பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Saturday, 17 December 2016

பூங்காவனம் இதழ் 25 பற்றிய கண்ணோட்டம்

பூங்காவனம் இதழ் 25 பற்றிய கண்ணோட்டம்

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்

பூங்காவினுள்ளே ஆசிரியர் தனது பக்கத்தில் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய செய்தியை குறிப்பிட்டிருக்கின்றார். 2016 மே மாதம் இலங்கையின் வெள்ள அனர்த்தங்களால் அநேக மக்கள் பாதிக்கப்பட்டார்கள். மனித உயிர்கள் மாத்திரமன்றி கால்நடைகள், சொத்துக்கள், உடமைகள் என்பனவும் காவுகொள்ளப்பட்டன. வெள்ள அனர்த்தம் மாத்திரமன்றி மண் சரிவினாலும் பல அழிவுகள் ஏற்பட்டன. தென்கிழக்கு ஆசியாவிலே ஏற்பட்ட மாபெரும் மண்சரிவு அனர்த்தம் அரநாயக்காவில் ஏற்பட்ட அனர்த்தம் என கணிப்பிடப்பட்டிருக்கின்றது. இறைவனின் கட்டளைகளை ஏற்று நடக்காததால் ஓர் எச்சரிக்கையாக இந்த நிகழ்வுகள் ஏற்பட்டுவிட்டன. இது பற்றிய கருத்துக்களை ஆசிரியர் தனது பக்கத்தில் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

இதழின் உள்ளே வழமை போன்று நேர்காணல், சிறுகதைகள், கவிதைகள் உட்பட இலக்கிய அனுபவ அலசல், கட்டுரைகள், உருவகக் கதை என பல்வேறுபட்ட ஆக்கங்களை உள்ளடக்கியதாக இந்த இதழ் வெளிவந்திருக்கின்றது.

நேர்காணலில் எழுத்தாளர் திருமதி. மைதிலி தயாபரனை சந்தித்து அநேக இலக்கிய விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் இதழாசிரியர். திருமதி. மைதிலி தயாபரன் பற்றிய தகவல்களை பார்க்கும்போது இவர் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் பாடசாலையில் கல்வி பயின்று 1996 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி 2001 ஆம் ஆண்டு பொறியியலாளராக பட்டம் பெற்று இலங்கை மின்சார சபையில் வவுனியா பிரதேசத்தில் பிரதம பொறியிலாளராகவும், வடக்கின் வசந்தம் என்ற செயற் திட்டத்தின் முகாமையாளராகவும் பணியாற்றி வருகின்றார். முழுக்க முழுக்க இவர் ஓர் இலக்கியவாதியாக இல்லாமல் துறை சார்ந்த தொழில்களோடு இடையே தனது இலக்கிய ஆர்வத்தின் காரணமாக இலக்கியச் செயற்பாடுகளில் அவ்வப்போது ஈடுபட்டு வரும் ஓர் இலக்கியவாதி மைதிலி தயாபரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மரபுக் கவிதை, புதுக் கவிதை, நாவல், ஆய்வு என பல்முக இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர் வாழும் காலம் யாவிலும், சொந்தங்கள் வாழ்த்தி என்ற இரு நாவல்களை 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி ஒரே நாளில் வெளியிட்டதோடு பின்னர் விஞ்சிடுமோ விஞ்ஞானம் என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கின்றார். அதேபோன்று 2015 ஆம் ஆண்டு அநாதை எனப்படுவோன் என்ற நாவலையும் சீதைக்கோர் ராமன், தவறுகள் தொடர்கின்றன ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார்.

இவர் பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களின் இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி பல பரிசில்களையும்  சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு கலாசார திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கையெழுத்துப் பிரதிப் போட்டியில் என் செல்வ மகளே என்ற நாவலுக்கான பரிசையும் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதழின் உள்ளே அஸாத் எம். ஹனீபாவின் பக்கவாத தேசம், பதுளை பாஹிராவின் நிஜங்களைத் தொலைத்தல், மாளிகா அஸ்ஹரின் வேகா வெயில், வெலிப்பன்னை அத்தாஸின் கூலிகள்,  பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரியின் தேர்வுகள், எஸ்.ஆர். பாலசந்திரனின் ஒப்பற்ற அழகி, ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் தொலைந்த நிம்மதி, வில்லூரானின் அச்சம் தவிர், கவிதாயினி சஹீகாவின் மழைநாள், செதுக்குகிறேன் ஆகிய இரண்டு கவிதைகள் போன்றவை இந்த இதழில் இடம்பிடித்துள்ளன. அத்துடன் சூசை எட்வேர்டின் எது சரி?, கினியம இக்ராம் தாஹாவின் காலம் மாறிவிட்ட போதிலும் என்ற இரண்டு சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன.

கவிஞர் ஏ. இக்பாலின் 20 ஆவது இலக்கிய அலசலில் சரித்திர விரிவுரையாளர் முஹம்மது சமீம் அவர்களைப் பற்றிய பல பிரயோசனமுள்ள தகவல்களைத் தந்திருக்கின்றார். மிகவும் அருமையான இந்தக் கட்டுரை மூலம் முஹம்மது சமீம் அவர்களது இலக்கிய ஈடுபாடுகளினால் இலக்கிய உலகுக்குக் கிடைத்துள்ள நன்மைகளைப் பற்றியும், கவிஞர் அவர் பால் கொண்டிருந்த பற்றுதல் பற்றியும் தகவல்களை மிகத் தெளிவாகவும், விபரமாகவும் தந்திருக்கின்றார்.

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா சமூக ஊடகங்களைப் பற்றி சிறப்பானதொரு கட்டுரையைத் தந்திருக்கின்றார். இக்கட்டுரையின் வாயிலாக சமூக ஊடகங்கள் என்றால் என்ன? அவை எவ்வகையின? அவற்றின் செயல்முறைத் தொழிற்பாகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? போன்ற விபரங்கள், சூத்திரங்கள் மூலம் தெளிவாக விளக்கியிருக்கின்றார்.

சூசை எட்வேர்டின் எது சரி? என்ற சிறுகதை தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் காணப்படும் சமூகப் பண்பாடுகளை விளக்கி நிற்கின்றது. இரண்டு சமூகங்களுக்கும் இடையில் காணப்படும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களின் இருபக்க நியாயங்களை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

கினியம இக்ராம் தாஹாவின் காலம் மாறிவிட்ட போதிலும் என்ற சிறுகதை மனிதன் இன்னும் மாறாமல் மூட நம்பிக்கையிலேயே மூழ்கியிருக்கின்றான். திருந்தாத சமூகமும், திருத்த முடியாத சமூகமும் இருக்கும் வரை மூட நம்பிக்கைகளும், முட்டாள் தனங்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதோடு எத்தனையோ குமரிப் பெண்களின் வாழ்க்கை வரன் இன்றி வரண்டு போய்விடுகின்றது என்பதையும் தெளிவு படுத்துகின்றது.

மருதூர் ஜமால்தீனின் போட்டியால் மலர்ந்த உறவு என்ற உருவகக்கதை வித்தியாசமான கோணத்தில் நோக்கப்பட்டிருக்கின்றது. ஆமையும் முயலும் என்ற கதை பல்லாண்டு காலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் ஒரு சாதாரண கதைதான். முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் கதை. ஆனால் இந்தக் கதையை ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் தந்திருக்கின்றார். வித்தியாசமான கதை, வித்தியாசமான முடிவு.

எழுத்தாளர் அறிமுகத்தில் வெலிமடையைச் சேர்ந்த எம்.எப். சஹீகா பற்றிய குறிப்புகளும் அவரது இரு கவிதைகளும் தரப்பட்டிருக்கின்றன. தாய் நிலம் என்ற நூல் பற்றிய மதிப்புரையை நிலாக்குயில் எழுதியிருக்கின்றார். ஆ. முல்லை திவ்யன் என்ற இளம் எழுத்தாளரால் எழுதப்பட்ட இச்சிறுகதை நூல் பற்றிய ஆய்வு மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நூலகப் பூங்காவில் பதினான்கு நூல்களைப் பற்றிய விபரங்களையும் பூங்காவனம் ஏந்தி வந்திருக்கின்றது. அத்தோடு வாசகர் கடிதமும் வழமை போல இடம்பெற்றிருக்கின்றது. மொத்தத்தில் சகல விடயங்களும் உள்ளடங்கியதாக வெளிவந்திருக்கும் பூங்காவனம் இதழ் வாசகரை திருப்திப்படுத்திவிடும் என்பதில் ஐயம் இல்லை!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

No comments:

Post a Comment