பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, 10 May 2015

படைப்பாளி மு. சிவலிங்கம் அவர்களுடனான நேர்காணல்

படைப்பாளி மு. சிவலிங்கம் அவர்களுடனான நேர்காணல்

01. உங்கள் வாழ்விடம், கல்லூரி வாழ்க்கைப் பற்றி குறிப்பிடுங்கள்..?
வாழ்ந்த இடம், பிறந்து வளர்ந்தது எல்லாம் தலவாக்கலை பெரிய மல்லிகைப் பூ தோட்டமாகும். அமரர்களான முத்து முருகன், அழகேசு கண்ணம்மா பெற்றோர்களாவர். தற்போது கொட்டகலை நகரத்தில் வசிக்கின்றேன். ஆரம்பக் கல்வியை தோட்ட பாடசாலையிலும், இடை நிலைக் கல்வியை தலவாக்கலை அர்ச் பத்திரிசிரியார் கல்லூரியிலும், அட்டன் ஹைலண்ஸ் கல்லுரியிலும் கற்றுள்ளேன்.

02. உங்கள் குடும்பப் பின்னணிப் பற்றிக் கூறுங்கள்...?
மனைவி, மகன்மார்கள் மூவர் ஆகிய சிறு குடும்பம். மூத்த மகன்  மருத்துவக் கல்வி பயின்று வருகிறார். இரண்டாவது மகன் திருமணமானவர். அவரும், மனைவியும் அமெரிக்காவில் கணினி பொறியியலாளர்களாகத் தொழில் புரிகின்றனர். இளைய மகனும் கணினி பொறியியலாளராக தலைநகரில் பணி புரிகின்றார். எனது தொழில் விபரங்களாக பத்திரிக்கையாளன், அரச பாடசாலை ஆசிரியர், தொழிற்சங்க அரசியல்வாதி, மலையக மக்கள் முன்னணி அரசியல் கட்சியை ஸ்தாபித்த முக்கியமானவர்களுள் ஒருவன், அக் கட்சியின் செயலாளர் நாயகமாகவும், மத்திய மாகாண சபையின் பிரதித் தலைவர் எனவும் தொடர்ந்தது. நாடகம், சினிமா (புதிய காற்று) என்று பங்கேற்ற கலைத்துறை அனுபவங்களும் உண்டு..

03. உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கிய ஈடுபாடு உண்டா..?
கிடையாது...! ஆயினும் எனது எழுத்துத் துறைக்கான கணினி பதிவுகளிலும், நூல் வெளியீடுகளுக்குரிய  உதவிகளையும் செய்;து வருகின்றனர். மகன்மார்களில் இருவர் இசைத் துறையில் ஈடுபாடு கொண்டவர்கள்.
 
04. எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீர்கள்..? அதற்கான காரணகர்த்தாவாக இருந்தவர் யார்..?
நானாகவே உருவாகினேன். எனது காலத்து சஞ்சிகைகளான நாடோடி, ஈழ மணி, வெற்றி மணி, சுதந்திரன், வீரகேசரி, சிந்தாமணி, தினபதி, தந்தி, கார்மேகம் ஏடுகள் உதவின. எனது ஆசிரியர்களான நயினா தீவு வே. குலசேகரம், இரா. சிவலிங்கம், திருச்செந்தூரன் ஆகியோர் எனது எழுத்துலகத்துக்குத் துணை நின்றார்கள்.

05. இது வரை வெளிவந்த உங்கள் படைப்புக்கள் பற்றி விரிவாகக் குறிப்பிடுங்கள்;?
முதலாவது வெளியீடாக, 'மலைகளின் மக்கள்', கவி மணி சி.வி.வேலப்பிள்ளையின் Born to Labour என்ற நூலின் தமிழாக்கமான 'தேயிலை தேசம்', 'ஒரு விதை நெல்' சிறுகதைத் தொகுப்பு, 'மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்;' ஆய்வு நூல், 'ஒப்பாரி கோச்சி' சிறுகதைத் தொகுப்பு, சென்ற ஆண்டு வெளிவந்த 'வெந்து தணிந்தது காலம்|| சிறுகதைத் தொகுப்பு, ஆகியன எனது படைப்புகளாகும்.

இவைகளுள் 'மலைகளின் மக்கள்', 'ஒப்பாரி கோச்சி' ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளுக்கும், தமிழாக்கமான 'தேயிலை தேசம்' நூலுக்கும் மூன்று முறை அரச சாகித்திய விருதுகளும் மற்றும் விபவி விருது, கனக செந்திநாதன் விருது, தமிழியல் விருது என்பன கிடைத்துள்ளன.

06. உங்கள் சிறுகதை, நாவல்களுக்கான கருப் பொருட்களை எப்படி பெற்றுக் கொள்கின்றீர்கள்..?
நான் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளி. அரசினாலும், தோட்ட வியாபாரக் கம்பெனிகளாலும், அலட்சியப்படுத்தப்பட்டுள்ள எனது சமூகத்துக்குரிய கருப் பொருட்கள் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றன.  ஆகவே அவைகளைத் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படாது. எழுத நினைக்கும் போதெல்லாம் அங்கிருந்து எடுத்துக்கொள்கிறேன்.

07. கவிதைத் துறைகளில் ஏனையத் துறைகளைப் போல பெரிதாக நாட்டமில்லையா..?
கவிதைத் துறையே எனது மிக விருப்பமான துறையாகவிருந்தது. ஒரு தொகுதி போடுமளவுக்கு கவிதைகள் உள்ளன. இருந்தும் சிறுகதைகளிலேயே நாட்டத்தை அதிகமாக்கிக் கொண்டேன். கவிதையில் சமூகத்தை முழுமையாகக் காட்ட முடியாது. அந்த அசாத்தியத்தை பாரதியால் மட்டுமே அடைய முடிந்தது. தேசம், சர்வதேசம், மனிதம், சமுதாயம், அரசியல், விஞ்ஞானம், ஆன்மீகம், புரட்சி, எழுச்சி, கடைசியில் ஆண், பெண்ணுக்குரிய காதல் என்று அவனால் மட்டுமே கவிதையின் மகத்துவத்தைக் கண்டறிய முடிந்தது.

08. உங்களின் எழுத்துக்களின் வெற்றிக்கு காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்...?
எனது எழுத்துக்கள் சமூக முக்கியத்துவத்தைப் பேசுவதாகவேயிருக்கும். மனித விடுதலை, மனித மகிழ்ச்சி இதுவே எனது எழுத்தின் இலட்சியமாகும். இந்த இரண்டையும் தவிர்த்து, வேறு நிலைப்பாடுகள் எழுத்துச் சிந்தனையில் இருக்க முடியாது. இந்த நிலைப்பாடே ஒரு படைப்பாளியின் வெற்றியை நிர்ணயிக்க முடியும்.

09. இலக்கிய உலகில் உங்களால் மறக்க முடியாதவர்கள் அல்லது மறக்க முடியாத சம்பவம் ஏதும் உண்டா..?
'ரூட்ஸ்' (Roots) - (ஏழு தலைமுறைகள்) நாவலை எழுதிய அமெரிக்க கறுப்பின எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி என்பவரும், 'கறுப்பு அடிமைகளின் கதை' (Uncle Tom’s Cabin or Life among the Lowly) நாவலை எழுதிய  பெண் எழுத்தாளர் ஹரியட் பீச்சர் ஸ்டொவ் என்பவரும், 'தாய்' நாவலை (Mother) எழுதிய ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கோர்க்கியும் என் மனதில் பதிந்தவர்கள்.

மறக்க முடியாத சம்பவமாக, 2004 ம் ஆண்டு சென்னையில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் நடந்த புத்தகத் திருவிழாவின் போது, பேராசிரியர், கவிஞர், சிறுகதையாளருமாகிய எனது நண்பர் இன் குலாப் அவர்களிடம் எழுத்தாளர் ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தும்படி கேட்டேன். அதற்கு 'உங்கள் விருப்பம் சங்கடத்தை ஏற்படுத்தலாம். இருந்தாலும், வாருங்கள்..' என்று எழுத்தாளர் ஜெயகாந்தனை அம் மண்டபத்தில் சந்திக்க அழைத்துச் சென்றார். அந்த நேரம் அவர் வீட்டுக்குச் செல்வதற்காக காரில் அமர்ந்திருந்தார். 'இவர் இலங்கை நண்பர்... எழுத்தாளர்... உங்கள் ரசிகன்... உங்களை சந்திக்க விரும்பினார்..' என்று கவிஞர் இன்குலாப் கூறியதும் ஜெயகாந்தன், ஷஷமகிழ்ச்சி... மகிழ்ச்சி...' என்றார். அவரது கையெழுத்தைப் பெறுவதற்காக ஒரு தாளை நீட்டி உங்கள் பெயரையும், டெலிபோன் இலக்கத்தையும் எழுதித் தாருங்கள் என்று தயக்கத்தோடு கேட்டேன். 'என்னைய்யா இதையெல்லாம் எனக்கிட்ட கேட்டுக்கிட்டு,..? அவர் கிட்ட கேளுங்க தருவாரு.!' என்று முகத்திலடித்தது போல் காரில் நகர்ந்த சம்பவமும், அசடு வழிந்த முகத்தோடு நின்ற என்னை, கவிஞர் இன்குலாப் இழுத்துக் கொண்டு ஒரு பெட்டிக் கடையில் ருசியான  காப்பி வாங்கிக் கொடுத்த சம்பவமும் 'ஆள புரிஞ்சிக்கிட்டீங்களா...? அவர் அப்படித்தான்..' என்று சிரித்து விட்டு, கனிமேரா ஹோட்டல் பஸ் ஸ்டான்டில் என்னை ஏற்றிவிட வந்தவர், மேல் சட்டையை  உயர்த்தி வயிற்றைக் காட்டினார். 'பை பாஸ் செய்த சில நாட்களிலேயே வருத்தத்தோடு புத்தகத் திருவிழாவில் கலந்துக் கொள்வதற்காக வந்தேன். இப்போ மகன் வருவார். தாம்பரத்துக்கு வீட்டுக்குப் போகணும். பஸ் வந்திருச்சி.. ஏறுங்க..'  என்று கை கூப்பி வணக்கம் சொன்ன அந்த பெருந்தகையைப் போல், தனது படைப்புக்கும், மன இயல்புக்கும் பொருத்தமில்லாத எத்தனை  படைப்பாளர்களை நாம் கண்டு வருகிறோம்?

10. இலக்கியப் பணி சார்ந்த உங்களது கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?
மக்களுக்கான அரசியலைத் தேடுவதே எனது இலக்கியம் சார்ந்த கொள்கையாகும். நான் இலங்கை எழுத்தாளன். இலங்கை குடி மக்கள், பேதங்களற்ற இலங்கை தேசத்தை, தாய் மண்ணாக நேசிப்பதற்கும்,  தேசியக் கொடியை சுமப்பதற்கும் ஆட்சியாளர்கள் வழியமைக்க வேண்டும். தேசியத்துக்கு அப்பால் உள்ளக வாழ்க்கையில் இன, மத, மொழி, சாதிய பேதங்கள், சமூகக் குற்றங்கள் ஒழிவதற்கு இலக்கியம் பிரச்சாரமாகவும் உருவெடுக்க வேண்டும்.

11. இறுதியாக நீங்கள் வெளியீடு செய்த 'வெந்து தணிந்தது காலம்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா, ஒரு வெற்றி விழாவாக இடம் பெற்றதாக அறிகின்றேன். இது பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
'ஓப்பாரி கோச்சி' க்குப் பிறகு, எனக்கு பெறும் வெற்றி தந்த வெளியீட்டு விழா வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் நடந்த 'வெந்து தணிந்தது காலம்' நூல் வெளியீட்டு விழாவாகும். அதே நாளில், அதே நேரத்தில் பக்கத்தில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலும் பிறிதொரு வெளியீட்டு விழா பிரமாதமாக நடந்தது. இருந்த போதிலும், அவ் விழாவில் கலந்து கொண்ட எனது இலக்கிய நண்பர்கள் அனைவரும், எனது விழாவிலும் கலந்து கொள்வதற்கு நிகழ்ச்சி நேரத்தை கொஞ்சம் சுணக்கும்படி கேட்டுக்கொண்டு, அவ்வாறே அனைவரும் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தமை எனது படைப்புக்குக்; கிடைத்த அங்கீகாரம் என்று பெருமையோடு நினைவு கொள்கின்றேன்.

12. இலக்கிய அமைப்புகளில் தாங்கள் அங்கத்துவராக இருக்கிறீர்களா? அவ்வகையான இலக்கிய அமைப்புகளின் சேவைகள் பற்றி குறிப்பிடுங்கள்?
நான் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் உப தலைவராக இருக்கின்றேன். மன்றத்தின் தலைவராக தெளிவத்தை ஜோசப் அவர்களும், இணைச் செயலாளர்களாக இரா. சடகோபனும், பதுளை சேனாதிராஜாவும் செயல்படுகின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன் உருவாகிய இந்த மன்றத்தின் மூலம் இன்றும் சிறுகதைப் போட்டிகள் நடத்துதல், நூல் வெளியீடுகள் செய்தல், மூத்த படைப்பாளர்களை கௌரவித்தல், அமரரான படைப்பாளிகளுக்கு நினைவு தினங்கள் நடாத்துதல், போன்ற பணிகளைத் தொடர்ந்த செய்து வருகின்றோம். இளம் படைப்பாளர்களின் இலக்கிய மன்றங்களோடு இணைந்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இணைந்து செயல்படுகின்றோம்.

13. 'மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்'; பற்றி என்ன குறிப்பிடப் போகிறீர்கள்?
இந்தத் தொகுப்பு இது வரை வெளிவந்த நூல்களைவிட நிறையவே பல பெறமதியான பாடல்களையும், வரலாற்றுப் படங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது. பாடசாலை, பல்கலைக் கழக மாணவர் மட்டத்திலும், சமூக நலன் விரும்பிகள் மத்தியிலும் இந்நூல் இன்று வரை ஆய்வுகளுக்குள்ளாகி வருகின்றது.

14. உங்கள் ஆக்கங்கள் எழுத்து வடிவில் மாத்திரம்தான் உள்ளதா? மேடைப் பேச்சுக்களில் ஏதும் பங்களிப்பு செய்து வருகின்றீர்களா..?
கணினி பதிவுகளிலும், றறற.அரளiஎயடiபெயஅ.உழஅ இணைய தளத்திலும் பதிவாகியுள்ளது. மேடைப் பேச்சுக்கு குறைவில்லை... வாய்தானே.

15. தற்போது ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் தலை நகரில் புத்தக வெளியீடுகள் இடம் பெறுகின்றன. இது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
மகிழ்ச்சியாகவுள்ளது. என்னதான் இலத்திரணியல் தொடர்பாடல்கள் இருந்தாலும், கைகளில், மடியில், தலையணை அடியில் ஒன்றியிருக்கும் அன்றைய புத்தகக் கலாச்சாரம் என்றும் அழியாது என்பதற்கும், இலக்கியத்தில் புதிய உத்வேகம் மலர்ந்துள்ளது என்பதற்கும் இந்த வேகமான வளர்ச்சி சான்று பகர்கின்றது.

16. பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவரும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பற்றி உங்கள் கருத்து எவ்வாறு இருக்கிறது?
புதுக் கவிதைகள் என்று எழுதி வருபவர்களில் 75 வீதமானவர்களை ஒதுக்கிவிட்டு, மீதமான 25 வீதத்தினர் மிகக் காத்திரமான, ஆழ்ந்த சிந்தனை நிறைந்த, மூத்த படைப்பாளர் வியந்து அவதானிக்கும் கதை, கவிதை, நாவல், விமர்சனம், ஆய்வுகள், ஆய்வுரைகள் என செயற்பட்டு வருபவர்கள் மதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.

17. புத்தகம், இணையம், பேஸ்புக் என்பன எந்த அடிப்படையில் இலக்கியத்தை வளர்த்து வருகின்றன...?
இணையமும், முக நூலும் புத்தகங்களை மீறிவிட முடியாது.
'ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி
ஒரு வரி கூட படிக்காவிடினும் சரி
நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும்
அழகான பொருட்கள் வேறு கிடையாது...'

என்று சிட்னி ஸ்மித் என்ற அறிஞர் கூறியுள்ளார்.

18. தற்கால இலக்கிய வளர்ச்சி எந்தளவில் இருக்கிறது?
படைப்பு வளர்ச்சி திருப்தியாகவும், வாசிப்பு வளர்ச்சி அதிருப்தியாகவும் இருக்கின்றன. தமிழகத்திலோ, எல்லாமே வித்தியாசம். சின்னத்திரை, பெரியதிரை, டீ.வி.டி. ஆகியன சவால் விட்டாலும், எழுதுபவர்கள் எல்லோரும் கார் வண்டி வைத்திருக்கிறார்கள். எழுதி எழுதி வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

19. இலக்கியத்தினூடாக அனைத்து சமூகங்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறீர்களா...?
இலக்கியம் வாசகர்களோடு சம்பந்தப்பட்டது.  எத்தனை வாசகர்கள் மத்தியில் போதனை செய்யப் போகிறோம்..? கல்வியினால் மாத்திரமே சமுதாயத்தில் மாற்றம் காணலாம். நாடு போகிற போக்கில்.... இலக்கியமும், கல்வியும் கூட கையாலாகாமல் போகலாம்.

20. உங்களுக்கு இதுவரை கிடைத்த பட்டங்கள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்?
பட்டங்களும், விருதுகளும் படைப்பிலக்கியங்களை சேதமாக்கக் கூடியவை. இருந்தபோதிலும் அதற்கான அங்கீகாரத்தை அவதானிக்க வேண்டும். எனது படைப்புகளுக்கு ஓருசில விருதுகள் கிடைத்துள்ளன.

21. இளம் படைப்பாளர்களுக்கு விசேடமாக தாங்கள் கூறும் அறிவுரைகள் என்ன?
அவர்கள் நிறைய வாசிக்க வேண்டுமென்பதே எனது அறிவுரை. வாசிப்பு தானாகவே படைப்பாளனை உருவாக்குகிறது. படைப்பாளன் சமூகவாதியாக உருவாக வேண்டும். அப்போதுதான், அவன் மக்கள் படைப்பாளனாக அடையாளமாகின்றான். அவனது படைப்புக்களும் மக்கள் இலக்கியமாகின்றது. இளைய தலைமுறைகள் இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்!!!

No comments:

Post a Comment