பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, 29 May 2018

பூங்காவனம் 31 ஆவது இதழ் மீதான பார்வை

பூங்காவனம் 31 ஆவது இதழ் மீதான பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல

கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 31 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. வழமை போல் பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனத்தின் மேற்படி இதழ் திருமதி எஸ். பாயிஸா அலியின் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது.

இதழின் உள்ளே ஆ. முல்லைதிவ்யன், மிகிந்தலை ஏ. பாரிஸ் எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, சந்திரன் விவேகரன், பதுளை பாஹிரா, ஷெல்லிதாசன், மின்ஹா இமாம், எம்.எம்.எம். சப்ரி ஆகியோரது கவிதைகள் பல தலைப்புக்களைத் தாங்கி வெளிவந்திருப்பதைக் காண முடிகிறது. அதேபோன்று திருமதி பாயிஸா அலியுடனான நேர்காணலை நூலாசிரியரும் இதழாசிரியருமான ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார்.
மேலும் இக்ராம் தாஹா, சூசை எட்வேட் என்போர் முறையே நியமனம், அவரின் மனிதாபிமானம் ஆகிய தலைப்புக்களில் சிறுகதைகளைத் தந்திருக்கிறார்கள். எஸ்.ஆர். பாலசந்திரன் ''இராஜ நீதி'' என்ற பெயரில் ஒரு சரித்திரக் கதையைத் தந்திருக்கிறார்.

''உங்களுடன் ஒரு நிமிடம்'' என்ற தலைப்பிலான ஆசிரியர் உரையில் முக்கியமான இரண்டு வாசகர்களான அதாவது கவிஞர் ஒருவரையும், கட்டுரையாளர் எழுத்தாளர் ஒருவரையும் இலக்கிய உலகம் இழந்துவிட்ட சோகச் செய்தி இடம்பெற்றிருக்கிறது. மேற்படி இழக்கப்பட்ட கவிஞர் ஏ. இக்பால், நுணாவிலூர் கா. விசயரத்தினம் ஆகியோரின் இழப்புகள் பற்றிய செய்தி வாசகர்கள் அத்தனை பேரையும் ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பது மாத்திரமல்லாது வாசகர் மனங்களிலே கவலையையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எம்மை விட்டுப் பிரிந்த கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் இதழில் எழுதிவரும் இலக்கிய அனுபவ அலசலில் இம்முறை இலங்கையில் முஸ்லிம் பெண்ணிலை வாதமும் ஆக்க இலக்கியமும் எனும் தலைப்பின் கீழ் பல முக்கிய தகவல்களை அறியத் தருகிறார். முக்கியமாக பெண்ணிலை வாதம் எந்த வகையில் முஸ்லிம் பெண் கவிதையாளர்களின் படைப்புக்களில் பிரதிபலிக்கின்றன என்பதை விளக்கியிருக்கிறார்.

அதேபோன்று எம்மைவிட்டுப் பிரிந்த மற்றொரு இலக்கியவாதியான லண்டன் நுணாவிலூர் கா. விசயரத்தினத்தின் இலக்கியத் தகவல்களில் பண்டைய இலக்கிய நூல்களில் காணப்படும் பெண்கள் அணியும் அணிகலன்கள் பற்றிய விபரங்களை அறிய முடிகிறது. கா. விசயரத்தினம் பூங்காவனம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு தலைப்புக்களில் பண்டைய இலக்கியங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களைத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வணிகத்துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிகையூர் ரேகா எழுதிய ''குருதிக் காடும் குழலிசையும்'' என்ற கவிதை நூல் பற்றிய விமர்சனத்தை நூலாசிரியரும் சஞ்சிகையாசிரியையுமான ரிம்ஸா முஹம்மத் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்.

இன்னும் சுருக்கமாச் சொல்லப் போனால் பூங்காவனத்தில் இடம் பெற்றுவரும் அம்சங்களில் ஒன்பது நூல்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் வாசகர்கள் விரும்பும் அத்தனை இலக்கிய விசயங்களும் இவ்விதழிலும் இடம்பெற்றிருக்கின்றன.

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

No comments:

Post a Comment