பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Thursday, 15 December 2016

பூங்காவனம் 16 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

பூங்காவனம் 16 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனல்லை.

பூங்காவனம் சஞ்சிகையின் 16 ஆவது இதழ் தற்பொழுது வாசகர் வசம் வந்துள்ளது. திருமதி ஷானாஸ் பர்வீன் பிர்தௌஸின் புகைப்படத்தை முன் அட்டையில் தாங்கி வந்துள்ள இவ் இதழின் ஆசிரியர் தலையங்கம் பெண்ணுரிமை, பெண்ணியத்தைப் பற்றிப் பேசுகிறது. கால மாற்றம் ஆண்களே பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் காலம் ஒன்று உருவாகியிருப்பதனால் இனிவரும் தலைமுறையினர் ஆண் பெண் என்;ற கட்டமைப்புக்களை உடைத்தெரிந்து சகல துறைகளிலும் கால் பதித்து முன்னேறலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருப்பதாக ஆசிரியர் வாசகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். 

வழமைபோன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்புரை, எழுத்தாளர் அறிமுகம், வாசகர் கடிதம், நூலகப் பூங்கா எனப் பல்வேறுபட்ட இலக்கிய அம்சங்கள் இதழை அலங்கரிக்கின்றன. கவிதைகளை எல். தேனுஷா, ஈழக்கவி, குறிஞ்சி நிலா, த. எலிசபெத், எச்.எம். சுஐப், வவுனியா சுகந்தினி, எம்.எம். அலி அக்பர், மிகிந்தலை ஏ. பாரிஸ், வெலிப்பன்னை அத்தாஸ், நிந்தவூர் ஷிப்லி, நமுனுகுல வி. சந்திராதேவி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

சிறுகதைகளை மருதூர் ஜமால்தீன், எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், நமுனுகுல வி. சந்திராதேவி ஆகியோர் படைத்திருக்கிறார்கள். அறிமுக எழுத்தாளர் என்பதினால் இந்த இதழில் மேற்படி சந்திராதேவியின் ஏங்குகிறேன் என்ற தலைப்பில் கவிதையும், அதிர்ஷ்டம் என்ற தலைப்பிலான சிறுகதை ஒன்றும் இடம்பிடித்திருக்கின்றது.

திருமதி ஷானாஸ் பர்வீன் பிர்தௌஸை, ரிம்ஸா முஹம்மத் சந்தித்து பல தகவல்களை பெற்றுத் தந்திருக்கிறார். கொழும்பைச் சேர்ந்த ஷானாஸ் பர்வீன் ஒரு தையல் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் விளங்குகிறார். கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர், கல்லூரி அதிபர் ஆசிரியர்களின் ஊக்கத்தினால் எழுத்துத் துறைக்குள் வந்ததாகக் கூறுகிறார். சிறுவயதில் இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்ததாகவும், தற்பொழுது ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை வாசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கவிஞர் ஏ. இக்கபால் தனது இலக்கிய அலசலில் பெண்ணியம் குநஅinளைஅ பேசும் பெண் படைப்பாளிகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். சிரேஷ்ட படைப்பாளிகளான பெண் எழுத்தாளர்கள் புனைவுகளின் மூலமாக பெண்ணிய சமூகத்தின் நிலபரங்களை உலகத்துக்கு எடுத்துக் காட்டப்பட்டதாகவும், வானொலிப் பெண் கலைஞர்கள் மூலமாக தமது நாடகங்களின் மூலம் பெண்ணுரிமை பற்றிய கருத்துக்களை வெளியுலகத்துக்கு உணர்த்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்தவகையில் கோகிலா மகேந்திரனின் ஷதுயிலும் ஒருநாள் கலையும்| என்ற நூல் எத்தகைய தாக்கத்தினை ஆணாதிக்கச் சமூகத்தில் ஏற்படுத்தியது என்பதைப் பற்றியும் விளக்கியிருக்கிறார்.

மேலும், இதழில் உறவின் உச்ச நிலை உணர்த்தும் பாலும் நீரும் என்ற தலைப்பில் பாலினதும், நீரினதும் முக்கியத்துவத்தைப் பற்றி பழம் பெரும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பற்றி முன் உதாரணம் காட்டி சிறந்ததொரு கட்டுரையை லண்டனில் இருந்து நுணாவிலூர் கா. விசயரத்தினம்  தந்திருக்கிறார். மனிதநேயம் பற்றி எஸ்.ஆர். பாலசந்திரனும், கெட்ட தொடுகையைப் பற்றி சூசை எட்வேட்டும் சிறுகதைகளைத் தந்திருக்கிறார்கள். மங்கையர் தினத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மலையகப் பெண் தொழிலாளர்களினதும், வெளிநாடு செல்லும் பெண்களைப் பற்றியும் பயனுள்ள தகவல்களைத் தனது கட்டுரையில் பதித்துள்ளார் பேராதனை கா. தவபாலன். சுபாசினி சந்திரகாந்தன், நாச்சியாதீவு பர்வீனின் கவிதைகள் மீது தனது பார்வையைச் செலுத்தி மண் வாசைன சுமக்கும் அவரது கவிதைகளைப் பற்றிய சிறந்ததொரு விளக்கத்தினைத் தந்திருக்கிறார்.

மொத்தத்தில் கடந்த இதழ்களுக்கு சற்றும் குறைவு ஏற்படாத வகையில் இந்த இதழினையும் வாசகர்களுக்குத் தந்த அதன் ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
முகவரி - 21 ஈ, ஸ்ரீ தர்மபால வீதி, கல்கிசை. 
தொலைபேசி - 0775009222

No comments:

Post a Comment