பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, 10 May 2015

வெலிப்பன்னை அத்தாஸ் அவர்களுடனான நேர்காணல்

வெலிப்பன்னை அத்தாஸ் அவர்களுடனான நேர்காணல்

01. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, குடும்பப் பின்னணி பற்றி கூறுங்கள்?

 எனது பிறப்பிடம் வெலிப்பன்னை. நான் வெலிப்பன்னை முஸ்லிம் வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றேன். 1961 இல் தான் முதன் முதல் அவ்வித்தியாலயத்திலிருந்து சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர் தோற்றினர். அந்த ஆண்டு பரீட்சை எழுதிய மாணவர்களில் நான் மாத்திரம் உயர்தர வகுப்புக்கு சித்தியடைந்தேன். எனவே முதன் முதல் உயர்தரத்துக்கு சித்தியடைந்த மாணவன் என்று பாடசாலை வரலாற்றிலும் எனது பெயரைப் பதித்தேன். உயர் தரத்தை தர்காநகர் அல்ஹம்றா மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றேன்.

எனது தாயார் அப்துர் ரஹ்மான் லெவ்வை ஸெய்னத்தும்மா. தகப்பனார் விதானையார் ஹஸன் மரிக்கார் அப்துல் ஹமீது. இவர்களும் வெலிப்பன்னையைச் சேர்ந்தவர்கள். தகப்பனாரின் தந்தை ஆங்கிலேயர் ஆட்சியில் விதானையராகக் கடமையாற்றியவர். தாயின் தந்தை பிரபல வர்த்தகர். எனக்கு ஒரு சகோதரனும் ஐந்து சகோதரிகளும் இருந்து சகோதரி ஒருவர் காலஞ்சென்றுவிட்டார்.


02. பல வருடங்களாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டு வந்து, பின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற உங்கள் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா? 

நான் 1964 இல் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு மாணவ ஆசிரியராக நியமனம் பெற்றேன். அப்பொழுது மாதாந்தம் நூறு ரூபாய் சம்பளம்தான் கிடைத்தது. சம்பளத்திற்காகவன்று, ஆசிரிய சேவையில் ஈடுபட வேண்டும் என்ற மன விருப்பமே என்னை இத்துறையில் ஈடுபடச் செய்தது. ஊரிலே நியமனம் பெற்றிருந்த நான், போட்டிப் பரீட்சைக்கு தோற்றியதில் அட்டாளச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு ஆசிரியர் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டேன். பயிற்சியின் பின் திருகோணமலை, கிண்ணியா, குருநாகல், மக்கொன பிரதேசங்களில் தமிழ் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் கற்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

1977 இல் வெலிப்பன்னையில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றும் போது அரசியல் மாற்றம் ஏற்பட்டு அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகி இடமாற்ற ஆணை கிடைக்கப் பெற்றேன். 1974 இல் எனது திருமணம் நிகழ்ந்தது. எனது மனைவியும் கூட ஒரு ஆசிரியைதான். அவருக்கும் அக்காலத்தில் இடமாற்றக் கட்டணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவ்வேளை கிண்ணியாவில் மாவட்ட அமைச்சராக இருந்த எனது நெருங்கிய நண்பர் ஜனாப் மஹ்ரூப் எம்.பி. அவர்கள் உடனடியாகச் செயல்பட்டு மூதூருக்கு மாற்றம் கிடைக்காது, கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் வித்தியாலயத்துக்கு நியமனம் பெற்றுத் தந்தார். அதுமட்டுமல்லாது பின்னர் முயற்சித்து எமது விருப்பின் பேரில் மனைவியின் ஊரான குருநாகலுக்கே இடமாற்றம் பெற்றுத் தந்தார். குருநாகல் மாவட்ட பாடசாலைகளில் சில வருடங்கள் கடமையாற்றினோம். ஏற்கனவே 1978 இல் அதிபர் போட்டிப் பரீட்சைக்கு திருகோணமலையில் விண்ணப்பித்து பரீட்சை எழுதியதில் புள்ளி அடிப்படையில் முன்னிலையில் நின்றேன். பரீட்சையின் முடிவின்படி 120 முஸ்லிம் அதிபர்கள் தெரிவாகி இருந்தனர். பெறுபேற்றில் 01 ஆம் இலக்க ஆளாக நான் காட்டப் பட்டேன் ஆயினும் எனக்கு அதிபர் நியமனம் கிடைக்கவில்லை. தேடிப் பார்த்ததில் அரசியல் பழிவாங்கலே காரணம் என்று அறிந்தேன். மேன்முறையீடு செய்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. 1989 இல் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவுக்கு முறையீடு செய்ததில் எனக்கு அதிபர் 2 – 1 நியமனம் கிடைத்தது. 1993 கடைசியில் மீண்டும் நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து, முதலாம் தர அதிபர் பதவி கிடைத்தது. வெலிப்பன்னை முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையேற்று மகா வித்தியாலயத் தரத்துக்கு பாடசாலையை முன்னேற்றி ரஹ்மானிய்யா ம.வி. என்ற பெயரில் பாடசாலைப் பெயரைப் பதிய வைத்தேன். ஓய்வு பெறும் வரை இப்பாடசாலையிலேயே கடமையாற்றினேன்.


எனது சேவைக் காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றக் கிடைத்ததால் பல இன சமூகத் தொடர்புகளுடன் வாழ்க்கை அமைந்தமை ஒரு பாரிய அநுபவமாக அமைந்தது. சிங்கள தமிழ் பெற்றார்கள் கூட மிக அந்நியோன்யமாகப் பழகி எனக்கு மிகவும் மதிப்பளித்தமையை நினைக்கும் போது புளகாங்கிதம் அடைகிறேன். அதிபராக இருந்த காலத்தில் கற்பித்தலோடு, பாடசாலை நிர்வாகத்தை மேற்கொள்ள பௌதிக வளங்களைப் பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றிலும் வெற்றி கண்டேன். இதனால் மேல் மாகாணக் கல்வித் திணைக்களம் எனக்கு ``வித்தியா நிகேதாலங்கார'' எனும் கௌரவப் பட்டத்தை வழங்கி பெருமைப் படுத்தியதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.


03. எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண கர்த்தா யார்? 

அப்போது மர்ஹூம் எம்.எம்.எம். யூசுப் அவர்கள் அதிபராக இருந்த போது ஆறாம் வகுப்புக்கு மேல் தமிழ்ப் பாடத்தை அவரே கற்பித்தார். தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்த அவர் எழுத்தாக்கங்கள் எழுதும் வல்லமையை என்னில் ஏற்படுத்தினார். பத்திரிகைகளுக்கு எழுதும்படி தூண்டினார். சாதாரண தரம் கற்கும் போது தாரகை வாராந்தப் பத்திரகையில் ஷமுஸ்லிம்களுக்கு மதக் கல்வி புகட்டுவதில் மாற்றம் வேண்டும்| என்ற ஆக்கம் பிரசுரமானது. பின்னர் கவிஞர் ஏ. இக்பால் அவர்களுடன் பேனா நட்பு தொடர்ந்ததில் அவர் எனது வீடு தேடிவந்து என்னைத் தட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து பக்க பலமாக இருந்து ஆலோசனைகளைக் கூறி ஊக்கப் படுத்தினார். தினகரன் பத்திரிகையும், விவேகி சஞ்சிகையும் எனது ஆக்கங்களுக்கு இடமளித்து நின்றமை மேலும் எனக்கு உற்சாகமாய் அமைந்தது.

தாரகை, தினகரன், வீரகேசரி, தினபதி, தினக்குரல், மித்திரன், நமது தூது, முஸ்லிம் குரல், விடிவெள்ளி, நவமணி, வார உரைகள், எங்கள் தேசம், முஸ்லிம் முரசு, சுடர் ஒளி போன்ற பத்திரிகைகளிலும் விவேகி, கலைச்சுடர், கலைமலர், வெற்றி, புதிய பயணம் (இந்தியா), ஜீவநதி, பூங்காவனம், ஓசை, செங்கதிர், ஞானம், நீங்களும் எழுதலாம், மல்லிகை, படிகள் போன்ற சஞ்சிகைகளிலும் எனது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.


04. கவிதைகள் எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?

சிறுவயது முதலே நான் சிறந்த வாசகனாக இருந்தேன். இதற்கு வித்திட்டவர் எனது தாயின் தகப்பன். உயர் தரம் படிக்கும் போது கவிதைத் துறையில் விசேட ஆர்வம் ஏற்பட்டது. பாரதியார் கவிதைகள் தொடக்கம் பத்திரகையில் வரும் கவிதைகள் என்னை ஈர்த்தன. 1963 இல் தினகரன் புதன்மலர் பகுதிக்கு `சிரஞ்சீவியாக வாழ அருள் செய் இறைவா' என்ற எனது முதல் கவிதை பிரசுரமாகியதைத் தொடர்ந்து கவிதைத் துறையில் இன்னும் ஈடுபாடு ஏற்பட்டது.

05. இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

முதன் முதல் உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள் என்ற சிறு நூலை 1969 இல் வெளியிட்டேன். அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் திரட்டிய சுவடி ஆற்றுப்படை இரண்டாம் பாகம் 86 ஆம் பக்கத்தில் இந்நூல் பற்றிய விபரம் இடம்பெற்றுள்ளது. இளங்கலைஞன் என்ற புனைப் பெயரிலேயே இந்த நூலை எழுதி வெளியிட்டேன். 1986 இல் மர்ஹூம் எம்.எம்.எம். யூசுப் அதிபர் நினைவு மலர் என்னால் தொகுக்கப்பட்டு பழைய மாணவர் சங்கத்தால் வெளியிடப்பட்டது. 2003 இல் அதுவரை நான் பத்திரிகைகளில் எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து சிந்தனைப் பார்வைகள் என்ற நூலை வெளியிட்டேன். அடுத்து 2012 இல் பூவும் கனியும் என்ற சிறுவர் பாடல் நூலை வெளியிட்டேன். தொடர்ந்து 2014 இல் தியாகம் என்ற சிறுகதை நூலை வெளியிட்டுள்ளேன்.

06. உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்? 

கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் இந்த இடத்தில் மிகவும் முக்கியமானவர். என் போன்ற இன்னும் பல எழுத்தாளர்களை ஊக்குவித்து இவ்வாறு பல நூல்களை வெளியிடச் செய்துள்ளார். அத்துடன் சக ஆசிரியர்களும் இதனை ஊக்கப்படுத்தியதுடன் என்னிடம் கற்ற பழைய மாணவர்கள் பலர் இதற்கு பண உதவி புரிந்தார்கள். அவர்களது பெயர்களையும் எனது நூல்களில் பதிவு செய்துள்ளேன்.

07. நூல்களை வெளியிடும் போது தாங்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது முதல் நூல் உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள் 500 பிரதிகளை வெளியிட்டேன். எனக்குக்கூட ஒரு பிரதி எஞ்சாத நிலையில் முழுவதும் விற்பனையாகின. இரண்டாவது நூல் பழைய மாணவர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. மூன்றாவது நூலான சிந்தனைப் பார்வைகள் வெளியிடுவதில் ஒரு சவால் ஏற்பட்டது. 1000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டதில் 400 பிரதிகள் விற்கப்பட்டு செலவுத் தொகையில் மூன்றில் இரண்டு பங்கை சமாளிக்கக் கூடியதாக இருந்தது. மிகுதி 600 பிரதிகளில் வாசிகசாலை, பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்கியும் இன்(று)னும் சில பிரதிகள் கைவசம் உள்ளன. நான்காவது சிறுவர் பாடல் நூலாக வெளிவந்த பூவும் கனியும் பாடசாலை மாணவர்களுக்கு உகந்தது என 1000 பிரதிகளை வெளியிட்டேன். எப்படியோ 800 பிரதிகளை விற்று முடித்தேன். நஷ்டம் எதுவுமில்லை. ஆனால் களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகள் இந்நூலை சலுகை விலையில் கொடுத்தும் வாங்க மறுத்துவிட்டன. பேருவலைப் பிரதேசத்தில் பாடசாலை அதிபர் (ஆண்) ஒருவர் ஐந்தாம் தர மாணவர்களுக்கு பாடப் பயிற்சிகள் உள்ளடக்கிய புத்தகம் அச்சிட்டிருக்கலாமே என்று கூறி நூலை மாணவர் மத்தியில் விற்பதற்கான ஒத்துழைப்பை வழங்கப் பின் வாங்கினார். புத்தக விற்பனை பணம் சம்பாதிப்பதற்கு என்ற நோக்கம் அவரிடம் இருந்ததை உணர்ந்தேன். இவ்வாறு நோக்குபவர்கள் மத்தியில் ஒரு சவாலாகத்தான் இந்தப் புத்தக வெளியீட்டு முயற்சிகளைத் தொடர வேண்டியுள்ளது.

08. மெல்லிசைப் பாடல் தொகுதியை வெளியிட்டுள்ளீர்கள் என்ற அநுபவத்தின் அடிப்படையில், தற்போதைய உள்நாட்டுப் பாடலாசிரியர்களின் மெல்லிசைப் பாடல்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய மெல்லிசைப் பாடல்கள் பலவற்றை எழுதியதுண்டு. அப்பொழுது உயர் தர வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த காலம். பாடல் இசைக்கக் கூடிய மாணவர்களின் வேண்டுதலுக்காக இஸ்லாமியப் பாடல்களை எழுதிக் கொடுத்தேன். இஸ்லாமியக் கோட்பாடு, கொள்கைகள், தத்துவங்களை உள்ளடக்கி உயிர்த்துடிப்புள்ளதாக இலகு தமிழில் ஓசை நயத்துடன் பாடக்கூடியதாக அப் பாடல்களை எழுதினேன். 1969 இல் இவ்வாறான பாடல்களைத் தொகுத்து அச்சிலும் கொண்டு வந்தேன்.
இன்று இலங்கையில் இவ்வாறான பாடல் எழுதுவோர் முஸ்லிம்களில் பலர் உள்ளனர். அன்றும் இருந்தனர். அவ்வாறான பாடல்களை இசைப்பதனால் கீத்ராத் புகழ் `கலைக்கமல்' அவர்கள் இன்று நம்மத்தியில் பிரசித்தி பெற்றவராகக் காணப்படுகிறார். இலங்கை வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும் இடைக்கிடையே சிலர் இவ்வாறு தோன்றுபவர்கள் உள்ளனர். கருத்தோட்டமுள்ள பாடல்களும், பாடகர்களும் இடம் பிடித்துக்கொள்கின்றனர். ஓசை நயத்தை மட்டும் கவனத்தில் கொள்வோர் கால ஓட்டத்தில் மறைந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.


09. நீங்கள் இதுவரை வாசித்த பல்வேறுபட்ட நூல்களில் உங்கள் மனதைப் பாதித்த நூல் என்று எதனை உங்களால் குறிப்பிட முடியும்? ஏன்?

கவிஞர் சாரண பாஸ்கரன் எழுதிய ஷயூசுப் ஜுலைஹா| காவியத்தைக் குறிப்பிடுவேன். யூசுபைக் கனவில் கண்டு காதல் வயப்பட்டு வருந்தி நிற்கும் ஜுலைஹாவின் நிலையைக் கவிதைகளில் தரும் கவிஞர், ஜுலைஹாவின் யதார்த்த நிலையை அதே தோரணையில் வெளிக்காட்டுவது வியப்புக்குரியது. மட்டுமல்ல, மனதை வருடி எம்மையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகிறது. தவிர யூசுப் நபியின் தகப்பன் யாக்கூப் தன் மகன் யூசுபை ஓநாய் தின்றுவிட்டது என யூசுபின் அண்ணன்மார் வந்து அவரிடம் கூறும் போது துடிதுடித்துப் போகின்றார். இரக்கமெல்லாம் கொட்டி வளர்த்த தன் அருமை மகனின் இழப்பைத் தாங்காது தவியாய்த் தவிக்கிறார். இவ்வாறு மனதைத் தொட்டுத் துன்பத்தில் தோயவிட்டபின் பல்வேறு சோதனைகளின் பின்னால் யூசுப் உயிர் பிழைத்துள்ளார். இதை கவிதைகள் மூலம் தீட்டி உணர்வு பூர்வமாகக் கவிஞர் சாரண பாஸ்கரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார். நான் வாசித்த பல்வேறு நூல்களுள் மனதைப் பாதித்த நூல் இது என்று குறிப்பிடலாம்.


10. இப்போதுகளில் எவ்வகையான நூல்களை விரும்பி வாசிக்கிறீர்கள்? 

அதிகமதிகம் ஆன்மீகம் சார்ந்த நூல்களை வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். விசேடமாகத் திருக்குர்ஆன் தப்ஸீர் (மொழி பெயர்ப்பு), ஹதீஸ் நூல்கள், ஆன்மீகம் சார்ந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை வாசிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். இதுதவிர உள்நாட்டு, வெளிநாட்டு (இந்திய) இலக்கியம் சார்ந்த நூல்கள், சஞ்சிகைகளை வாசிப்பதில் எனது ஓய்வு நேரங்கள் கழிகின்றன.


11. உங்கள் எழுத்துத் துறை முன்னோடியாக யாரைக் குறிப்பிடுவீர்கள்?

ஆரம்பத்தில் இந்தியா – தமிழ் நாட்டிலிருந்து வரும் சஞ்சிகைகளை வாசித்ததில் (கல்கண்டு, குமுதம், ஆனந்த விகடன், கல்கி, தீபம் மற்றும் இஸ்லாமிய சஞ்சிகைகள்) தமிழ் நாட்டு எழுத்தாளர்களை ஆதர்சமாகக் கொள்ளும் முனைப்பு இருந்தது. தமிழ் நாட்டிலிருந்து இலங்கை வந்த `பகீரதன்' போன்ற எழுத்தாளர்கள் இலங்கை எழுத்தாளர்களை மட்டம் தட்டும் விதத்தில் 10 வருடங்கள் பின்தங்கியவர்களாகக் காணப்படுகின்றனர் என்று தமிழக எழுத்தாளர்களுடன், இலங்கை எழுத்தாளர்களை ஒப்பிட்டுக் கூறியதிலிருந்து இயல்பாகவே இந்திய எழுத்தாளர்கள் மீது ஒரு வெறுப்புத் தோன்றியது.

`சுபைர் இளங்கீரன்' போன்றவர்கள் நாவல் துறையில் கொடிகட்டிப் பறந்தகாலம். முற்போக்கு எழுத்தாளர்கள் சிறுகதைத் துறையில் இலங்கையில் போட்டி போட்டு எழுதிய சந்தர்ப்பம். எனவே இத்தகையோர் இந்திய எழுத்தாளர்களால் புறந்தள்ளப்பட்டனர். நான் எதேச்சையாக - சுயமாகவே எனது எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முற்பட்டேன். முன்னோடியாக யாரையும் கருத்திற் கொள்ளாது சுயமான எழுத்துப் போக்கை வளர்த்துக்கொண்டேன்.


12. உங்கள் இலக்கிய முயற்சிகளுக்கு தற்போதுவரை உறுதுணையாக இருக்கும் இலக்கியவாதிகள் யாவர்?

நான் எழுதத் தொடங்கிய காலத்தில் பேனா நன்பராக மாறிய ஜனாப் ஏ. இக்பால் அவர்கள் எனது இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து இன்றுவரை கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் ஊக்குவிப்பே என்னைத் துலங்கச் செய்தது என்று கூறலாம்.


13. சமகால எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?

தோட்டத் தமிழ் மக்களின் வாழ்க்கை ஓலங்களைச் சித்தரித்துக் கூறும் தெளிவத்தை ஜோசப் என்னை மிகவும் கவர்ந்தவர். ஏனெனில் பல வருடங்கள் தோட்டத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஆசிரியராக, அதிபராக இருந்து கல்வி போதித்தவன் என்ற வகையில் தோட்ட மக்களின் வாழ்வு பற்றி அவர்களின் துன்ப துயரங்கள் பற்றி நிறைய அறிந்திருக்கிறேன். தெளிவத்தை ஜோசப் இந்த மக்களது வாழ்க்கையைக் கதையாக்குகிறார். இதுதான் அவரைப் பிடிப்பதற்குக் காரணம்.

தற்போது முஸ்லிம் சமூகக் கதைகளைத் தருபவர் திக்வல்லை கமால். அவர் சிங்களக் கதைகளை மொழிபெயர்ப்பும் செய்வார். இவரும்கூட எனக்குப் பிடித்த சமகால எழுத்தாளர். திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் உட்பட முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் எனக்குப் பிடித்தமானவர்களே.


14. இலக்கிய அமைப்புக்களில் தாங்கள் அங்கத்தவராக இருக்கிறீர்களா? 

இலக்கிய அமைப்புக்களின் சேவைகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
ஷவெலிப்பன்னை இலக்கிய வட்டம்| என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்படுகிறோம். இதன் அமைப்பாளராக நான் உள்ளேன். இலக்கியக் கருத்தரங்குகள், கவிதைப் பொழிவு, அங்கத்தவர்களின் ஆக்கங்களை அரங்கேற்றுதல் போன்றவற்றை நடத்தி வருகின்றோம். நூல் வெளியீடுகளிலும் இவ்வமைப்பு பங்களிப்பை வழங்கி வருகின்றது.


15. உங்கள் படைப்புகளுக்கு எழுத்தாளர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பு உள்ளது?

எனது ஆக்கங்களை வாசித்து தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் தொலைபேசியில் என்னைப் பாராட்டுவார்கள். சிலர் கடிதம் அல்லது தபாலட்டையில் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். என் படைப்புகளுக்கு அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதைக் கண்டு உத்வேகம் அடைகின்றேன்.


16. இலக்கிய உலகில் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அநுபவம்?

ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை காலை பதினொரு மணியளவில் கவிஞர் ஏ. இக்பால் (அக்கரைப்பற்று), கவிஞர் பஸீல் காரியப்பர் (சம்மாந்துறை) இருவரும் என்னை வெலிப்பன்னையிலுள்ள எனது பாட்டனார் வீட்டில் சந்திக்க வந்தனர். அவ்வளவு தூரத்திலிருந்து பத்திரிகைத் தொடர்பு காரணமாக எழுத்து உறவு பூண்டு  முன்னறிவித்தலின்றி நேரடியாக வீடு தேடி வந்து சந்தித்த நிகழ்வு என்னால் மறக்க முடியாதது. கவிஞர் ஏ. இக்பாலுடன் இன்று வரை இலக்கியத் தொடர்பு நிலைத்துள்ளது. கவிஞர் பஸீல் காரியப்பர் காலஞ் சென்றுவிட்டமை மனதை வருந்தச் செய்யும் நினைவாகும்.


17. கொழும்புப் பல்கலைக் கழகத்தில் ஊடகத் துறை டிப்ளோமாப் பட்டம் பெற்ற நீங்கள், புதிதாக அந்தப் பாடநெறியைத் தொடர விரும்புபவர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் ஊடகத்துறை சம்பந்தமான சிறப்புப் பயிற்சிகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும். பத்திரிகை நிருபராக நான் கடமையாற்றும் காலத்தில் அதன் அவசியத்தை உணர்ந்தே ஊடகத்துறைப் பாடநெறியைக் கற்றுக்கொண்டேன். இத்துறையில் நிறைந்த ஆற்றல் உள்ளவனாக என்னை மாற்றிக்கொள்ள இப்பயிற்சி உதவி செய்தது. ஊடகங்கள் போட்டியிட்டுக்கொண்டு செயல்படும் இக்காலத்தில் வெற்றிநடைபோடத் தேவையான நுணுக்கங்கள், வழிமுறைகள், இத்துறை சார்ந்த விசால அறிவு என்பவற்றைப் பெற்றுக்கொள்ள இப்பாடநெறி வழிவகுக்கும்.


18. தாங்களது இலக்கியப் பணிகளினூடாக எதனைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?

உண்மையில் இலக்கியம் என்பது மனித வாழ்க்கையை ஒட்டியதாகும். இலக்கு 10 இயம் எனப் பிரித்துப் பார்த்தால் அதன் கருத்து சிறப்பாக விளங்கும். எனவே இலட்சியம், நோக்கங்களை உள்ளடக்கிய இலக்கியம் வாசகர்களுக்கு பயன் விளைவிப்பதாக அமைய வேண்டும். மனித மனதை ஈர்த்தெடுத்து நற்பண்புகளை மனித மனத்தில் ஊன்றச் செய்யும் ஆக்கங்களைப் படைக்கவே விழைகிறேன். எனவே கட்டுரை, கவிதை, கதைகள் மூலம் இவ்வாறான பயன்பாடுகள் சமுதாயத்துக்குக் கிடைக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இலக்கியப் பணிகளைச் செய்து வருகின்றேன்.


19. இளம் எழுத்தாளர்களுக்கு விசேடமாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

இளம் எழுத்தாளர்கள் பலர் இன்று புதுமை என்ற கோட்பாட்டில் புரியாத புதிர்களை எழுதிக் குவிக்கிறார்கள். புதுக் கவிதை, புதிர்க் கவிதைப் பாணியைக் கைக்கொள்கிறார்கள். படைப்பாக்கம் என்பது எமது திறமை, சாதுரியம் என்பவற்றைக் காட்டுவதன்று. மகாகவி சுப்பிரமணியப் பாரதியார் போன்ற பெரும் கவிஞர்கள் கூட பாமர மக்கள் அறியும் விதத்தில் கவிதை, பாடல்களைத் தந்தார்கள். ஆகவே எந்தத் தரத்தில் உள்ளவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் படைப்புகளைப் படைக்க வேண்டும். அத்துடன் தமிழ் இலக்கியத் துறையில் வரலாற்று ரீதியான அறிவைப் பெற்றுக் கொள்வதுடன் நிறைய வாசித்து எம்மை வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.


20. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், பட்டங்கள், விருதுகள் ஆகியவற்றைக் குறிப்பிடுங்கள்?

பட்டங்கள் வழங்குவது சந்தை வியாபாரம் ஆகிவிட்ட யுகம் இது. ஆரம்பத்திலேயே பண வசூலுக்கு வந்தார்கள். நிச்சயமாக பட்டம் வழங்குவதாக உறுதியும் அளித்தார்கள். அதற்கு நான் இணங்கவில்லை. ஒழுங்கான பாராட்டும், கௌரவிப்பும் கிடைக்கப் பெற்றவற்றுக்கே தலைசாய்த்தேன். இதுவரை மூன்று சந்தர்ப்பங்களிலேயே பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டேன். முதலாவது கழுத்துறை மாவட்ட தினகரன் வாசகர் வட்டம். இரண்டாவது வெலிப்பன்னை ரஹ்மானிய்யா மகா வித்தியாலய பாடசாலைச் சமூகம். மூன்றாவது தோட்டத் தமிழ்க் கல்வி இயக்கமான வித்தியா பவுண்டேசன் நிறுவனம் ஆகியன பொன்னாடை போர்த்தி கௌரவித்தன.

அத்துடுன் அகலவத்தை மத்துகம பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மக்கள் சார்பில் வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரம் வழங்கியமை, மேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் சிறந்த அதிபர் என்ற தெரிவில் வித்தியா நிகேதாலங்கார பட்டம் வழங்கியமை, அகில இலங்கைக் கவிஞர் சம்மேளனம் காவியப் பிரதீப (கவிச்சுடர்) என்ற பட்டம் வழங்கியமை, இலங்கைக் கலாசார அமைச்சு கலாபூஷணம் விருதை வழங்கியமை ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.

மேலும் பல பாராட்டுக்கள், ஊக்குவிப்புக்களை பள்ளிவாசல் சமூகத்தால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


21. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும் என்ற அறிவுரையை அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறேன். 

No comments:

Post a Comment