான அதிக பங்களிப்பையும் வழங்கியுள்ளார். இதன் காரணமாக பாடசாலை மட்டத்தில் வருகின்ற போட்டி நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவது இலகுவாக அமைந்து விடுகிறது. போட்டிகளில் பங்குபற்றும் மாணவ - மாணவிகள் பிரதேச, மாவட்ட, மாகாண, ஆகிய இலங்கை ரீதியிலான இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து ஊக்குவித்தும் வருகிறார். அன்பான கணவர் அவரது இலக்கிய முயற்சிகளுக்கு ஒருபோதும் குறுக்கே நின்றது கிடையாது.

சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டவராக இருந்ததனால் அவரது தந்தையின் பங்களிப்பும் அதிகமாக காணப்பட்டதோடு பத்திரிகைகளுக்கு எழுதுமாறு ஊக்கமளித்து வந்ததனால் தினகரன் பத்திரிகைக்கு எனது பொழுதுபோக்கு என்ற தலயங்கத்தில் கட்டுரை அனுப்பி வைத்திருக்கிறார். அது மறுவாரமே பிரசுரமானதால் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக ஏற்பட்டதால் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உந்துதலில் பல கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் ஆக்கங்களை எழுதி வந்திருக்கிறார். சகோதரர் கிண்ணியா அமீர் அலி புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டு வந்து வாசிக்கக் கொடுத்ததோடு, கலைவாதி கலீல், எம்.பி.எம். நிஸ்வான், அருளானந்தம் போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஊக்குவிப்புமே அவர் இன்று ஓர் எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெறக் காரணமாயிருந்திருக்கிறது.

இவர் சிறுவர் இலக்கியத்துக்கு தனது கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். வளர்ந்தோர் இலக்கியத்தைவிட சிறுவர் இலக்கியம் படைப்பது மிகவும் சிரமமானதும், வித்தியாசமானதும் என இவர் குறிப்பிடுகிறார். ஏனெனில் சிறுவர் இலக்கியம் படைப்பவர்கள் தாமும் சிறுவர்களாக மாறி சிறுவர்களது உள்ளத்து உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பவே ஆக்கங்களைப் படைக்கவேண்டும் என்று இவர் சிறுவர் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுகையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதேநேரம் அவர் சிறுவர் இலக்கியம் படைக்கும் காலத்தைவிட இப்பொழுது அதிகளவானவர்கள் சிறுவர் இலக்கியம் படைப்பதில் நாட்டம் கொண்டுள்ளனர். இது சிறுவர் இலக்கியப் போக்கின் வளர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். திறக்கப்படாத சாளரங்கள், விடுதலை வேண்டும், பசிவெக்கை, கருத்துச் சுரங்கம், ஈறலைப் போக்குமா?, மனிதா வாழ்ந்திடு, நாளைய மலையகம், அறிவு, நானும் எனது கவிதைகளும் என்ற தலைப்புகளில் இடம்பெற்றுள்ள கவிதைகளை முறையே பதுளை பாஹிரா, ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, புதுக்குடியிருப்பு அலெக்ஸ் பரந்தாமன், சூசை எட்வேட், சட்டத்தரணி எஸ். முத்தமீரான், மருதூர் ஜமால்தீன், குறிஞ்சி தென்றல், ரோஷான் ஏ. ஜிப்ரி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

கவிஞர் ஏ. இக்பால் தனது இலக்கிய அனுபவ அலசலில் இலக்கிய நண்பர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்களையும், 1957ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான இலக்கிய நண்பர்களின் சந்திப்புக்களையும், இக்காலத்தில் நடத்த இலக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் வாசகர்களுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (லண்டன்) இவ்விதழில் சங்க இலக்கியங்களில் பவணி வரும் விலங்கினங்களைப் பற்றி தனது கட்டுரையில் சிறப்பாக எடுத்து விளக்கியிருக்கிறார். வன விலங்கினங்களும், வீட்டு மிருகங்களும் சங்க இலக்கியங்களில் எவ்வாறு இடம் பிடித்திருக்கின்றன என்பதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அத்தோடு கடல் வாழ் மீனினங்களைப் பற்றியும் எடுத்துக் காட்டியிருக்கிறார். தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் போன்ற சங்க நூல்களில் இடம்பெற்றுள்ள அவற்றின் அன்றைய பாவினைப் பெயர்களையும் தந்திருக்கிறார். அதேவேளை விலங்கினங்கள் தெய்வங்களின் வாகனங்களாக அமைந்தது பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். சிவனுக்கு நந்தி, விநாயகருக்கு எலி, ஐயப்பனுக்கு குதிரை, விஷ்ணுவுக்கு பாம்பு, அக்னிக்கு ஆட்டுக்கடா, வயிரவருக்கு நாய், துர்க்காவுக்கு புலி, பார்வதிக்கு சிங்கம், இந்திரனுக்கு யானை, வாயுபகவானுக்கு மான், இயமனுக்கு எருமை, காளிக்கு கழுதை, வருணனுக்கு ஆமை, சுக்கிரனுக்கு முதலை என ஒவ்வொரு கடவுளருக்கும் மிருகங்கள் வாகனங்களாகப் பயன்பட்டன என்பதைப் பற்றி விளக்கியிருப்பது ஏனைய சமயத்தவர்களும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

நூல் மதிப்பீட்டுப் பக்கத்தில் சட்டத்தரணி எஸ். முத்துமீரானின் அண்ணல் வருவானா? கவிதைத் தொகுதி பற்றிய மதிப்பீட்டை நிலாக்குயில் தந்திருக்கிறார். மூத்த படைப்பாளியான எஸ். முத்துமீரான் அவர்கள் 200க்கும் மேற்பட்ட வானொலி ஆக்கங்களையும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 100க்கும் மேற்பட்ட உருவகக் கதைகளையும், 250க்கும் மேற்பட்ட கவிதைகளையும் 30க்கும் மேற்பட்ட ஆய்வுகளையும் செய்திருக்கும் இந்த பன்முகப் படைப்பாளி பற்றிய விபரங்களையும் இந்த நூல் மதிப்பீட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் அவர்கள் கிராமியப் பாடல்களில் வரும் தாலாட்டுப் பாடல்களின் தனித்துவத்தைப் பற்றி பல தாலாட்டுப் பாடல்களை உதாரணமாக எடுத்து விளக்கியுள்ளார். மனிதனுக்கு வரும் கோபத்தை அடக்கியாள்பவனே உண்மையான மனிதனாவான். அவன் கோபத்தைக் கொண்டாடுபவனாக இருந்தால் முடிவில் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டிவரும் என்பதை விளக்குவதாக பூவெலிகடை சப்ரி எம். சாபி தந்திருக்கும் முனி ஒரு பிணி என்ற ஆக்கம் அமைந்து உள்ளது.

இதழில் இடம்பெற்றுள்ள மூன்று சிறுகதைகளில் கினியம இக்ராம் தாஹா எழுதியுள்ள தர்மம் என்ற சிறுகதை முன்னாளில் இட்ட விதை பின்னாளில் விளைந்து பலன் தருவதை விளக்குகிறது. மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தான் எளிமையை அடைகிறான். ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்களால்தான் தாராளமாக உதவ முடிகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

அதேபோன்று நேர்மை என்ற எஸ்.ஆர். பாலச்சந்திரனின் சிறுகதையானது நேர்மை தவறாது ஒரு தந்தையின் நேர்மை, தன் மகளின் கணவரைக் காப்பாற்றுவதற்காக தான் செய்யாத குற்றம் ஒன்றை, தான் செய்ததாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டு வேண்டுமென்றே தண்டனையை வாங்கிப் பெற்றுக்கொண்ட நல்லகுணத்தைக் காட்டி நினகின்றது. இறுதியாக ஹட்டன் தே. நிரோஷினியின் இயேசுவைக் கண்டேன் என்ற சிறுகதை அடுத்த மதத்தைச் சேர்ந்த படயல் ஒன்றைச் சாப்பிட்டதற்காக இயேசுவிடம் மன்னிப்புக் கேட்க திருத்தந்தையை நாடியபொழுது இயேசு பிறரிடம் அன்பாக இருக்கவும், ஒரே ஆண்டவரை நேசிக்கவும் கூறினாரே தவிர மற்ற மதத்தவரின் மனம் நோகும்படி நடக்கக் கூறவில்லை எனக் கூறி ஜோன் என்ற சிறுவனை ஆசிர்வதிக்கிறார். இதனையே அடுத்த மதத்தவரை மதித்து நடக்கவேண்டும் என்று இஸ்லாமும் வலியுறுத்துகிறது என்பதை இங்கு குறிப்பிடுவது சிறந்தது.

இலங்கை கம்பன் கழகம் 2015ம் ஆண்டு தேசிய ரீதியில் நடத்திய அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற பூங்காவனம் துணை ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா சுகாதார ராஜாங்க அமைச்சர் கௌரவ. எம்.ரீ ஹஸன் அலி அவர்களிடம் இருந்து தங்கப் பதக்கம் பெறும் புகைப்படமும், நவமணி ஆசிரியபீட ஜனாப். எம்.கே.எம். முனாஸ் 2015ம் ஆண்டு மன்னார் துரையம்மா அன்பகம் நடத்திய சான்றோர் கௌரவிப்பு விழாவில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படும் புகைப்படமும் இதழை அலங்கரிக்கின்றன.

மேலும் வழமைபோன்று பூங்காவனம் பற்றிய வாசகர்களது கருத்துக்களும், பன்னிரண்டு நூல்கள், சஞ்சிகைகள் பற்றிய தகவல்களும் அடங்கிய முழுமையான சகல விடயங்களும் உள்ளடக்கிய சஞ்சிகையாக பூங்காவனம் திகழ்கிறது!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி இலக்கம் - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் 20 ஆவது இதழ் மீதான பார்வை

பூங்காவனம் 20 ஆவது இதழ் மீதான பார்வை

மாவனல்லை – எம்.எம். மன்ஸுர்

பூங்காவனத்தின் 20 ஆவது இதழ் பன்முகப்படைப்பாளி திருமதி. தாமரைச் செல்வியின் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது. பூங்காவனத்தின் உள்ளே வாசகர்களை ஒரு நிமிடம் தாமதிக்கச் செய்து அது கடந்து வந்த பாதையைச் சற்று மனதில் நிறுத்திப் பார்த்துவிட்டு மேலே தொடரச் சொல்வது போல ஆசிரியர் குழுவினது கருத்துக்கள் அமைந்துள்ளன.

மலைபோல குவிந்து கிடக்கும் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் அதன் வளர்ச்சிப் போக்கு தங்குதடையின்றி சென்றுகொண்டிருப்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது. கற்களும், முற்களும் நிரம்பிக் கிடந்த இலக்கிய வழி நெடுகிலும் அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு சொல்லம்புகளாலும், மற்றும் பல்வேறு வலிகளாலும் சிறுமைப்படுத்தப்பட்ட போதெல்லாம் முன்வைத்த காலை பின் வைக்காமல் முன்னேறிச் சென்று இன்று இருபதாவது இதழை வெளியிடும் அளவுக்கு துணிவு பெற்றிருக்கிறார்கள். அதற்கு வாசகர்களும், விளம்பரதாரர்களும்தான் காரணம் என்று இருபாலாரையும் பாராட்டியிருக்கிறது ஆசிரியர் குழு.

அட்டைப்பட அதிதி திருமதி. தாமரைச் செல்வி தனது நேர்காணலில் பல தகவல்களையும், கருத்துக்களையும் தந்திருக்கிறார். திருமதி. தாமரைச் செல்வி 1953 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனில் உள்ள குமரபுரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும், பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டுள்ளார். இவரது கணவர் திரு. வரணியூர் சி. கந்தசாமி அவர்களும் ஓர் எழுத்தாளர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரும் 70 களில் வீரகேசரியிலும், பல பத்திரிகைகளிலும் சிறுகதைகளை எழுதி வந்திருக்கிறார்.

திருமதி. தாமரைச் செல்வி அக்காலத்தில் வானொலி ஆக்கங்கள் எழுதியதன் மூலம் எழுத்தாளராக வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டதால் ஓர் எழுத்தாளராக உருவெடுத்திருக்கிறார். அப்போது வீரகேசரி நிருவாகியாக இருந்த கே.எஸ். பாலசந்திரனின் அறிமுகம் கிடைத்ததால் பெறப்பட்ட அறிவுரைகளுக்கு ஏற்ப எழுதத் தொடங்கியதால் பல நாவல்களையும், குறுநாவல்களையும், சிறுகதைகள், கவிதைகள் என பல்முகம் கொண்ட படைப்பாளியாக அவர் எழுத்துப் பணி செய்ய முடிந்தது என்பதை அறிய முடிகிறது.

வடபுலத்தில் நிலவிய யுத்தத்தினால் ஏற்பட்ட வலிகளை இன்னும் மறக்க முடியாத தாமரைச் செல்வி யுத்தத்துக்குப் பின்னரான வாழ்வு பற்றிய உண்மைகளை இன்றைய இலக்கியங்களில் காணமுடிகிறது என்பதையும் தனது கதைகளில் அவற்றைப் பிரதிபலிக்கச் செய்வதாகவும் கூறியிருக்கிறார். இவர் ஏனைய தனது இலக்கியப் பங்களிப்புகளோடு நாவல், சிறுகதை ஆகிய இரு துறைகளையுமே ஈடுபாடாக எடுத்துக் கொண்டுள்ளார். சி. சிவசேகரம், ஏ.ஜே. கணகரட்ணா, எஸ். ராஜசிங்கம், கே.எஸ். சிவகுமாரன் ஆகியோர் இவரது ஐந்து சிறுகதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார். மூன்று சிறுகதைகள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய மொழிபெயர்ப்புக்களின் ஊடாக தமது சமூகத்தின் வலிகளை வாசகர் மத்தியில் கொண்டு செல்ல முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் வரைந்த ஓவியங்கள் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு போன்ற பத்திரிகைகளிலும், சுடர்ஒளி, குங்குமம் ஆகிய சஞ்சிகைகளலும் வெளிவந்திருக்கின்றன. குடும்பப் பொறுப்புகள் அதிகமாகக் காணப்படுவதனால் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளுடன் ஒப்பிடுகையில் தரமாக இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

1977 – 1998 ஆம் ஆண்டு முதல் சுமைகள் விண்ணில் அல்ல, விடிவெள்ளி, தாகம் போன்ற நாவல்களும் வேள்வித்தீ குறுநாவலும், ஒரு மழைக்கால இரவு சிறுகதைத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி சிறுகதைத் தொகுதிகளும், பச்சை வயல் கனவு நாவலும் வெளிவந்திருக்கின்றன. சொந்த நிறுவனமான சுப்ரம் பிரசுராலயம் மூலமாக இரு நூல்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இப்படியான இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வரும் திருமதி. தாமரைச் செல்வி இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார் என்பதை எண்ணும் போது அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதேபோன்று அவரது சிறுகதைகள், நாவல்கள் அநேகம் விருது பெற்றவைகளாகக் காணப்படுகின்றன.

மேலும் பூங்காவனத்தில் பள்ளிக்கூடம், நாளைய தூண்கள், மூட நம்பிக்கைகள், இதுதான் மாபிள் பீச், முத்துச் சரம், புன்னகை முலாம், அழைப்பு, புறப்படு ஆகிய கவிதைகள் காணப்படுகின்றன. இவற்றை பதுளை பாஹிரா, அலெக்ஸ் பரந்தாமன், பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரி, கிண்ணியா ஜெனீரா ஹைருல் அமான், சூசை எட்வேட், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோர் எழுதியுள்ளார். வழமை போன்று கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் இலக்கிய அனுபவ அலசலில் கவிதை பற்றிய சில முக்கியமான குறிப்புகளைத் தந்திருக்கிறார். அதிலும் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் தமிழாசிரியர்களுக்குப் பொருத்தமான அறிவுரைகளைத் தந்திருக்கிறார். அவற்றின் மூலம் சிறந்த கவிஞர்களையும், சிறந்த கவிதைகளையும் உருவாக்கலாம் என்பதற்குப் பல உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்த இதழில் மூன்று சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இக்ராம் தாஹா எழுதியுள்ள திருப்பம் என்ற சிறுகதை காதலித்து திருமணம் முடித்தாலும் காதலியை இறுதிவரையில் கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என்பதனையும், என்னதான் மனக் கஷ்டங்கள் வந்தாலும் வந்தவளை வதை பண்ணக்கூடாது என்பதையும் சிறப்பாக சித்தரிக்கிறது.

பெண் எனும் புயல் என்ற சிறுகதையை எஸ்.ஆர். பாலசந்திரன் எழுதியுள்ளார். இது ஆழம் தெரியாமல் காலைவிடும் காளையர்களுக்கு நல்ல பாடம் புகட்டுகிறது. அதேபோன்று முயற்சி திருவினையானது என்ற சிறுகதை, முயற்சியுள்ளோருக்கு இறைவன் அருள்புரிகிறான் என்பதனையும் அந்த முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வருபவர்களுக்கு தாராள மனமும் இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

பேராதனை கா. தவபாலன் 1995 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய உள்நாட்டு கலவரத்தில் யாழ் குடாநாட்டைவிட்டு வெளியேறிய அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். சங்கத்தமிழ் இலக்கியமும், அதன் வருங்காலமும் எனும் தலைப்பில் லண்டன் நுணாவிலூர் கா. விசயரத்தினம் எழுதியுள்ள கட்டுரையில் முச்சங்க காலத்து இலக்கிய வகைகளைப் பற்றியும், அவை எவ்வெந்தக் காலங்களுக்கு உரியவை என்பதைப் பற்றியும் குறிப்புகளுடன் அவற்றின் அட்டவனையையும் தந்திருக்கிறார். புலம்பெயர்ந்தவர்களின் மூலமாக இலக்கியம் படைக்கப்படுகின்ற பொழுது எதிர்காலத்தில் தமிழ் இனிச்சாகாது என்ற உண்மையையும் அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற தலைப்பில் லெனின் மதிவானம் அவர்கள் இலக்கியப் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் நூலை மதிப்பீடு செய்துள்ளார். மேலும் இதழில் பூங்காவனம் பற்றிய கருத்துக்களும், 16 நூல்களுக்கான அறிமுகக் குறிப்புகளும் காணப்படுகின்றன. ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய அவளுக்குத் தெரியாத ரகசியம் என்ற நாவல் வெளியீட்டின் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களும இடம்பெற்று பூங்காவனம் மேலும் அழகுரக் காணப்படுகிறது!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி இலக்கம் - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்