பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Thursday, 15 December 2016

இலக்கிய அனுபவ அலசல்

இலக்கிய அனுபவ அலசல்

கவிஞர். ஏ. இக்பால்


பரீட்சை மண்டபம் ஒன்றில் மேற்பார்வையாளர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் கடமையாற்றுவதற்கு வந்தவர்களில் பேராசரியர் கா. சிவத்தம்பியும், பேராசிரியர் எம்.ஏ. நுஃமானும் நானும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இடைவேளையின்போது இலக்கியம் மட்டுமல்ல பலதையும், பத்தையும் கதைத்துக்கொள்வோம்.

தமிழில் அகராதி வருமுன் நிகண்டுதான் அவ்விடத்தை நிரப்பியது. பெஸ்கி எனும் வீரமா முனிவரின் சதுரகராதிதான் 1732 இல் தொகுக்கப்பட்ட முதல் அகராதி. இந்த அகராதி என்னிடத்தில் உண்டு எனும் சங்கதியை அகராதி பற்றிய கதையின்போது நான் கூறினேன்.

நுஃமான் என்னிடம் ஷஇக்பால் அதை எனக்குத் தாருங்கள். போட்டோ பிரதி எடுத்து பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு கொடுக்க வேண்டும்| எனக்கேட்டார். மறுநாள் நான் அதை எடுத்துச் சென்றேன். அட்டை இல்லை. இடைக்கிடை பூச்சரித்த நிலை. என்றாலும் முழுமையாக இருந்தது. முன்பக்க முகவுரைக்கு மேலே `கார்த்திகேசு' என பேனையால் எழுதியிருந்தது. இதைக்கண்ட சிவத்தம்பியவர்கள் ஷஇது எனது தகப்பனாரின் எழுத்து. இது எங்களுடைய சொத்து| என உரிமை கொண்டாடினார்.

`உங்களுடைய சொத்தாக இருக்கலாம். இப்போது நான் அதனை சொந்தமாக்கியுள்ளேன். உரிமைக்கு வழக்குப் போட வேண்டும்' என்றேன்.

'சரி. இது எப்படிடா கிடைத்தது' எனக்கேட்டார்.

`பேராதனை தமிழ் வித்தியாலயத்தில் கற்பித்துக்கொண்டிருந்த எனக்கு 15.03.1966 இலிருந்து அட்டுலுகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு மாற்றம் கிடைத்தது. அன்று கடமை ஏற்க அங்கே சென்றேன். ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயிருந்த பலா மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து கூட்டமாக ஆசிரியர்கள் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அதிபர் அறைக்குச் சென்று கடமை ஏற்ற கடிதம் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். எதிரில் பத்திரிகைகள், பழைய கழிவு நூல்கள் குப்பையில் கொட்டப்பட்டு, மாணவர்களால் நெருப்பு வைத்து எரிவதைக் கண்டேன். பக்கத்தில் உள்ள பெருந்தடி ஒன்றை எடுத்து எரிந்துகொண்டிருந்த குப்பையைக் கிளறினேன். அட்டையில்லாத இந்தக் கோலத்துடன் இந்த அகராதி வெளிவந்தது. எடுத்துத்தட்டி எனது கைப் பைக்குள் வைத்துக்கொண்டேன். மீண்டும் விரித்துப் பார்த்த போதுதான் சதுரகராதி என பளிச்சிட்டது. இந்தப் பாடசாலையில் ஆரம்பகால அதிபராக இருந்த கார்த்திகேசுவின் நாமம் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் தனது தந்தையார் அங்கு கற்பித்த கதையை பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்கள் கூறினார்.
பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அதைப்பிரித்து போட்டோ பிரதி எடுத்தார். நான் அதை பைண்ட் செய்துகொள்வேன் என வாங்கிக்கொண்டேன்.

சதுரகராதி என்றால் நால்வகைப்பட்ட அகராதி என்று பொருள். பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகை அகராதியின் தொகுப்புத்தான் அவை. தமிழில் ஏராளம் அகராதிகள் வெளிவந்தபோதும் நால்வகைப்பட்ட அகராதி சதுரகராதிக்குப்பின் ஒன்றே ஒன்றுதான் வெளிவந்துள்ளது. ஷஇருபதாம் நூற்றாண்டு தமிழ்ப் பெயரகராதி| என்பது அதன் பெயர். இதன் ஆசிரியர் பி. இராமநாதன். இதன் முதல் பதிப்பு 1909 ஜனவரியில் வந்துள்ளது. மறுபதிப்பு 1991 மார்ச்சில் வெளிவந்தது. இரண்டு பாகங்களாக வெளிவந்த இவ்வகராதி பொருள், தொகை, தொடை, நெடிற்கீழெதுகை என்ற நான்கு வகைகளைக் கொண்டது.

பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தொடர்பு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஏற்பட்டது. பாடநூல் ஆலோசனை சபை, கல்வியியல் சுற்றோட்டம், பரீட்சை நிலைய தொடர்புகள் எனும் கல்விசார்ந்த இணைப்பு நிறைய எங்களிடம் உண்டு. அதுமட்டுமல்ல இலக்கியம் சார்ந்த உறவும் அதிகமுண்டு. அவற்றை அலசும்போது, பல்கலைக்கழக தொடர்புகளுக்கு முன்னுள்ள விஷயங்கள் நிறைய வரும். பின்பு தொடர்ந்து அலசுவோம்.

                                       (இன்னும் வரும்)

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்து உயர் மதியுரைக் கழகத்தின் தமிழ் உப குழுவில் ஒருவனாக 1971 ஏப்ரல் 8ம் திகதியிலிருந்து நானும் நியமிக்கப்பட்டேன். தமிழ் ஆசிரியன் என்பதைவிட இலக்கிய உலகின் செயற்பாடே இதற்குக் காரணம் எனலாம். குறிப்பிட்ட தினத்தில் வெளியீட்டுத் திணைக்களம் சென்றேன். அங்கே பேராசிரியர் கா. சிவத்தம்பி, கலாநிதி எம்.எம். உவைஸ், ஆசிரியக் கலாசாலை அதிபர் ஐ.எல்.எம். மஸ்ஹூர், கல்வியதிகாரிகளான திருமதி. முஹிதீன், எம்.ஐ.எம். ஷரீப் இன்னும் பலர் வீற்றிருந்தனர்.

கல்வி வெளியீட்டுத் திணைக்கள நூலாக்க குழுவிலுள்ள இ. முருகையன், த. கனகரத்தினம், சு. வேலுப்பிள்ளை, எம்.சி. சலீம், க. கந்தசாமி, சபா ஜெயராசா, சண்முகம் சிவலங்கம் ஆகியோருடன் பாட விதான அபிவிருத்தி மத்திய நிலையத்திலிருந்து செ. வேலாயுதம்பிள்ளை, திருமதி. ந. சண்முகநாதன், எம்.எஸ். ஜமால், கா. ஜெயராசா இன்னும் சிலரும் வந்திருந்தனர்.

ஷதமிழ் மலர்| எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் பாடநூலை ஷதமிழ்| என்ற பெயருக்கு மாற்றி புதிய கல்வித் திட்டத்துக்கு அமைய வெளியிடுவதன் நோக்கமே அப்பொழுது நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்தது.

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் தன்னுடைய கருத்தைக் கூறும்போது பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி டிப்ளோமா செய்த பின் கீழ் வகுப்பில் படிப்பிப்பதில்லை. மேலை நாட்டில் இவர்கள் தான் கீழ் வகுப்புக்களுக்கு படிப்பிப்பார்கள். எனவே கீழ் வகுப்புக்களுக்கு கற்பித்த அனுபவமுடையோரைப் பற்றி வினவினார். நான் அந்த அனுபவமுடையவன் என்பதைத் தெரிவித்தேன். ஷஅப்படியானால் இந்த இடத்தில் இக்பாலின் கருத்துக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்| என்றார்.

பாடநூல், பாடங்களின் அமைப்பு, மொழியியல் தொடர்ச்சி என்பன பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அதன்படி பாடநூலை ஆக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டோம். அடுத்த சந்திப்பில் எழுதிவந்த பாடங்களின் தராதரம் பற்றி ஆராய்ந்தோம். பாடங்கள் முழு இலங்கை வாழ் மாணவர்களுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கற்பித்தலில் வெற்றி காண முடியாது. இக்கருத்தில் பேராசிரியரும் நானும் ஒரே கோட்பாட்டில் இருந்தோம். சில பாடங்கள் சரிவராது என்ற நிலைக்கும் ஆளானோம். பாடங்களை அச்சிடுவதற்கு முதல் நானும் பேராசிரியரும் பல இடங்கள் சென்று அப்பாடங்களை வகுப்பில் படிப்பித்துப் பார்த்தோம். அப்போது இடர்கள் புரியும். சரி செய்யவும் முடியும்.

இப்படி கலாசார சம்பந்தமான பாடம் இரண்டில் சந்தேகம் கொண்டு காரசாரமான விவாதம் நடந்தது. முடிவு ஏற்படாத நிலையில் அப்பாடங்களை குக்கிராமம் ஒன்றில் கற்பித்துப் பார்க்க வேண்டும் என்றனர். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அவரது வாகனத்தை எடுத்துக்கொண்டு என்னை அழைத்தார். நானும் அவரும் அவரது வாகனத்திலேயே வெலிகம சென்று வெலிப்பிட்டியை ஊடறுத்து சொரகொட என்ற குக்கிராமம் சென்று அங்குள்ள பாடசாலையில் நானொரு வகுப்பிலும், அவரொரு வகுப்பிலும் கற்பித்துப் பார்த்தோம். சில திருத்தங்களுடன் பாடங்கள் வெற்றியளித்தன. வெற்றிக்களிப்பில் திரும்பி வந்தோம். தற்காலம் தனது சொந்த செலவில் இவ்விதப் பணியை யாரும் செய்யமாட்டார்கள். அவ்விதம் செய்ய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எந்நேரமும் தயாராக இருந்தார்கள். காரணம் இலக்கியக் கிடங்குள் நீச்சலடித்த பெரும் அனுபவம் தான் அது. நானும் அவரும் இவ்விடயங்களில் செலவைப்பற்றிச் சிந்திப்பதேயில்லை.

(இன்னும் வரும்)

1995 களில் கௌரவ லக்ஷ்மன் ஜெயக்கொடி அவர்கள் கலாசார அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் சமய கலாசார அமைச்சின் ஆலோசகராகவும், பதிவாளராகவும் கடமை புரிந்தார். அக்காலம், தேசியக்கல்வி நிறுவனத்தில் தமிழ் பாடநூல் எழுதும் குழுவில் அமர்ந்து நூல் எழுதிக் கொண்டிருந்தேன். எங்களது செயற்பாட்டை மேல்பார்வை செய்வதற்கு பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள்தான் கடமை புரிந்தார். அப்போது நுஃமான் என்னை அழைத்து ஷ1996ல் கலாபூசண விருது கொடுப்பதற்கு ஆட்தெரிவு செய்கிறார்கள். மூத்த இலக்கியவாதிகளுள் நீங்களிருப்பதால் உங்கள் விருப்பத்தைக் கேட்டறியுமாறு என்னிடம் கூறினார்கள். நான் விருப்பத்தைப் பெற்றுத்தருவேன்| எனக் கூறிவிட்டேன். ஷவிருப்பந்தானே!| எனக்கேட்டார். நான் ஷவிருப்பமில்லை| எனக் கூறிவிட்டேன். ஷபின்னேரம் வருவேன் யோசியுங்கள்| என்றார்.

பின்னேரம் வந்தார். விருப்பமில்லை என்றதும் ஷநாளை காலை வருவேன். இன்றும் யோசியுங்கள்| என்றார். மறுநாள் இதுபற்றி மல்லாடும்போது குழுவிலுள்ள ஏனையோர் ஷஎன்ன நீங்கள் இருவரும் மல்லுக்கட்டுவது?| எனக்கேட்டார்கள். நான் விஷயத்தைச் சொன்னேன். ஷஐயோ கலாபூஷணம் எப்படிப் போனாலும் பணம் பத்தாயிரம் உண்டு. எடுத்துச் செலவழிப்பதுதானே| என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டார்கள. எனக்கும் அப்போதுதான் அது சரியாகப்பட்டது. விருப்பத்தைத் தெரிவித்துவிட்டேன்.

22.05.1996 இல் கலாபூஷணப் பட்டமளிப்புக்கு அழைப்பு வந்தது. அதற்கிடையில் எழுத்தில் ஏதும் இல்லாமல் ஜெமீல் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து, ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியின் விருப்பக் கடிதமொன்று வாங்கி அனுப்புமாறு கேட்டார். ஷஅப்படித்தான் அது விதியானால் எழுத்தில் அறிவியுங்கள்| எனக்கூறிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டேன்.

எதற்கும் மத்துகமப் பிரதிநிதி அணில் முனசிங்காவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஷஇன்னும் உனக்கு கலாபூஷணம் கிடைக்கவில்லையா?| என எழுத்திலேயே கேட்டார். இச்சங்கதியினால் ஜெமீல் மீதிருந்த அபிமானம் எனக்கு தூளாகிவிட்டது.

1996 மே 22 ஆந் திகதி கலாபூஷண விருதைப்பெற அழைப்பு வந்தது. உரிய தினத்தில் உரிய நேரத்தில் அங்கு சென்ற போதும் ஜெமீலுடன் நான் கதைக்கவேயில்லை.

மேடையில் கலாசார அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடி, அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், கலாசார திணைக்களப் பொறுப்பாளர்கள் யாவரும் வரிசையாய் வந்து நின்றார்கள். பெயர்கள் அழைக்கப்பட்டு வரவேற்று விருதைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எனது முறை வந்ததும் நான் சென்று கொண்டிருந்தேன். கலாசார அமைச்சர் கையில் விருதுக்குரிய ஆவணம், பணத்துக்குரிய காசோலை இருந்தன. அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என்னைக் காட்டி ஷஇவர் எனது ஆசிரியர்| என கலாசார அமைச்சரிடம் கூறினார்.

கையிலிருந்த காசோலை, விருது யாவற்றையும் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கையில் கொடுத்து, எனக்கு அவரையே கொடுக்குமாறு பணித்தது மட்டுமல்ல, அவற்றை எனக்கு கொடுக்கும்போது கைதட்டி மகிழ்ச்சியையும் தெரிவித்தார். ஆசிரியம், இலக்கியம் இணைந்த செயல்பாட்டால் நான் மிக மகிழ்ந்தேன்.

அக்காலம் கலை இலக்கியவாதிகளை கலாசார திணைக்களம் தெரிவு செய்தே கலாபூஷண விருதளித்தனர். தற்காலம் விண்ணப்பம் கோரியே இவ்விருதை அளிக்கிறார்கள்.

அழகிய கலையம்ச வேலைப்பாடுடன் வீடு கட்டும் மேசன், கலையம்ச உத்தியுடன் அழகுபடுத்தும் தச்சன், குயவன் போன்றோருக்கும் கலாபூஷண விருதளித்து கௌரவிப்பது முக்கியமானது. அவற்றை எப்போது செய்வார்களோ???

(இன்னும் வரும்)                                    

பாடசாலையில் கல்வி கற்கும் போது ஷகலாவல்லி| எனும் கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராகவிருந்தேன். அக்காலம் நான் ஷதினமணிக்கதிர்| தொடர்ந்து வாங்குவேன். உடன் மாணவன் அபுலசன் ஷகல்கி| வாங்குவார். மாற்றி வாசித்துக்கொள்வோம். ஏனைய பத்திரிகைகளை எல்லாம் வாசிகசாலையில் தான் வாசிப்போம்.

அக்காலம் எனதூரான அக்கரைப்பற்றில், ஆசிரியர்களான செய்யத் அஹமத், செய்யித் மீரா, சகீதண்ணன், சின்னலெவ்வை, ஜமால்தீன், இன்னும் பலர் சேர்ந்து ஜின்னா வாசிகசாலை எனும் பெயரில் பொது வாசிகசாலை ஒன்றை அமைத்து பராமரித்து வந்தனர். எங்களது வாசிக வேட்கையை அது தீர்த்து வைத்தது.

நான் அதிகமாக தூங்குவேன். என் தாயார் என்னைக் கடிந்துகொள்வார். சொற்ப வேளை ஓய்வு கிடைத்தாலும் அதைத் தூக்கத்தில் தான் கழிப்பேன். அதனால் ஷஉனக்கு ஆயுசு குறைவு| எனத் தாயார் கடிந்துகொள்வார்.

1957 மே 6 ஆந்திகதி ஆசிரிய நியமனம் எனக்குக் கிடைத்தது. ஹாலி எலத் தமிழ் வித்தியாலயந்தான் எனது பாடசாலை. அடிக்கடி பதுளை செல்வேன்.  1959 களில் தான் புத்தகம் வாங்க எத்தனித்தேன். பதுளை ஷலோவர்ஸ் ரீட்டில்|, ஷகேஅன்கே| கடைக்கு அதிகமாகச் செல்வேன். அதற்கு முன் கடைதான் ஷமீனாம்பிகைப் புத்தகசாலை|. அங்கே எனது முதலாவது புத்தகமாக ஷதூக்கம் ஓர் கலை| எனும் நூலை வாங்கினேன்.

ஊர் சென்றதும் தூங்கும் போது எனது தாயார் வழமைபோல் கடிந்து கொண்டார். ஒரு பேச்சும் இல்லாமல் ஆர்.எஸ். மணி எழுதிய தூக்கம் ஓர் கலையை தாயிடம் கொடுத்தேன். அதை மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டி வாசித்த பிறகு எனது தாய் தூக்கத்திற்காக ஏசுவதில்லை.

இலக்கிய ஆர்வலர்கள் கேஅன்கே கடைக்குத்தான் வருவார்கள். முதன் முதல் தமிழோவியனை நான் அங்கு தான் சந்தித்தேன். பசறை பாரதி கல்லூரியின் தலைமை ஆசிரியர் கே. இராமசாமியுடன் தான் அவர் வருவார். அக்காலம் நிறைய எழுதிக்கொண்டிருப்பவர்தான் தமிழோவியன். அங்கே தெளிவத்தை ஜோசப், முஹம்மது சமீம் ஆகியோரும் வருவார்கள். தெளிவத்தை ஜோசப்பைவிட தமிழ் ஓவியன் தான் அக்காலம் பிரபல்யம். சில வேலைகளில் ஊவாக் கொலிஜ்ஜில் மேல் வகுப்பில் கற்கும் சோ. சந்திரசேகரனும் அங்கு வந்து நிற்பார். இப்போது பேராசிரியர் சந்திரசேகரனைப் பார்த்தால் என்னைவிட வயதில் மூத்தவர் என்றுதான் மற்றவர்கள் கணிப்பார்கள். நான் கற்பிக்கும் போது அவர் கற்கின்றார்.

நான் பதுளை செல்வதின் முக்கிய நோக்கம் பிங்கறாவையில் வசிக்கும் மல்லிகை மணாளனைப் பார்ப்பதற்காகவே. அவர் இலக்கிய ரசனையுள்ளவர் மட்டுமல்ல ரோஜாமலர்த் தோட்டம் ஒன்றையே கண்காணிப்பவர். மலர்கள் கன்னி கட்டியதிலிருந்து மலர்ந்து கருகும் காலம் வரை பார்த்து மகிழ்வார். என்னிடம் கதைத்து மகிழ்வார். அவர் முத்துச்சரம் எனும் சஞ்சிகையை நடாத்தியவர். 1960 களில் அவர் நடாத்திய சஞ்சிகையின் முதல் பிரதியில் அழகு ஆபத்து எனும் சிறுகதையொன்றினை எழுதினேன்.

1962 களில் பதுளை முஸ்லிம் மஹா வித்தியாலயம் - இப்போது அல் அதான் வித்தியாலயத்தில் கற்பிக்கத் தொடங்கினேன். அந்நேரம் அப்துல்லாஹ் என்பவர் தான் அதிபராக உயர்வு பெற்று வந்தார். அவர் வருமுன் அங்கே அப்துல் காதர் லெவ்வைதான் அதிபராயிருந்தார். மேல் வகுப்புக்கு பாடம் எடுப்பதை அப்துல் காதர் லெவ்வையின் மாணவர்கள் மறுத்ததால், அதிபர் என்னையே வற்புறுத்தினார். நான் மறுக்காது நன்கு ஆயத்தப்படுத்திக் கற்பித்தேன். அதன் விளைவு அநேக மாணவர்கள் சித்தியெய்தினர். இன்று எழுத்துலகில் புதுக் கவிதைகளை எழுதிக் குவிக்கும் பதுளை பாஹிராவும், அன்று சித்தியெய்திய மாணவர்களில் ஒருவர் தான். மேல் வகுப்பில் வெளியாக்கிய சிந்தனை கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியரும் பாஹிரா தான்.

பசறை பாரதி கல்லூரியின் பாரதி விழாவில் என்னைப் பேசுவதற்கு அழைத்தனர். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் எனும் தலைப்பில் அக்காலமே புதுமையாகப் பேசினேன். இலக்கிய உலகம் விதந்து போற்றியமையும், தேசிய பத்திரிகைகளில் அது வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கதே.

சம்பளத்தில் அக்காலம் ஒரு மாதம் 25 ரூபாவுக்கு புத்தகம் வாங்குவேன். 81 பக்கங்கள் கொண்ட தூக்கம் ஓர் கலை மனோ தத்துவ நூலின் விலை 1.25 சதம் தான். அப்படியானால் ஒரு மாதம் எத்தனை நூல்கள் வாங்கியிருப்பேன் என்பதை உணரலாம். இந்தத் தேட்டத்தின் பயன் எனது நூலகத்தில் 5800 நூல்கள் இப்போதுள்ளன. இதனால் ஆய்வாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் புத்தகங்களுக்காக என்னை அண்டுவர். இப்படி  அண்டியவர்களில் நூல்கள், பத்திரிகை பைண்ட்கள் எடுத்து இதுவரை தராதவர்கள் பற்றிய பட்டியலைப் பார்ப்போம்.
(இன்னும் வரும்)பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் ஆய்வுகள் நடத்தும் போதெல்லாம் என்னிடமும் நூல்கள் வாங்குவார். மொழியியல் சம்பந்தமாக ஆய்வின் போது மு. வரதராசனின் நூல்களை உடனடியாக திருப்பிவிடுவார். ரா. சீனிவாசனின் மொழியியல் நூலை வாங்கியவர் உடனடியாகத் தரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டே அவரிடம் திரும்பப் பெற்றேன்.

மு.வ. வின் மொழி நூல், மொழி வரலாறு, டாக்டர் சக்திவேலின் தமிழ் மொழி வரலாறு, டாக்டர் முத்துச் சண்முகனின் இக்கால மொழியியல், கா. சுப்பிரமணியப் பிள்ளையின் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வெளியீடான மொழி நூற் கொள்கையும், தமிழ் மொழி அமைப்பும் இவ்விதம் நிறைய நூல்களை கொடுத்து வாங்கியுள்ளேன். இவற்றுள் சீனிவாசனின் மொழி நூலையும் சுப்பிரமணியப் பிள்ளையின் மொழி நூற் கொள்கையும், தமிழ் மொழி அமைப்பும் ஆகிய நூல்களை திரும்பப் பெற அவதிப்பட்டேன்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் என்னைப் பற்றி எழுதிய கட்டுரையொன்றின் இறுதிப் பகுதியில்

ஷஇக்பாலுக்கு இப்பொழுதும் கூட என்னிடத்தில் ஓர் அதிருப்தி என்பதிலும் பார்க்க ஆதங்கம் கலந்த பயம் உண்டென்று கருதுகிறேன். ஏனெனில் ஏறத்தாழ பத்துப் பதினொரு வருடங்களுக்கு முன்னர் ஈழத்து இலக்கிய வரலாறு பற்றி ஒரு தனி நூலை எழுதத் தீர்மானித்த போது இக்பாலிடமிருந்து அதற்கு வேண்டிய முக்கிய சான்றாதாரங்களில் ஒன்றான கனக செந்தி நாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி பிரதியைப் பெற்றுக் கொண்டேன். அப்பிரதியில் அதைப் பற்றி எதிர்த்தெழுதிய சில்லையூர் செல்வராசனின் கட்டுரைத் தொகுப்பு சேர்த்துக் கட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்பால் அப்பிரதியைத் தருமாறு அடிக்கடி கேட்பார்|.

இப்பிரதியை இன்னும் அவர் எனக்குத் தந்ததில்லை. அவர் குடும்பத்தார் முடியுமானால் அதை எனக்குத் தந்துதவுமாறு இன்று கேட்கிறேன்.

கனக செந்தி நாதன் எழுதிய அந்த நூலின் முதற்பதிப்பல்ல இது. எஸ். பொன்னுத்துரை, எம்.ஏ. ரஹ்மான் கூடி திரிவுபடுத்திய நூல் தான் இது. செந்தி நாதனின் சேட்டைக்குச் சாட்டையாக தினகரனில் தொடர்ந்த கட்டுரையையே நான் அதில் சேர்த்துக் கட்டியுள்ளேன்.

இதன் பின் எவ்வளவு கெஞ்சினாலும் பேராசிரியருக்குப் புத்தகமே கொடுப்பதில்லை. ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்து வெளியாக்கிய பாரதியின் கருத்துப் படங்கள் நூல் என்னிடம் உண்டு என்பதை அறிந்த பேராசிரியர் அவர்கள் கேட்டு மன்றாடினார். 9'' ஒ 11 - 1ஃ2' அளவு, 210 பக்கங்களைக் கொண்ட அந்நூல் இலங்கையில் என்னிடம் மட்டுமே உண்டு என நினைக்கிறேன். அதை எடுத்துச் சென்று பேராசிரியரிடம் ஒரு பகல் முழுதும் நின்று காட்டிவிட்டு கையோடு கொண்டுவந்து விட்டேன்.

ஷபாரதி கவித்துவம் ஒரு மதிப்பீடு| எனும் நூலை இராசேஸ்வரி நீலமணி எழுதியுள்ளார். 84 பக்கங்களைக் கொண்ட அந்நூல் பாரதிக்கு தமிழே தெரியாது என அடித்துக் கூறுகிறது. இந்நூலும் இலங்கையில் என்னிடம் மட்டும்தான் உண்டு. பேராசிரியர் இதைக் கேட்டும் காட்டுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. (இடையில் ஒரு சொருகல்) தமிழ்ச்சங்கம் பாரதி விழாவை சிறப்புற நடாத்தியது. அங்கு கலந்து கொண்டவர்கள் எவருக்கும் பாரதி பற்றி முழுமையாக தெரியாது என்பது எனது கருத்து. மகாகவி பாரதியார் பற்றிய குறிப்பு என ஜீவநதியில் தொடரவிருக்கிறேன்.

சிலர் புத்தகங்களை எடுத்துச் சென்று தொலைத்துவிட்டனர். அவற்றை எனக்கு விளங்கக் கூடியதாய் இருந்தது. 1974களில் விமர்சகர் ஸ்ரீபதி, பேராசிரியர் சிவத்தம்பி பெயரைக்கூறி என்னை அண்டினார். கூறிய ஷபைண்டு|களை எடுத்துச் சென்று திரும்பத் தந்தார். புத்தகங்கள் நிறைய வாங்கி வாசித்துத் திரும்ப தந்தார். 30.08.1974களில்; வெளியான ஷஎழுத்து| ஒருவருட ஷபைண்ட்| உதிரியாக ஏழு பிரதிகளை 97ல் எடுத்துச் சென்றவர் திரும்பத் தரவில்லை. இன்னொருகால் கண்டியில் சந்தித்து கழுத்துடன் சேர்த்து ஷேர்ட்டைப் பிடித்தேன். ஷஎனது பொருள்களெல்லாம் களவு போய்விட்டது. அதிலே பைண்ட் உதிரிகள் அடங்கும்| என அழுதார். என்ன செய்வது விட்டுவிட்டேன்.

18.02.1977 களில் டாக்டர் அமீர் அலி என்னைச் சந்தித்து ஷஷஅல்பாக்கியத் ஸாலியாத்|| மலரை அவசரமாக உடன் தருவேன் எனக் கூறி எடுத்துச் சென்றார். இன்று வரை அவரையும் காணோம். மலரையும் காணோம்.

அக்கரைப்பற்று இப்றாலெவ்வை என்பவர் அரசியல், இலக்கியத்தில் எல்லாம் எடுபிடி. மார்க்ஸிம் கோக்கியுடைய ஷஷதாய்||, நேரு மகளுக்கெழுதிய கடிதங்கள்- ஷஷநேரு சரித்திரம்|| இவற்றை 1979 களில் எடுத்துச் சென்றார். அவரை இன்னும் காணவில்லை. கலைவாதி கலீல் இலங்கையர் கோனின் ஷஷவெள்ளிப் பாதசரம்|| நூலை அவசரமாக வாங்கிச் சென்றார். இதுகால வரை நூலையே காணோம். துக்கமான விசயம் அந்த நூலை எங்கேயும் வாங்க முடியாது. நஹியா அவர்கள் ஷஷமெய்ஞ்ஞானப் பேரமுதம்|| நூலை வாங்கிச் சென்றார். அதை எங்கேயோ தொலைத்துவிட்டார். எப்படியோ ஒரு பழைய பிரதியை எங்கிருந்தோ தேடித் தந்துவிட்டார்.

சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்த எனது சிறுவர் பாடல்கள் 26 அடங்கிய பைல் ஒன்றை குமரன் புத்தக இல்லம் டாம் வீதியில் இருக்கும் காலம், குமரனிடம் கொடுத்தேன். அதை இன்று வரை புத்தகமாக வெளியிடவுமில்லை. திருப்பித் தந்ததுமில்லை. கேட்ட போது அதை என்னுடன் அங்கே சென்ற ஜவ்ஸகியிடம் கொடுத்ததாகச் சொன்னார். சொன்னபடி கொடுத்ததாகத் தெரியவில்லை. இதனால் குமரனுக்கு செல்வதையும் நிறுத்திக்கொண்டேன்.

இன்னும் வாங்கக் கூடிய புத்தகங்களை இழந்து, வாங்கியிருக்கிறேன். அவர்கள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள் அல்லர்;. இளையவர்கள், புத்தகம் பற்றி அறியாதவர்கள் இன்னும் என்னை அண்டுகிறார்கள். பைண்டுகளையும், ஆய்வுக்குரிய நூல்களையும் எடுத்துச் செல்ல நான் அனுமதிப்பதேயில்லை.
(இன்னும் வரும்)

எவ்விதக் கொள்கைகளும் இல்லாமல் எழுத வேண்டும் என்ற ஆசையில் எழுத்துலகில் புகுந்த நான், 1960 களுக்கு இரண்டு மூன்று வருடங்கள் முன்னிருந்தே, தேசியம், முற்போக்குச் சிந்தனைகள் செறிந்த படைப்புக்களைப் படைக்கத் தொடங்கினேன்.

இக்காலத்தே யாழ். தமிழ் இலக்கிய மன்றத்தை உருவாக்கி ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள் இம்மன்றத்துடன் இணையுமாறு வேண்டினார். அந்த இணைப்பினால், இலக்கியப் பரப்பினை அறிவதற்கு வாய்ப்பேற்பட்டது. 1961 களில் கவிதைச் செல்வம் எனும் கவிதைத் தொகுப்பொன்று வெளியிடுவதற்காக ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள் கவிதைத் தொகுதி ஒன்று கேட்டெழுதினார். தேசியச் சிந்தனையுள் அமைந்த ஷஷசெல்வம் பெருக்குவோம்|| என்ற தலைப்பில் கவிதை ஒன்றை அனுப்பினேன்.

கவிதைச் செல்வம் எனும் ச.வே. பஞ்சாட்சரம் தொகுத்த கவிதைத் தொகுதி 1962 களில் வெளிவந்தது. இதை வெளியிட்ட விலாசம் யாழ். தமிழ் இலக்கிய மன்றம், கந்தரோடை, சுன்னாகம் என்பதாகும். 32 பக்கங்களை அடக்கிய இக்கவிதைத் தொகுப்பின் விலை ஒரு ரூபாதான். இக்காலமெனின் ரூபா நூறு பெறுமதி எனலாம்.

இருபத்தொன்பது கவிஞர்களுடைய கவிதைகள் இடம்பெறும் இந்நூலின் பதிப்புரையை சி.சரவணபவன் - கலைச் செல்வி ஆசிரியர் எழுதியுள்ளார். இவர்தான் இதைப் பதிப்பித்திருக்கிறார். இந்த சூழலுக்கு சிறந்த முன்னுரை ஒன்றை கவிஞர் இ.முருகையன் அவர்கள் எழுதியிருக்கிறார்.

இத்தொகுப்பிலுள்ள 29 கவிஞர்களின் பட்டியலைப் பாருங்கள்: 01. பா. சத்தியசீலன், 02. செ.து. தட்சணாமூர்த்தி, 03. திமிலை மகாலிங்கம், 04. கரவைக் கபிலன், 05. பஸீல் காரியப்பர், 06. உமா மகேஸ்வரன், 07. மணியம், 08. வே. இராமநாதன், 09. ஆரையூர் அமரன், 10. ஆ. லோகேஸ்வரன், 11. மு. சுந்தரம், 12. முகிலன், 13. ஏ. இக்பால், 14. இளங்குமரன், 15. மு. பொன்னம்பலம், 16. குமரன், 17. புரட்சிமாறன் (யூ. ஸெயின்), 18. திமிலைக் கண்ணன், 19. ஆ. காமாட்சி, 20. ஜீவா, 21. ஆடலிறை, 22. ஆ.ச. கண்ணன், 23. ச.வே. பஞ்சாரட்சரம், 24. ஐயன்னா, 25. சோ. பரமசாமி, 26. துரைசிங்கம், 27. சபா ஜெயராசா, 28. வ. கோவிந்தபிள்ளை, 29. முத்து சிவஞானம்.

இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னெழுதியவர்களின் பெயர்ப் பட்டியலைப் பார்த்தீர்கள். இதில் சிலர் உயிருடன் இல்லை. இவர்களது இலக்கிய வளர்ச்சியின் இன்றைய நிலையை நோக்குங்கள். இவர்கள் யாவரும் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் உயர்வினில் சிறந்து நிற்கிறார்கள். தனித்தனியாகப் பார்க்கும் போது, ஒவ்வொருவரது சிறப்பையும் விரித்து நோக்கலாம். ஐம்பது வருடங்களுக்கு முன் இவர்கள் எவரும் ஒரு நூலையாவது எழுதியதில்லை. இன்றையக் கணக்கில் ஒவ்வொருவரும் அநேக நூற்களை எழுதியிருக்கிறார்கள். இச்சிறப்பினை விரித்துப் பார்க்க வழிவகுத்தவர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள் தான். யாழ். இளம் எழுத்தாளர் சங்க உபதலைவராயிருந்து கொண்டே, யாழ். தமிழ் இலக்கிய மன்றத்தையும் வழி நடத்திய பஞ்சாட்சரம் அவர்கள் வசதி படைத்தவரல்ல, இலக்கிய உணர்வில் ஊறியவர்.

இன்று புரவலர் புத்தகப் பூங்கா வெளியீடாக முப்பது நூல்கள் வந்துள்ளன. முப்பது நூலாசிரியர்களை தனது பணத்தின் மூலம் நிலை நிறுத்திய பெருமை புரவலர் ஹாஷீம் உமரைச் சாரும். ஐம்பது வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை நூலாசிரியர்கள் வரலாற்றில் பதியப்படுவார்கள். இம் முப்பது நூல்களின் பரவல் போதாது. அதை விரிவுபடுத்தல் அவசியம். தகவல் தொழில் நுட்பக் காலமிது. தொழில் நுட்பத்தால் தகவல்கள் பெருகினாலும், புத்தகப் பெருக்கத்தால் ஏற்படும் விரிவுக்கு எதுவும் நின்று பிடிக்காது. அறிவு விருத்திக்கு அதிக பலனளிப்பது புத்தகம்தான்.

இலக்கிய வரலாற்றைச் செம்மையாக எடுத்தியம்புவதும் புத்தகமே. புரவலர் புத்தகப் பூங்காவும் வரலாற்றில் இறுக்கமான இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

இலக்கிய உலகில் நேர்மையாகக் கால் பதித்தவர்களை வரலாறு விட்டுவிடாது. அவர்களது வழிமுறைகள் மிகவும் நேர்த்தியானது. அவ்வழிமுறைகளுக்கு உதாரணமாக அமைந்த சிறப்பானவர்கள் மூவரைப் பற்றி அடுத்த அலசலில் பார்ப்போம். அம் மூவரின் பெயர்களையும் முறையாகத் தருகிறேன். பேராசிரியர் ஏ.எம்.ஏ. அஸீஸ், பேராசிரியர் சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் எம்.எம். உவைஸ்.  இவர்களுக்கிடையேயுள்ள மனிதத் தொடர்பு, கல்வித் தொடர்பு, இன்னும் பலவற்றை இறுக்கமாய்ப் பார்ப்போம்!!!

(இன்னும் வரும்)


1964 களிலெல்லாம் ஆக்க இலக்கியங்களில் ஈடுபாடுடைய என்னை சமூக ஆய்வு இலக்கியத்துள் திருப்ப முயன்ற அ.ஸ.அப்துஸ்ஸமது அவர்கள் கல்வி, அரசியல், சமூகத்திற்கு உழைத்த முஸ்லிம்கள் பற்றிய வரலாற்று நூலொன்றை எழுதுமாறு பணித்தார்.

இளமைத்துடிப்பு, எழுத்தார்வம், தேடுதல் முயற்சியில் ஈடுபாடுடைய நான், உடனே அப்பணியை ஏற்றுக்கொண்டேன். தனிப்பட்ட ஓரிருவரை எழுதுவதைவிட பலரைத் தேர்ந்து எழுதுவதாக உத்தேசித்தேன். அதன் விளைவுதான் ஷமுஸ்லிம் கலைச்சுடர் மணிகள்| எனும் எனது முதலாவது நூல்.

ஒன்பது சுடர் மணிகள் பற்றிய நூல்தான் அது. அப்போது அறிஞர் சித்தி லெவ்வை, எம்.ரி. அக்பர், டி.பி. ஜாயா, அஹமத் பாரி இந்நால்வரும் உயிருடன் இல்லை. ஏனைய பதியுதீன் மஹ்மூத், ஏ.எம்,ஏ. அஸீஸ், சேர் ராசிக் பரீட், ஐ.எல்.எம். மஸ்ஹூர், திருமதி காலித் ஆகியோர் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களை சந்திக்கும் வாய்ப்பிருந்தது. இப்போது இவர்கள் யாருமே உயிருடன் இல்லை.

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முற்பட்ட சம்பவம் அது. கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதயுதீன் மஹ்மூத் அவர்களைச் சந்திக்க அனுமதி பெற்றுச் சென்றேன். விஷயத்தை விளக்கமாகச் சொன்னேன்.

ஷஎன்னைத் தெரியுமா? நான் இரு அமைச்சர்களாக இருந்திருக்கிறேன். இந்தப் பதவிகள் சிறுபான்மை ஒருவருக்கு கிட்டாது. என்னைத்தான் முதலாவதாகப் போட வேண்டும்| என்றார்.

ஷஇந்தப் புத்தகம் எழுதுபவன் நான். அதை வெளியிடுபவன் நான். முதலாவது இரண்டாவது எனத் தெரிபவனும் நான் தான்| என்றேன்.

ஷஅப்படியென்றால் தர முடியாது| என்றார்.

ஷநீங்கள் குறுகிய காலத்துள் செய்த சேவைகள் அநேகம். தமிழ் படித்தவர்கள், எங்கள் சமூகத்தவர்கள் உங்களை அறிந்தது குறைவு. அதை நிறைவு செய்யவே இந்த முயற்சியில் ஈடுபட்டேன். அது உங்களுக்கு விருப்பமில்லையானால் விடுகிறேன்| என்றேன்.

ஷநில்! இப்போது யாவற்றையும் தர முடியாதே| என்றார்.

ஷஎப்போது வர வேண்டுமோ அப்போது வருவேன்| என்றேன்.

ஷஅறிவிக்கின்றேன்| என்றார். வந்து விட்டேன். பின்பு அறிவித்து யாவற்றையும் பெற்றுக்கொண்டேன்.

அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களைத் தவிர்ந்த ஏனையோரை இலகுவாய்ச் சந்திக்க முடிந்தது. ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களை அனுமதி பெற்று, அவர் தரும் நேரத்தில்தான் சந்திக்கலாம். அவ்விதம் அவரைச் சந்தித்தேன். கல்வி நிலையிலும், அறிவு நிலையிலும் கால்தூசான நானே அவரைச் சந்தித்தபோதே அவரது மேன்மை புரிந்தது. மனந்திறந்து தாராளமாகவே என்னை மதித்து அவர் கதைத்தார். காரணம் பின்புதான் புரிந்தது. அவர் அல்லாமா இக்பாலை மிகமிக விரும்புபவர். அதனால் இக்பால் என்ற பெயருடன் மிகப் பற்றுள்ளவர். அவரது மகனுக்கும் இக்பால் என பெயர் சூட்டி மகிழ்ந்தவர். எனது பெயர் இக்பால் ஆனதால் எடுத்த எடுப்பிலே மிகப் பற்றுள்ளவரானார். அதனால் அவர் இவ்வுலகை நீக்கும் வரை என்னுடன் இறுக்கமான தொடர்பு வைத்திருந்தார். நான் ஷபதியுதீன் மஹ்மூத் அவர்கள் தனது பெயரை முதன்மையாக்கச் சொன்னார்| என்ற விஷயத்தைச் சொன்னேன். அதற்கு அஸீஸ் அவர்கள் ஷஇலங்கை இந்தியா மாதிரி பெரிய நாடல்ல. இந்தியாவில் சகல விஷயத்திலும் சேவை செய்தவர்போல் இங்கு யாரும் இல்லை. விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பார்களே அந்தளவு செய்திருக்கிறார்கள். பதியுதீன் மஹ்மூத் அவர்களும் அவ்விதம் சேவை செய்தவர்தான். செய்துகொண்டுமிருக்கிறார். ஏன் நீ அவரை முதன்மையாகப் போடலாம் தானே| என்றார். நான் அதிர்ந்தே போனேன். அறிவியல் மேன்மை உடையவர் அஸீஸ் என்பது இவ்விடத்தில் புலனானது.

1965 பெப்ருவரியில் எனது ஷமுஸ்லிம் கலைச் சுடர் மணிகள்| நூல் வெளியானது.  அறிஞர் அஸீஸ் அவர்களையும் சேர்த்தெழுதிய நூலது.  அறிஞர் அஸீஸ் பற்றி எழுதியவர்களெல்லாம் நான் எழுதிய பின்பே எழுதியவர்கள் தான்.

1942 களில் அறிஞர் அஸீஸ் அவர்கள் உதவி அரசாங்க அதிபராக கல்முனையில் பதவியேற்றார். 1920 களில் யாழ்ப்பாணத்தில் சந்தித்த சுவாமி விபுலானந்தரின் உறவு இங்கே அஸீஸ் அவர்களுக்கு ஏற்பட்டது. 1943 களில் கல்லடி உப்போடை சிவானந்தாவில் சுவாமி விபுலானந்தரின் வேண்டுதலால் அஸீஸ் அவர்கள் அங்கே சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். 1944 களில் கண்டியில் அரசாங்க அதிபராக அஸீஸ் அவர்கள் கடமையாற்றிய காலம், சுவாமி விபுலானந்தர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றினார். இங்கேயும் அஸீஸ் விபுலானந்தர் உறவு மிக இறுகியது. இக்காலம் சுவாமி விபுலானந்தருக்கு தொற்று நோயான கொப்பளிப்பான் - அம்மை நோய் ஏற்பட்டதால் அஸீஸ் அவர்கள் வாழ்ந்த வீட்டிற்குச் சுவாமியைக் கூட்டி வந்து ஓர் அறையில் சுகமாகும் வரை பூட்டி வைத்துப் பராமரித்தார்.

சுவாமி விபுலானந்தர் கல்முனைக்கு அடுத்த காரைத்தீவில் பிறந்தவர். யாழ்நூலை  உலகறியச் செய்த மேதை விபுலானந்தருக்கு முஸ்லிம்களுடைய உறவும் இணைப்பும் அதிகம். அவருடைய பட்டமளிப்பு விழாவில் இரண்டாவது இடத்தை சாய்ந்தமருது மாளிகைக்காட்டைச் சேர்ந்த பிரபல வைத்தியர் முத்தலிப் பரிகாரி அவர்களுக்கே வழங்கினார்.

பாணந்துறை ஹேனமுல்லையில் கார்த்திகேசு மாஸ்டரிடமும் கா. சிவத்தம்பியின் தந்தை கார்த்திகேசு தலைமையாசிரியரிடமும் கல்விகற்று பல்கலைக் கழகத்துப் பிரவேசப் பரீட்சையில் சித்தியடைந்த எம்.எம். உவைஸ் அவர்களை பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அவர்களே பரீட்சிக்கிறார்.

சுவாமி விபுலானந்தர் அவர்கள் பிரவேசப் பரீட்சையில் முதலாவது கேட்ட கேள்வி ஷசீறாப்புராணத்தை இயற்றிவர் யார்?| உவைஸ் அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பதில் தெரியாத உவைஸ் அவர்களை ஏற்றுக் கொண்ட சுவாமி அவர்கள் சீறாப்புராணம், இஸ்லாமிய இலக்கியங்கள் யாவற்றையும் அறிமுகம் செய்து படிக்குமாறு வேண்டுகிறார். சுவாமி விபுலானந்தர் அவர்களின் வழிகாட்டலான எம்.எம். உவைஸ் அவர்கள் இன்று இஸ்லாமிய இலக்கிய வரலாற்றாசிரியர், நூலாசிரியர் என தமிழ் நாடு, இலங்கை, தமிழ் கூறும் நல்லுலகெலாம் பிரசித்திபெற்று மிளிர்கிறார்.

1950 களுக்குப் பின் அறிஞர் அஸீஸ் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகிறார். அதிபர் அஸீஸ் அவர்களின் கீழ் ஆசிரியராக கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்கள் பதவியேற்கிறார்.

இலக்கிய உலகில் அறிஞர் அஸீஸ் அவர்கள் எழுதிய ஏழு தமிழ் நூற்கள் முக்கியமானவை.

01. இலங்கையில் இஸ்லாம் - 1963
02. மொழிபெயர்ப்புக்கலை - 1965
03. மிஸ்ரின் வசியம் - 1967
04. கிழக்காபிரிக்கக் காட்சிகள் - 1967
05. தமிழ் யாத்திரை - 1968
06. அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் - 1968
07. ஆபிரிக்க அனுபவங்கள் - 1969

ஆங்கில நூல் ஒன்றும் உண்டு. அது மிகப் பிரசித்தமானதொன்று:- வுர்நு றுநுளுவு சுநுயுPPசுயுஐளுநுனு - 1964.

பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்களும் தமிழ் இலக்கியம் சமயம் சார்ந்த பதினைந்து நூல்களை வெளியாக்கியுள்ளார். சிங்களத்தில் இரு நூல்கள் வெளிவரச் செய்துள்ளார். ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார். காமராசர் பல்கலைக்கழகத்தின் வெளியீடான ஷஇஸ்லாமியத் தமிழ் இலக்கியம்| நான்கு பாகங்கள் மிக முக்கியமான நூல்களாகும். 22-1ஃ2ஓ14 மில்லிமீற்றர் அளவுள்ள அந்நூல்கள் முதலாம் பாகம் 631 பக்கங்களைக் கொண்டது. தொடக்கக் காலத்துடன் கி.பி. 1700 வரை இது ஷஇஸ்லாமிய இலக்கியம்| பற்றிக் கூறும். இரண்டாம் பாகம் 662 பக்கங்களைக் கொண்டது. இது இஸ்லாமியக் காப்பியங்கள் பற்றிக் கூறும். மூன்றாம் பாகம் 614 பக்கங்களைக் கொண்டது. இது சிற்றிலக்கியங்கள் பற்றிக் கூறும். நான்காம் பாகம் 680 பக்கங்களைக் கொண்டது. இது சூபி மெய்ஞ்ஞான இலக்கியங்கள் பற்றிக் கூறும். இந்நூல்கள் வெளிவர, எழுத பக்கபலமாக நின்றவர் பேராசிரியர் டாக்டர் பி.மு. அஜ்மல்கான் அவர்களாகும்.

விபுலானந்த அடிகளார் கூட ஐந்து நூல்களை வெளியிட்டார்கள். அதில் முதலாவது ஷயாழ் நூல்| என்பதாகும். இது பழந்தமிழ் இசை நுட்பங்களை விஞ்ஞானமுறை ஆராய்ந்த பெருநூல். இந்நூல் உலகப் பிரசித்தமானது.

இம் மூன்று மிக ஆழமான கல்வி, அறிவு, இலக்கிய நோக்குடைய  சமுத்திரங்கள் பற்றிச் சுருக்கமாகவே அலசியுள்ளேன். இந்த அலசலை வைத்து விரித்துப் பாருங்கள். அதன் சிறப்பு விளங்கும்!!!

(இன்னும் வரும்)


1962 பெப்ருவரி 07ஆந் திகதி புதன் கிழமை கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது பொதுக் கூட்டம் கவிஞர் நீலாவணன் தலைமையில் நடந்தேறியது. கல்முனை எழுத்தாளர் சங்கம் உதயமானதன் நோக்கம் எஸ். பொன்னுத்துரைக்கு பாராட்டு விழா ஒன்று எடுப்பதற்காகவேதான். அக்கூட்டத்தில் எஸ். பொன்னுத்துரையை பாராட்டும் விதத்தில் ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும் என என்னைக் கேட்டனர்.

சிறுகதை எழுதுவதில் மிக ஆர்வமுள்ள எஸ். பொன்னுத்துரை, எதையும் எழுதியவுடன் வெளியாக்குவதில்லை. ஊறப் போட்டு மீண்டும் மீண்டும் திருத்தம் செய்தே வெளியாக்குவார். வாசிப்பில் மிக அக்கறை செலுத்தும் நான் சிறுகதையின் நுணுக்கங்களை ஆய்வதுடன், நானும் சிறுகதை எழுதுவேன். இந்த அனுபவத்தால் ஷஷசிறுகதையும் உத்திகளும்|| எனும் தலைப்பில் பேசுவதாக ஒத்துக்கொண்டேன்.

கல்முனை எழுத்தாளர் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தவர்கள் நீலாவணன், எம்.ஏ. நுஃமான், யூ.எல்.ஏ. மஜீத், பஸீல் காரியப்பர், நானும் இன்னும் சிலரும். எனது பேச்சில் பொன்னுத்துரையின் கதைகளுக்கே முதலிடம் அளித்தேன்.

உத்தி (வுநஉhnஙைரந) களில் முதலாவதாக பிரக்ஞை ஓட்டம் (ளுவசநயஅ ழுக ஊழளெஉழைரளநௌள) தன்னிலைப் போக்கானது. பாத்திரம் தன்மை நிலையை உணர்த்தி வெளிப்படும். எஸ். பொன்னுத்துரை ஷஷசைவர் (0) பூஜ்யமல்ல|| என்றொரு கதை எழுதியுள்ளார். அ. முத்துலிங்கம் கூட ஷஷஅக்கா|| எனும் கதையை எழுதியுள்ளார். அவரது ஷஷஅக்கா|| எனும் கதைத் தொகுதியில் இக்கதை உண்டு.

ஷஷஅக்கா|| எனும் கதையை எட்டாம் வகுப்பு தமிழ் நூலில் பிற்காலத்தில் சேர்க்க எத்தனித்தபோது, க. கைலாசபதி அவர்கள் ஷஅந்த வகுப்புக்கு உரியதல்ல| என்றதால், காவலூர் இராசதுரையின் கதை ஒன்றையே சேர்த்தேன்.

அடுத்து எஸ். பொன்னுத்துரையின் ஷஇரத்தம் சிவப்பு| எனும் கதை உப பாத்திரம் மேலெழுந்தே கதை கூறும். இதை சுஐNபு டுயுசுனுநுN வுநுஊர்Nஐஞருநு என்றே கூறுவர்.

அடுத்து குடுயுளுர் டீயுஊமு பின்னோக்கல் உத்தியில் ஷமேடை|, ஷவீழ்ச்சி| எனும் கதைகளை எஸ்.பொ. எழுதியிருக்கிறார். ஷஜீன்போல் சாட்டோ| எனும் மேல்நாட்டவரே இவ்வுத்தியை அதிகமாகக் கையாண்டவர் எனலாம்.

பத்திரிகைச் செய்தி போல படர்க்கை உத்தியை ஷஹெமிங்வே| என்பவர் கையாண்டார். இந்த உத்தியில் எஸ்.பொ. எழுத முனையவில்லை. இது பத்திரிகை செய்தி போல இருக்கும்.

முக்கியமான ஒரு விசயம்! எஸ்.போ. ஷகுமிழ்| என்ற ஒரு கதையை எழுதி, இது நான் உண்டாக்கிய உத்தி எனக் கூறி, அந்த உத்திக்கு ஷநினைவுக் குதிர்| எனப் பெயரிட்டார். அவரது கர்வம் காரணமாக இந்தச் செய்திகள் இலக்கிய உலகத்துக்குத் தெரியவில்லை. அவரது போக்குக்கும் திறமைக்கும் ஒற்றுமை ஏற்படவில்லை. நாங்களும் ஒதுங்கிக் கொண்டோம்.

புதுமைப் பித்தன், ரகுநாதன், தி. ஜானகி ராமன், கு. அலகிரிசாமி, தி. ராஜ நாராயணன் என்று தொடரும் முக்கிய எழுத்தாளர்களை கரைத்துக் குடித்து சர்ச்சை செய்தபோதும் லா.ச. ராமாமிருதம் எழுதியவைகள் மற்றவர்களிலும் வித்தியாசமானவையே. இவரது ஜனனி, தயா, மீனோட்டம், சிந்தாநதி, பச்சைக் கனவு, அலைகள், முற்றுப் பெறாத தேடல் அவள் பிராயச்சித்தம் ஆகிய நூல்கள் என்னை மிகவும் கவர்ந்தவைகளாகும். இன்றும் இவரது நடையழகு மனதில் நின்று மகிழ வைக்கின்றது.

இந்த உணர்வில் உத்திகளை சிறப்பாகக் கையாண்டு சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற நினைப்பில் உண்மைச் சம்பவங்களை வைத்தே ஷமாயத் தோற்றம்| சிறுகதைத் தொகுதி நூல் ஒன்றை தேசிய நூலக சேவைகள் சபையின் சலுகை பெற்று 1998 களில் வெளியாக்கினேன்.

தற்காலம் சிறுகதை பற்றியெல்லாம் கருத்துரை வழங்குபவர்களுக்கு இந்நூலிலுள்ள ஒன்பது கதைகள் கண்ணில் பட்டதாகத் தெரியவில்லை. இந்நூலை வாசித்த `றிம்ஸான் பாறூக்' எனும் சிங்கள மொழி எழுத்தாளர் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். தெற்கிலிருந்து மிக விரைவில் இந்நூல் வெளிவரும்.

இலங்கையிலிருந்து வெளியான சிறுகதைகள், சிறுகதை எழுத்தாளர்கள் பற்றி நானிங்கு சிலாகிக்கவில்லை. அம்முயற்சியை இன்னொரு அலசலில் தெளிவாக்கயிருக்கிறேன்.

தற்காலம், சம்பவங்களைப் பத்திரிகைச் செய்திபோல் எழுதும் சிறுகதைகளே வெளிவருகின்றன. அவற்றை எழுதுபவர்கள்கூட சிறுகதைகள் பற்றி அறிந்தவர்களா? என்பது கேள்விக்குறியே. இம்முயற்சியில் ஒரு சிலர் இருந்தபோதும் வாசிப்பு, வரலாறு தெரிந்தவர்களாகத் தெரியவில்லை.

எழுதத் துணியும் இளவட்டங்கள் நிறைய வாசிக்க வேண்டும். ஷதி. ஜானகிராமன் நாவல் கலை|, ஷபுதுமைப் பித்தன் தழுவல்கள்|, `கு. அழகிரிசாமியின் எழுத்துக்கள்' என வெளியாகியுள்ள நூல்களை எழுத்துலகில் புகுபவர்கள் நிச்சயமாகப் படிக்க வேண்டும்.

க. கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம், இலக்கியமும் திறனாய்வும், ஒப்பியல் இலக்கியம், இலக்கியச் சிந்தனைகள், திறனாய்வுப் பிரச்சனைகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஆகிய நூல்களை நிச்சயம் படிப்பதுடன் இன்னும் பலர் எழுதிய விமர்சன நூல்களைப் படிப்பதால் நமது சிந்தனை தெளிவு பெறும்!!!

(இன்னும் வரும்)இலக்கிய அனுபவ அலசல் - 09

கவிஞர். ஏ. இக்பால்

இலக்கியம் என்பது சமூக அமைப்பையும், பிரதேச வாழ்க்கை முறைகளையும், சிந்தனைப் போக்குகளையும் அடக்கியதாகவே காணப்படும். இலங்கை இலக்கியம் இருவேறுபட்ட மொழிகளில் பிறந்தபோதும் வரலாற்று ரீதியில் மனிதத்துவ பண்பாட்டைப் பிரதிபலிக்கும். அவ்விதம் பிரதிபலித்தே வந்துள்ளமை கண்கூடு. பண்பாட்டின் ஏற்றத்தாழ்வை மதிப்பீடு செய்து உணர்த்த முடியும். பண்பாடு மாறுமே ஒழிய அழிந்து விடாது. இலங்கை இலக்கியங்கள் இலங்கைப் பண்பாட்டை வரலாற்று ரீதியில் எடுத்துக்காட்டும்.

இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தோன்றிய இலக்கியங்கள் வர்த்தக நோக்கில் முதலாளித்துவ சிந்தனையுடன் பிரிடிஷ்ஷாரின் கல்வி முறையோடு ஒத்ததாக அமைந்துள்ளன. இச்சிந்தனை வேறுபாட்டைத் தீர்க்கக்கூடிய தேசிய கல்வி 1956 இற்குப் பின்தான் ஏற்பட்டதெனலாம். வடக்கு, கிழக்கு, மேற்கு, மலைநாடு ஆகிய பிராந்தியங்களில் சிங்களத்திலும், தமிழிலும் இலக்கியத் தோன்றல் வரலாறு பெரும் வித்தியாசமாகவில்லை. பாளி, பிராக்கிருதம், சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளின் ஊடாட்டம் இலங்கை தேசிய இலக்கியத்தை கட்டியெழுப்பியதெனலாம். இலக்கியத்தின் சாதனை தேசியத்தை பின்னணியாகக் காட்டுவதுதான்.

தேசியவாதத்தின் முன்னும் பின்னும் எழுந்த சிங்கள தமிழ் இலக்கியங்களின் பொருளை ஆய்ந்து நோக்கும்போது, இலங்கைப் பண்பாடு எவ்விதம் வளர்ந்துள்ளது என்பதை அறிய முடியும். ஒருநாட்டின் பாரம்பரிய பண்பாட்டு முறைகள் உயிரிலும் மேலாக பாதுகாக்கப்பட வேண்டியவைகள். இவை இலக்கியத்தில் பொதிந்துள்ளமையால் தேசிய இலக்கிய பரிணாமம், பரிமாணம் எவ்விதம் விரிந்துள்ளன என்பதைக் காணலாம்.

இலங்கையில் எழுந்த சிங்கள தமிழ் இலக்கியங்கள் காலவேறுபாடில்லாமல் அடுத்தடுத்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதனால் தேசிய இலக்கியப் பண்பாட்டின் இடைவெளியை நெருக்கிச் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இந்நாட்டின் மூன்று இனங்கள் இருமொழி பேசுவதினால் இருமொழிகளின் இறுக்க பலம், மூவினத்தையும் ஒன்றாக்கிச் சமாதானத்தை ஏற்படுத்தும். இந்த வழியை இனவாதிகள் எங்களுக்குக் காட்டித் தரவில்லை. இனிமேலும் இவ்விடயத்தில் நாம் இடர்பட முடியாது.

ஒருமுறை இலங்கையில் கடுமையான யுத்த சூழல் காலத்தில் கலைஞர் ரோஹண பத்த அவர்கள் களுத்துறைக் கல்வித் திணைக்களத்தில் சந்தித்த போது 'இலங்கையின் சிங்கள தமிழ் முஸ்லிம் கலை இலக்கியவாதிகளை ஒன்று கூட்டி ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என என்னிடம் கேட்டார். 'இந்தக் கடுமையான யுத்த காலச் சூழலிலா?' என நான் பதில் கேள்வியைத் தொடுத்த போது, 'கலை இலக்கியவாதிகளுக்கும், யுத்தம், எதிர்ப்புகளுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை' என மனந்திறந்து கூறினார். உண்மையில் இந்நாட்டின் இலக்கியத்தாலும், கலை இலக்கியவாதிகளாலும் மட்டுமே ஒரு சமாதான சகவாழ்வை ஏற்படுத்த முடியும் என்பதை உணர முடிகிறதல்லவா?

1940களில் டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த் இலங்கை வந்தபோது அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை உண்டாக்க முயற்சி எடுத்தவர் மலைநாட்டைச் சேர்ந்த கே. கணேஷ் அவர்கள்தான். சிங்கள தமிழ் எழுத்தாளர்களை முதன் முதல் இணைத்து உருவாக்கிய சங்கம் இதுதான். கொம்பனித் தெருவில் உள்ள பொல்ஸ்கி ஹோட்டல் (தற்போது இது நிஸ்போன் ஹோட்டல்) இங்கே தான் இச்சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இச்சங்கத்தின் தலைவர் சுவாமி விபுலானந்தர், உப தலைவர் மார்டின் விக்கிரமசிங்க, இணைச் செயலாளர்கள் டாக்டர் சரத் சந்திர, கே. கணேஷ், பொருளாளர் பி. கந்தையா. இச்சங்கம் நினைத்திருந்தால் நிச்சயம் இந்நாட்டில் இன்றைய குழப்ப நிலை ஏற்பட்டிராது. இலக்கியத்திற்கு இத்தனை உந்து சக்தி உண்டு. நாம் இனிமேலாவது இச்சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.

மனித மதிப்பீடுகளை மிக உன்னதமாகத் தருவது இலக்கியம்தான். மனித மதிப்பீடுகளைப் பற்றிய குறிக்கோளுடன் தேசியக் கல்வி அமையும் போதுதான் ஜனநாயகமும், இலக்கியமும் முன்னேற்றமடையும். இலக்கியத் தத்துவம், வரலாறு ஆகிய சலாசாரப் பாடங்களுக்கு, கற்கும் இடங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் கலாசாரப் பிரக்ஞை ஆழமாக நடைமுறைப்படும். இந்நடைமுறை நம் தேசியக் கல்வியில் இருந்த போதும் கற்பிப்பவர்கள் இதை ஆழமாக நோக்குவதில்லை. அதனால்தான் கலாசாரப் பிரக்ஞை கற்பவருக்கு இல்லை. இந்த உணர்ச்சியை நம்நாடு உன்னிப்பாக கற்பவர்களிடத்தில் ஊன்றுதல் வேண்டும். அப்போதுதான் கற்பவர்களிடையே ஒழுக்க விழுமியம் மிக இறுகி நிற்கும். இலக்கியத்தை தீவிரமாகக் கற்கும் மாணவனால்தான் மனித அனுபவங்களின் தாற்பரியத்தை உணர முடியும். மனிதத்துவத்தை உணராதவிடத்து பண்பாட்டு விருத்தி ஏற்படாது. பண்பாட்டு விருத்திதான் இலக்கியத்தில் ஊன்றி நிற்கும் மிக உன்னத பொருளாகத் தொனிக்கும்.

மனித குலத்தின் வளர்ச்சியை இலக்கிய வரலாறே எடுத்துக் காட்டும். வரலாற்றுப் பாரம்பரியம் இலக்கியத்துள் நுழைந்திருப்பதால் கடந்த காலத்தையும் தற்காலத்தையும் புரிந்து கொள்ளலாம். சிந்தனையை வளர்க்கக் கூடிய இலக்கியங்கள் ஆய்வுகள் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றன. ஆகையால் இலங்கையன் ஒருவன் இருமொழி இலக்கியப் பயிற்சியுடன் உலக இலக்கியத்தை நோக்க வேண்டும். அப்போதுதான் தேசிய இலக்கியம் உலக இலக்கியத்துள் சென்றடையும்.

உலக இலக்கியம், தேசிய இலக்கியம் யாவும் விரிவடைதலுக்கு வெகுசனத் தொடர்பு சாதனங்கள் செல்வாக்குச் செலுத்தும். இச் செல்வாக்கு சில வேலைகளில் சிந்திக்கும் பழக்கத்தையே மறதியிலாக்கும். இச் செயற்பாட்டைச் செய்வதற்குரிய அபாயத்திலிருந்தும் இலக்கியத்தைக் காப்பாற்றுதல் மிக முக்கியம். ஊடகவியலாளர்கள் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் அல்லர். அதே வேளை இலக்கிய கர்த்தாக்கள் ஊடகவியலாளர்களாக முடியும். இலக்கிய கர்த்தாக்கள் அவ்வாறு இருப்பதனால்;தான் பண்பாட்டு ஒழுக்க சீலம் மக்கள் மத்தியில் நிலை நிறுத்தப்படும் என்பதை இலக்கியமே உணர்த்தும்.

கடந்த காலங்களில் உன்னத மதிப்பீடுகளைக் காத்து நின்ற சமயம், தத்துவம், கலைகளின் கலாசாரக் கேந்திரங்கள் இன்று கரைந்துவிட்டனவா? என எண்ணத் தோன்றுகின்றது. அவ்விதம் நடந்து விடாமல் இத்தொடர்பைத் தீவிரப்படுத்தல் அத்தியாவசியம்.

நமது கலாசாரத்தைப் பேணும் இலக்கியங்களை விமர்சனம் செய்யும் சிந்தனைப் பலம் நம்மிடையே இருக்க வேண்டும். அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையை முழுமையாகத் தரிசிக்கும் சீரிய இலக்கியத்தை வாசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மனித குலத்தை இலக்கியமே உய்விக்கும் எனும் உன்னதக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்குரிய இலக்கியத்தை நமது தேசியம் ஆக்கித் தர வேண்டியது அவசியமே.

இன்றைய இலக்கிய உலகில் உயிரோடுள்ள இலக்கியப் படைப்பாளிகளை ஒன்று சேர்த்தல் வேண்டும். இலக்கிய சிந்தனை விரிந்த இக்காலத்தே அறிவுத் தேர்ச்சி பெற்ற உலக வல்லுனர்களைக் கொண்டே ஆராய்ச்சி நடத்தி உலக இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்யும் பணியை ஊக்குவிக்க வேண்டும்.

ஐ.நா வின் யுனெஸ்கோ, கலாசார முறையில் புதிய நடைமுறையாக அரபு மொழி, பர்மிய மொழி, சீன மொழி, கொரிய மொழி, இந்தோனேசிய மொழி, ஹிப்ரு மொழி, ஜப்பானிய மொழி, உருது மொழி, தாய்லாந்து மொழி, வியட்னாமிய மொழிகளிலெல்லாம் இருந்தும், இந்திய மொழிகளான வட மொழி, ஹிந்தி, வங்காளி, தமிழ் மொழிகளில் இருந்தும் சிறந்த புனைக் கதைகளையும், கவிதைகளையும் பிரென்சு, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக இலக்கியத் துறை நோக்கி ஓர் அணியை உருவாக்கி உள்ளது. இம் முயற்றி 1971களில் தொடங்கியது. இக்காலம் அதன் வளர்ச்சியின் எல்லை என்ன? எனக் கணக்கிட்டு, இலங்கை இலக்கியத்தின் உலகளாவிய நிலையைக் கண்டு இன்னும் நமது இலக்கியத்தை உயர்த்தி வளர்த்தல் மிக முக்கியம்.

தேசிய ரீதியில் சிங்கள தமிழ் இலக்கியங்களின் பண்பாட்டுக் கலாசார வழி இரு மொழி பேசும் சிங்கள, தமிழ், முஸ்லிம்களான மூவின மக்களையும் இணைக்கும். இந்த வழியை இலக்கியம் மூலம் நாம் வழிநடத்தும் போது தேசியப் பண்பாடும் மனிதத்துவ சமாதான நிலைப்பாடும் ஒன்றித்து மனித குலத்தை மேன்மைப்படுத்தும். இந்த உன்னத வழியை மேன்மைப்படுத்த இலக்கியமே முன்னின்று உழைக்கும் வல்லமை உடையது. மனித குலத்தைச் சமாதானப்படுத்தும் முக்கிய சாதனம் இலக்கியம்தான்.

(இன்னும் வரும்)

No comments:

Post a Comment