பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, 5 July 2017

பூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை

பூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர்

பூங்காவனத்தின் 28 ஆவது இதழ் ஓய்வு பெற்ற அதிபரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்திருக்கிறது.

இதழின் பிரதம ஆசிரியர் தனது ஆசிரியர் கருத்துப் பக்கத்தில் குடிநீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி குடிநீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் நீரின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து நீர்ப்பாவனையை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் முற்று முழுதான நீரின் 03 சதவீதமே மனிதனது பாவனைக்கு உள்ள நீரின் அளவான படியினால் நீரின் பாவனை எந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை எடுத்து விளக்கியிருக்கின்றார். நீர் போட்டிப் பொருளாகவும், வியாபாரப் பொருளாகவும் இன்று மாறியிருப்பதால் சில வேளைகளில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள மென்பானங்களை உட்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என்பதனையும் நினைவுபடுத்தியிருக்கிறார். எனவே வாசகர்களாகிய நாமும் அவரது கருத்துக்களை மனதில் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

இனி பூங்காவனத்தின் உள்ளே வழமைபோன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப்பூங்கா ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

நேர்காணலில் இம்முறை திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அதேபோன்று பதினொரு கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைகளை பதுளை பாஹிரா, ஆ. முல்லைதிவ்யன், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, ஷப்னா செய்னுள் ஆப்தீன், டாக்டர் நாகூர் ஆரீப், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எம்.எம். அலி அக்பர்,  ஆர். சதாத், எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சி தென்றல் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

இந்த இதழில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை வெலிப்பன்னை அத்தாஸ், சூசை எட்வேட், சுமைரா அன்வர், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரும், உருவகக் கதையை எஸ். முத்துமீரானும் எழுதியிருக்கின்றனர். கவிஞர் ஏ. இக்பால், கா. தவபாலன், ஆஷிகா ஆகியோர் கட்டுரைகளைத் தந்திருக்கின்றார்கள். கிச்சிலான் அமதுர் ரஹீமின் நூல் மதிப்பீடும் நூலில் இடம் பிடித்திருக்கிறது.

ஐனுல் மர்ளியா சித்தீக் அவர்கள் இலக்கியப் பங்களிப்புக்களைவிட சமூக சேவைகளிலேயே அதிக ஈடுபாடு கொண்டு தம்மால் இயன்ற பங்களிப்புக்களைச் செய்து இருக்கின்றார். 75 வயதை எட்டியிருக்கும் இவர், கொழும்பு லெயார்ட்ஸ் புரோட்வேயைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவயை வசிப்பிடமாகவும் கொண்டவர். மருதானை கிளிப்டன் பாலிகா வித்தியாலயத்தில் தனது கல்வியை ஆங்கில மொழி மூலம் கற்று இருபதாவது வயதில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றதோடு 1963 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை சுமார் 21 வருட கால சேவையின் பின்னர் அதிபராக பதவி உயர்வு பெற்று கொழும்பு கொம்பனித்தெரு அல் இக்பால் வித்தியாலயத்தில் கடமையாற்றினார். இப்பாடசாலை ஒரு மகளிர் பாடசாலையாக பரிமாற்றம் பெற்றதால் அப்பாடசாலையின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக் கொண்டார். இளம் முஸ்லிம் மாதர் சங்கம், முஸ்லிம் மாதர் கல்வி வட்டம், அகில இலங்கை முஸ்லிம் மாதர் மாநாடு, அகில இலங்கை பெண்கள் நிறுவனம், இலங்கை – பாகிஸ்தான் நற்புறவுச் சங்கம், அகில இலங்கை முஸ்லிம் பெண்கள் யூனியன் போன்ற பல்வேறு பெண்கள் அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்த வண்ணம், சமூக சேவைகளைப் புரிந்துள்ளதோடு தொடர்ந்தும் அச்சங்கங்களினூடாகப் பல்வேறு பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார்.

சமூக சேவைகளில் ஒன்றிப்போன இவரது சேவைகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் ''சாமஸ்ரீ தேசமாண்ய'' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இதுதவிர இவருக்கு ''தேசசக்தி'', ''தேசகீர்த்தி'', ''ஜபருல் அமல்'' (சேவை இரத்தினம்) என்ற பட்டங்களும் கிடைத்துள்ளன. மனித உரிமை, மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் ''சேவை ஜோதி'' என்ற பட்டமும், தடாகம் கலை இலக்கிய வட்டம் உட்பட கல்வி கலாசார பண்பாட்டு அமைப்பினால் ஷஷதன்னம்பிக்கைச் சுடர்|| என்ற பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

குறிப்பாக நூல்கள் எதனையும் இதுவரை எழுதி வெளியிடாத இவர் தனது வாழ்க்கைக் குறிப்பை நூலாகக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதே வேளை சில நூல் வெளியீடுகளின் போது நூல் பிரதிகளைப் பெற்று தனது ஒத்துழைப்பையும் நல்கி வருகின்றார்.

கவிஞர் ஏ. இக்பால் தரும் இலக்கிய அனுபவ அலசல்களில் உமர் கையாம் பாடல்கள் சிலவற்றின் கருத்துரைகளைத் தந்திருக்கின்றார். சிறுகதைகளைப் பொருத்தவரையில் சூசை எட்வேட்என் ஷதகராறு| என்ற கதை பஸ்ஸில் ஆசனப்பதிவு சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு தகராரை விளக்கியிருக்கின்றது. அதேபோன்று ஷவிதியின் வியூகம்| என்ற தலைப்பில் மல்லப்பிட்டி சுமைரா அன்வர் தந்திருக்கும் சிறுகதையானது ஒரு பாடசாலை ஆசிரியையின் அன்றாட அலுவல்களுக்கு மத்தியில் நடைபெறும் போராட்டங்களை எடுத்து விளக்குகிறது.

இன்னும் வெலிப்பன்னை அத்தாஸின் 'சின்னக்கிளி' என்ற சிறுகதை தாய்ப் பாசத்துக்கு அப்பால் இரண்டாவது கணவனாகத் திகழும் வேலுவினால் ஏற்படுத்தப்பட்ட தில்லுமுல்லுகளால் அனாதரவாக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையைச் சொல்லுகிறது. தாய் சரோஜினியின் விளக்கமறியல் இதற்கு விடை கூற வேண்டும்.

ஆண்டவனின் தீர்ப்பு காலம் கடந்தாலும் நல்ல தீர்ப்பாகத்தான் இருக்கும். அகிலாவை தாலியிழந்தவள் என்று ஒருவரும் மணக்க முன்வராமல் ஒதுக்கி வைத்திருந்தனர். என்றாலும் சாஸ்திர சம்பிரதாயங்களை ஒதுக்கிவிட்டு அகிலாவை மணக்க முன்வரும் மனோகரன் கஷ்டப்பட்டு படித்து என்ஜினியர் ஆனவன். குடும்ப நிலை காரணமாக பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்து முன்னுக்கு வந்தவன். அகிலா தாலி கட்டாமலே விதவையாக்கப்பட்டவள் என்றாலும் மனோகரனைவிட இரண்டு வருடங்கள் வயதில் மூத்தவள். வயது ஒன்றும் திருமணத்துக்கு தடையில்லை என்பதை மனோகரன் நிரூபித்துவிட்டான். மகாத்மா காந்தி, கஸ்தூரி பாயைவிட இளையவர். நபியவர்களைவிட கதீஜா அம்மையார் மூத்தவர். இவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள்.

மேலும் இதழில் காலம் சென்ற இலக்கிய இமயம் கலாநிதி முல்லைமணி பற்றிய குறிப்புக்களை கலாபூஷணம் கா. தவபாலனும், பன்முக ஆளுமை கொண்ட ஐ.எஸ். நிஸாம் ஷெரீப் அவர்களின் 'நம்பிக்கையாளர் யார்?' என்ற நூல் பற்றிய பார்வையினை கலாபூஷணம் கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களும், 'தற்கால முஸ்லிம் பெண்களும் இலக்கியப் பங்களிப்பும்' என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையை கொழும்பு ஆஷிகாவும் தந்திருக்கின்றார்கள்.

'பெருமை' என்ற உருவகக் கதையை எஸ். முத்துமீரான் தந்திருப்பதோடு பூங்காவனத்தில் பூத்திருக்கும் பன்னிரண்டு நூல்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் தரப்பட்டிருக்கின்றன.

சகல அம்சங்களும் இடம்பெற்றுள்ள பூங்காவனத்தை ஒவ்வொருவரும் வாங்கி வாசிப்பதன் மூலம் இலக்கிய வாசனையை இனிதே நுகரலாம் எனக்கூறி மென் மேலும் பூங்காவனம் பூத்துக்குலுங்க வாழ்த்துகின்றேன்!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை

பூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனெல்ல.

கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 27 ஆவது இதழ் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அநுராதபுரம் கெகிறாவை இலக்கிய செயற்பாட்டாளர் திருமதி. கெகிறாவை ஸஹானாவின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது.

வழமைபோன்று இதழின் ஆசிரியர் ஒரு நிமிடம் எங்களை எல்லாம் சிந்திக்க வைத்துவிட்டுத்தான் வாசகர்களாகிய எங்களை பூங்காவினுள்ளே அனுமதிப்பார். இவ்விதழில் மனித உரிமை தினமான டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியைக் குறிப்பிட்டு மனித உரிமைகள் பற்றிய தனது சிறு குறிப்புகளைத் தந்திருக்கின்றார்.

வாழ்வாதரத்துக்குத் தேவையான சகலதும் மனிதனது உரிமைகள்தான். இவ்வுரிமைகள் மீறப்படும் போதுதான் மனித அழிவுகளும் உயிரிழப்புகளிலும் சொத்தழிப்புகளும் ஏற்படுகின்றன. உரிமைகளையும் கடமைகளையும் சரிவரப் புரிந்து நடுநிலையுடன் செயற்படும்போதுதான் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற கருத்துப்பட தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

பூங்காவினுள்ளே பதினொரு கவிதைகளும், ஐந்து சிறுகதைகளும், ஒரு நேர்காணல், ஒரு கட்டுரை, இரண்டு நூல் மதிப்பீடுகள், வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என பல்சுவை நிரம்பிய ஆக்கங்கள் காணப்படுகின்றன.

மன்னார் அமுதன், பதுளை பாஹிரா, இல்யாஸ் இம்றாஸ், பீ.ரீ. அஸீஸ், வெலிப்பன்னை அத்தாஸ், ஆ. முல்லைதிவ்யன், மருதூர் ஜமால்தீன், ஹைருர் ரஹ்மான், எம்.எஸ்.எம். சப்ரி, செ.ஜெ. பபியான், ஷப்னா செய்னுல் ஆப்தீன் என்பவர்கள் முறையே நான் கழுதையாகிவிட்டேன், நிறம் மாறாத நிஜங்கள், விதவை, சோகம் நீங்கி சுகம் பெறவே, நிறுவனங்களின் தலைமைத்துவம், நானும் அன்றைய பகலும், சந்தேகம் நீக்கு, பள்ளிக்கூடம், கனவு நனவாகுமோ?, மன்னிப்பானா தண்டிப்பானா?, எமக்கான கூடும் சுதந்திரமும், வலி ஆகிய தலைப்புக்களில் கவிதைகளைத் தந்திருக்கிறார்கள்.

முன் அட்டைப்படத்தில் பிரகாசிக்கும் கெகிறாவ ஸஹானா இலக்கிய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். இவர் ஆங்கில ஆசிரியராக 1991 ஆம் ஆண்டு பதவியேற்றிருக்கிறார். தனது ஆரம்ப கல்வியை கெகிறாவ முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்று, கம்பளை ஸாஹிரா கல்லூரியில் உயர் தரக்கல்வியை பயின்றதன் பின்னர் கல்விச் சேவையில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். தொடர்ந்து இருபது வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றியபின் சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருக்கின்றார்.

ஸஹானாவின் குடும்பம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு குடும்பம் என்பதால் வாசிப்பில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்களாகவே காணப்பட்டனர். இவர் ஒரு தீவிர வாசகியாய் இருப்பதைப் போலவே இவரது சகோதரியான ஸுலைஹாவும் தீவிர வாசகியாகவும் ஓர் ஆங்கில ஆசிரியையாகவும் இருக்கிறார். அக்கா தங்கை இருவரும் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்பதால் ஆங்கில மொழி இலக்கியங்களை தமிழுக்கு கொண்டுவரக்கூடியவர்களாக இருக்கின்றனர். இவர்களது இலக்கியப் பங்களிப்பு இருவரையும் சிறந்த எழுத்தாளர்களாக உருவாக்கியிருக்கிறது.

1989 ஆம் ஆண்டு மல்லிகையில் முதல் ஆக்கம் பிரசுரம் கண்டதற்குப் பிறகு அடுத்த இதழ்களிலும் கவிதைகள் பிரசுரம் கண்டன. இன்று புதுக்கவிதை பிரபலமாக இருப்பதற்குக் காரணம் நெகிழ்ச்சி தன்மையும் வளைந்துகொடுக்கும் பண்பும் சகலருக்கும் கவிதை எழுதலாம் என்ற ஆசையைத் தூண்டிவிடுகிறது என்று இவர் கருத்துத் தெரிவிக்கிறார். அதேபோல இவரது சிறுகதைகள் உணர்வு வெளிப்பாட்டுக் கதைகளாக இருப்பதைக் காண முடிவதற்கு காரணம் தனியாக ஒரு கருப்பொருளை மாத்திரம் வைத்துக்கொண்டு எழுதாமல் சமுதாயத்தில் காணப்படுகின்ற அன்றாடப் பிரச்சினையில் மக்கள் சிக்கிக்கொண்டு படும் பாடுகளை கருப்பொருளாகக்கொண்டு எழுதுவதுதான்.

ஒரு தேவதைக் கனவு, ஊமையின் பாஷை ஆகிய சிறுகதை நூல்களும் இன்றைய வண்ணத்துப்பூச்சி, இருட்தேர் ஆகிய கவிதை நூல்களும், மான சஞ்சாரம் என்ற சுயசரிதை நூலும், சூழ ஓடும் நதி என்ற ஆய்வு நூலும், ஒரு கூடும் இரு முட்டைகளும் குறுநாவல், அன்னையின் மகன் நாவல், முடிவில் தொடங்கும் கதைகள் ஆகிய 09 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இன்று இணையத் தளங்களின் வருகையினால் வாசிப்பு மட்ட நிலை மந்தகதி அடைந்துள்ளது என்ற ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு என்பதை சகலரும் அறிந்தாலும், இவரது கணிப்பீடு அதனை மறுக்கும் வகையில் உள்ளது என்பதை அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. அதாவது, இணையத்தளங்கள் வாசிப்பையும் தகவல் பரிமாற்றத்தையும் வேகமான வளர்ச்சித் திசைக்குத் திருப்பியுள்ளது. ஆழ்ந்த சிந்தனையையும் சுய வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளது. புத்தகங்களைத் தேடித் திரியாமல் விரும்பிய ஒன்றை விரல் நொடிப்பொழுதில் தேடிப் படித்துவிடலாம் என்பது வசதியாக உள்ளது என்றாலும் சில வரையறைகள் பேணப்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பாராட்டப்படும் இளம் கலைஞர், மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது என்பவற்றோடு சிறுகதைக்கான தகவம் பரிசு, அரச சாகித்திய விழா சான்றிதழ் போன்றவற்றையும் தனது இலக்கியப் பங்களிப்புக்காக இவர் பெற்றிருக்கின்றார்.

கவிஞர் ஏ. இக்பால் எழுதிவரும் இலக்கிய அனுபவ அலசலில் கலை இலக்கிய ஈடுபாடு உடையோரும் கலை இலக்கிய ஆய்வு செய்வோரும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் பலவற்றை குறிப்பிட்டுள்ளார். இவை அனைவருக்கும் தேவைப்படும் குறிப்புகளாகவும் வழிகாட்டியாகவும் இருப்பதைக் காண முடிகிறது. தேவையானோர் வாசித்துப் பயன்பெற முடியும் என்பது எனது நம்பிக்கை. சுமைரா அன்வரின் ஊனம் என்ற சிறுகதை ஒரு பெண்ணின் வாழ்க்கை ஊனமான விதத்ததை எடுத்துக் காட்டுகிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய மரணம் வந்து அவளது வாழ்க்கையில் விளையாடியதால் வாழ்வு இருண்டு போகிறது. சூசை எட்வேர்ட்டின் அம்மாவின் வேண்டுதல் எனும் சிறுகதை மரணம் எந்தநேரமும் வரலாம் என்பதால் அதற்கு ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும் என்பதோடு கணவனுக்கு முன்னர் பூவோடும் பொட்டோடும் போய்ச் சேர வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுவதை இக்கதை இயம்பி நிற்கிறது. தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் பாவ பலன் என்ற சிறுகதை முன் செய்த பாவங்கள் பின் விளையும் என்பதையும் அறியாயமாக அபகரித்த சொத்துக்கள் அநியாயமாகவே போய்விடும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. நேர்மைக்கு என்றும் தோல்வியில்லை, நியாயங்கள் வெல்லும் என்பதை எஸ்.ஆர். பாலசந்திரனின் தண்டிக்கப்பட்ட நியாயங்கள் என்ற சிறுகதை நிரூபிக்கின்றது. இக்ராம் தாஹா எழுதியுள்ள புலமைப் பரீட்சை என்பது மாணவர்களுக்கு சுமையாகவும் எதிர்நீச்சலாகவும் சோதனையில் சாதனையாகவும் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

மேலும் ரிம்ஸா முஹம்மத் எழுதிய எரிந்த சிறகுகள் என்ற கவிதைத் தொகுதி பற்றிய நூல் மதிப்பீட்டை பதுளை பாஹிராவும், பூனாகலை நித்தியஜோதியின் வாழ்க்கைச் சோலை என்ற நாவல் பற்றிய நூல் மதிப்பீட்டை ரிம்ஸா முஹம்மதும் தந்திருக்கின்றார்கள்.

இன்னும் பன்னிரண்டு நூல்களின் அறிமுகமும் பூங்காவனம் பற்றிய வாசகர்களின் கருத்துக்களும் இதழில் இடம்பெற்றிருக்கின்றது. மொத்தத்தில் சஞ்சிகையின் முழு வடிவத்தையும் பூங்காவனத்தில் காண முடிகின்றது!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்.