பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Saturday, 17 December 2016

பூங்காவனம் 22 ஆவது இதழ் மீது ஒரு பார்வை

பூங்காவனம் 22 ஆவது இதழ் மீது ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்

பூங்காவனத்தின் 22 ஆவது இதழ் சுற்றுலாத் தினத்தை நினைவுபடுத்துவதோடு ஆசிரியரின் கருத்துக்களுடன் திறந்து கொள்கிறது. 1970 ஆம் ஆண்டு ஐ.நா. சபை செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதியை சுற்றுலா தினமாகப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து வருடாந்தம் அத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பாரிய வெளிநாட்டுச் செலாவணியை ஒவ்வொரு நாட்டுக்கும் ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை மூலம் மனம் களிப்படைந்து உடல் புத்துயிர் பெறுவது போலவே ஒவ்வொரு இடங்களையும் சுற்றிப் பார்வையிடும் போது அப்பகுதியின் பழக்க வழக்கங்கள், சம்பிரதாய நடைமுறைகளை அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல பாடசாலை மாணவர்களின் சுற்றுலாவின் மூலம் மாணவர்களுக்குத் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்ள முடிகிறது என்ற கருத்தினை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். அதேபோல ''சிரமங்கள் உங்கள் வாழ்வை அழிக்க வருவதில்லை. உங்கள் சக்தியைப் பரிசோதிக்கவே வருகின்றன. அந்தச் சிரமங்கள் உங்களை நெருங்க சிரமப்படும் அளவுக்கு உழையுங்கள்'' என்ற மறைந்த விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாமின் கூற்றினை எடுத்துக் காட்டி நமக்குக் கிடைத்திருக்கும் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படியும் அறிவுரை பகன்றுள்ளார்.

வழமைபோன்று பூங்காவினுள்ளே நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், உருவகக் கதைகள், கட்டுரைகள் என்பவற்றோடு, நூல் மதிப்புரை, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

கா. தவபாலன், சூசை எட்வேட், பதுளை பாஹிரா, உ. நிசார், வெலிப்பண்ணை அத்தாஸ், குறிஞ்சி நிலா, ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, மருதூர் ஜமால்தீன், பூவெலிகட சப்ரி எம். ஷாஃபி ஆகியோரது கவிதைகளும், சஞ்சிகையில் இடம்பெற்றிருக்கக் கூடிய இரண்டு சிறுகதைகளையும் கினியம இக்ராம் தாஹாவும், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் எழுதியுள்ளார்கள்.

திருமதி சுகிலா ஞானராசாவின் முன்னட்டைப் படத்தைத் தாங்கி வந்துள்ள இந்த இதழில் அவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான இவர், ''சின்னச் சிட்டுக் குருவி'' என்ற சிறுவர் இலக்கிய நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த நூல் கல்வி அமைச்சின் நூலக அபிவிருத்தி சபையினால் 2010 ஆம் ஆண்டு சான்றிதழுக்கு உரியதாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இவரது கணவர் ஞானராசா சிறந்ததொரு எழுத்தாளரும், கவிஞருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி சுகிலாவின் எழுத்துப் பணிக்கு கணவரின் ஒத்தாசை எப்பொழுதும் கிடைத்தே வந்திருக்கிறது. பட்டதாரி ஆசிரியையான இவருக்கு கடமை நேரம் போக ஏனைய நேரத்தை வாசிப்பிலும் எழுதுவதிலும் செலவிடுவதாகச் சொல்லுகிறார்.

அத்துடன் இச்சஞ்சிகையில் கா. தவபாலனுடைய நேர்காணலொன்றையும் காண முடிகிறது. திரு. கா. தவபாலன் 2009 ஆம் ஆண்டு ஞானம் சஞ்சிகையில் எழுதிய சிறுகதையின் மூலமாகவே எழுத்துலகை எட்டிப் பார்க்கிறார். இவர் பூங்காவனம், ஜீவநதி, தாயக ஒலி, மல்லிகை, நீங்களும் எழுதலாம், சுவைத்திரள், செங்கதிர் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வருகின்றார். கா. தவபாலன் அரசியல் விஞ்ஞானப் பட்டதாரியாக இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.

இதழில் இடம்பெற்றிருக்கும் இரண்டு சிறகதைகளையும் கினியம இக்ராம் தாஹாவும், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் தந்திருக்கிறார்கள். கினியம இக்ராம் ''தீர்வு'' என்ற தனது சிறுகதை மூலமாக கஷ்டத்துக்காக வெளிநாடு செல்லும் சில இளம் பெண்கள் பொய்த் தகவல்களைக் கொடுத்து வயதையும், பெயரையும் மாற்றி வெளிநாட்டுக் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர். இப்படியாகப் பெறப்பட்ட கடவுச் சீட்டின் மூலமாக வெளிநாடு சென்று கடைசியில் மரண தண்டனை அளிக்கப்பட்ட ரிஸானா நபீக் போன்றவர்கள் உருவாகாமல் இருப்பதற்காக வெளிநாட்டு முகவர் நிலையங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், வசதி குறைந்தவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

''கிளை இழந்த விருட்சங்கள்'' என்ற ரிஸ்னாவின் சிறுகதை உறவுகள் இருந்தும் இறுதியில் ஒருவருமற்ற அநாதையாக ஆகிப்போன ஒரு தாயின் வலியைக் கூறி நிற்கிறது. தான் வளர்த்த பிள்ளை தனது மனைவியின் பேச்சுக்களை நம்பி ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தது பெற்ற தாய்க்கு பொறுக்க முடியாத இதய வலியை ஏற்படுத்தி வைக்கிறது. பெற்றோர்களை இறுதிக் காலத்தில் நல்லபடியாக காப்பாற்றுவதுதான் ஒவ்வொரு பிள்ளையினதும் கடமையாகும். என்றாலும் இன்றைய காலத்தில் தாயையும் தகப்பனையும் மதிக்காத பிள்ளைகளைத்தான் இன்றைய சமூகத்தில் காண முடிகிறது.

மேலும் எஸ்.ஆர். பாலசந்திரனின் குறுங்கதைகள் இரண்டு இடம்பெற்றிருக்கிறது. ''பாவபலன்'' என்ற குறுங்கதை ஒருவருக்குச் செய்யும் கெடுதியானது முடிவில் தன்னையே வந்து தாக்கும் என்பதை விளக்குகிறது. ''எதிர்பாரரதது'' என்ற சிறுகதை வேலியே பயிரை மேய்வதைப் போல குற்றம் செய்பவர்கள் பொது மக்களாகவே அல்லாமல் பொலீஸ் உத்தியோகத்தரே குற்றமிழைத்து கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் நிலையை எடுத்துக் காட்டகிறது. குற்றங்களை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சட்டத்தின் பிடியில் சிக்கியதன்பின்னால் எல்லோரும் ஒரே சமன் என்பதைப் போல கந்தசாமி ஐயாவும் ஏனைய குற்றவாளிகளுடன் ஒருவராக கம்பிக் கூட்டுக்குள் காணப்பட்டார். காரணம் அவர் வேலைக்காரனை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இலக்கிய அனுபவ அலசல் அம்சத்தில் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தன்னைக் கவர்ந்தவர்கள் பட்டியலில் பாடகர் நாகூர் ஹனீபா, எழுத்தாளர் ஜெயகாந்தன், ஒளிபரப்பாளர் இஸட்.எல்.எம். முஹம்மத் என்ற மூன்று துறைகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்கள் பற்றி எழுத எண்ணி முதலில் பாடகர் நாகூர் ஈ.எம். ஹனீபா பற்றிய சில குறிப்புக்களைத் தந்திருக்கிறார். தனது மாணாக்கருக்கு ஒரு துறையைப் பற்றி விளக்குவதற்காக நாகூர் ஈ.எம். ஹனீபாவைப் பற்றிய தலைப்பைக் கொடுத்திருக்கிறார்.

நிலாக்குயில் மதிப்பிட்டுள்ள நூல் மதிப்பீட்டில் கிழக்கிலங்கை எழுத்தாளரான ஜெனீரா கைருல் அமானின் ''மழலையர் மாருதம்'' நூலைப் பற்றிய கண்ணோட்டத்தைச் செலுத்தியிருக்கிறார். ஜெனீரா கைருல் அமான் ஓர் ஆசிரியராக இருப்பதால் பாடசாலைப் பிள்ளைகளுக்கு ஏற்ற விதத்தில் சிறுவர் இலக்கியம் படைத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிறுவர் பாடல், சின்னக் குயில் பாட்டு, மிதுஹாவின் நந்தவனம், கட்டுரை எழுதுவோம், முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் என்பன பாடசாலைப் பிள்ளைகளுக்காகவே படைக்கப்பட்ட சிறுவர் நூல்கள் என இனங்கான முடிகிறது. இவர் பிரியமான சிநேகிதி என்ற சிறுகதை நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

எஸ். முத்துமீரானின் உருவகக் கதைகள் மூலம் எது எது நடக்க வேண்டுமோ அது அது அந்ந அந்த நேரத்தில் அணுபிசகாமல் நடக்கும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார். படைத்த இறைவனுக்கும் படைக்கப்பட்ட உயிருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் நுளம்பின் சீவன் ஆண்டவன் சந்நிதானத்தில் நிற்கிறது.

இதழில் உ. நிசார் அவர்களின் பெண் என்ற கவிதை பெண்ணின் பெருமையைச் சொல்லுவதாக உள்ளது. அதே போன்று மக்களின் ஏக்கம் தீரவில்லை, வீதிகளில் விசர் நாய்கள், கருத்துச் சுரங்கம், நாடோடியின் நாட்குறிப்புக்கள், மரணவலி, நிரந்தரம், அல்லாஹ்வை நினைத்து, சிந்தித்து உணர் போன்ற தலைப்பில் அமைந்த கவிதைகளுடன் மறைந்த எஸ்.எச்.எம். ஜெமீல் பற்றிய இரங்கல் கவிதையை வெலிப்பண்ணை அத்தாஸ் அவர்களும் எழுதியுள்ளார்கள். அத்துடன் குறும்பாக்கள் சிலவற்றை மருதூர் ஜமால்தீன் எழுதியுள்ளார்.

இவைதவிர பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்களும், நூலகப் பூங்காவில் பதினேழு நூல்களுக்கான விபரக் குறிப்புக்களும் காணப்படுகிறது. அத்தோடு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ரிம்ஸா முஹம்மதின் அறுவடைகள் நூல் வெளியீட்டு விழா சம்பந்தமான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. குறையேதுமில்லாத நிறைவான ஓர் இதழ். ஆசிரியரின் இலக்கியப் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் - poetrimza@gmail.com
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

No comments:

Post a Comment