பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, 10 May 2015

40 வருடங்களாக தொடர்ந்து எழுதும் நாடறிந்த எழுத்தாளர் மொளலவி காத்தான்குடி பௌஸ் அவர்களுடனான நேர்காணல்

40 வருடங்களாக தொடர்ந்து எழுதும் நாடறிந்த எழுத்தாளர் மொளலவி காத்தான்குடி பௌஸ் அவர்களுடனான நேர்காணல்


01. உங்கள் ஆரம்பக் கல்வி, குடும்பப் பின்னனி பற்றி கூறுங்கள்?

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பின், காத்தான்குடி நகரத்தில் 27.04.1959 ஆம் ஆண்டு பிறந்தேன். எனது தாய் ஹாஜியானி ஹஸீனா உம்மா, தந்தை ஏ.பி. உதுமா லெப்பை ஆவார்கள். 16.01.1963 ஆம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடி 05ம் குறிச்சி அரசினர் முஸ்லிம் பாடசாலையில் (இன்றைய அல்ஹிறா வித்தியாலயம்) ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தேன்.

08.01.1970 ஆம் ஆண்டு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலத்தில்  06 ஆம் ஆண்டிpலிருந்து கல்வி பெற்றேன். 1971 ஆம் ஆண்டு முதல் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு இந்திய அதிராம் பட்டிணத்தைச் சேர்ந்த எம்.ஏ. அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்களிடமும், ஏனைய கல்விமான்களிடமும் மார்க்க ரீதியான கல்வியை பெற்றேன். 1978 ஆம் ஆண்டு அட்டாளைச் சேனை அல்குல்லியதுர் ஸர்கிய்யாவில் சேர்ந்து உயர் கல்வியை பெற்று 1980 ஆம் ஆண்டு மௌலவி பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன் அதே ஆண்டு அல் ஆலிம் பரீட்சையிலும் தோற்றி சித்தி பெற்றேன்.


02. உங்களது இலக்கியப் பிரவேசம் பற்றி குறிப்பிடுங்கள்? 

05.07.1974 ஆம் ஆண்டு ஜாமிஅதுல் பலாஹ்வினால் வெளியிடப்பட்ட 'நூறுல் பலாஹ்' மலரில் முதலாவது கவிதை இடம்பெற்றது. அதன் பெயர் 'முத்தான் குர்ஆன்' முற்றிலும் மரபுக் கவிதை.

31.07.1975 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் காத்தான்குடி நிருபராக நியமனம் பெற்றேன். அதுமுதல் நிறைய நிறைய எழுதினேன். தேசிய பத்திரிகைகளிலும், கையெழுத்துப் பத்திரிகைகளிலும் எழுதினேன்.


03. இத்துறைக்குத் தூண்டுதலாக அமைந்தவைகள் பற்றி?

நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் தினபதி, சிந்தாமணி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் சிறந்த எழுச்சி கொள்ளும் தமிழ் கட்டுரைகள், கவிதைகள் பிரசுரமாகியது, அதனால் கவரப்பட்டு எழுத்துலகில் எழுதுவதற்கு ஒரு உந்து சக்தியாக அமைந்தது. அத்துடன் காயல்பட்டண எழுத்தாளர் அல்ஹாபிழ் எம்.கே. செய்யதஹ்மத் அவர்கள் எனது கவிதைகளை படித்து மிகவும் பாராட்டினார். அந்த உற்சாகம் என்னை தொடர்ந்து எழுத துணை போனது.


04. உங்கள் எழுத்துலக முன்னோடிகள் பற்றி கூறுங்கள்?

எனது ஆரம்ப ஆசான் எம்.எம்.எம். மஃறூப் கரீம் தமிழரிஞர். ஜே.எம். ஆப்துல் காதர், கவிஞர் அப்துல் காதர் லெப்பை, மௌலவி எம்.எச்.எம். புஹாரி, கவிஞர் சாந்தி முகைதீன், மானா மக்கீன், சட்டத்தரணி திரு. சிவகுருநாதன், போன்றவர்களைக் குறிப்பிடலாம்.


05. கவிதைகள் எழுதுவதில் எப்படி நாட்டம் வந்தது?
எனக்குத் தெரியாமலேயே கவிதைப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள், புரட்சிக் கமால் சாலி போன்றோரின் கவிதைகளைப் படிப்பதன் மூலமும் கவியரங்குக் கவிதைகளை கேட்பதன் மூலமும் அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.


06. இதுவரை எத்தனை புத்தகங்களை வெளியிட்டுள்ளீர்கள். விபரம் தரமுடியுமா?

இதுவரை இருபத்தியொரு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன்.
 
1. மார்க்கத்தின் மனக்கதவு 2006 (கட்டுரை)
2. காதிகோட் 2006 (கவிதை)
3. போதனைப் பொக்கிஷம் 2006 (கட்டுரை)
4. முஅத்தினின் முறைப்பாடு 2006 (கவிதை)
5. வைகறை வாசம் 2006 (கவிதை)
6. நிறைமார்க்கத்தின் நிலாமுற்றம் 2007 (கட்டுரை)
7. காத்திருந்த கண்கள் 2007 (சிறுகதை)
8. ஊடகத்தில் உதித்த உபதேசங்கள் 2007 (கட்டுரை)
9. விடியலை நோக்கிய விசுவாசிகள் 2007 (கட்டுரை)
10. சின்னச் சின்னப் பூக்கள் 2007 (சிறுவர் கவிதை)
11. பாரெங்கும் பலஸ்தீனம் 2007 (கவிதை)
12. ரமழானின் அமல்கள் 2008 (கட்டுரை)
13. பாசம் சென்ற பாதையில் 2009 (கவிதை)
14. பேனைக்குள் பெருக்கெடுத்த பெரியவர்கள் 2010 (ஆய்வு)
15. எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசை ஞானம்
                                                                                                2011 (ஆய்வு)
16. அல்குர்ஆன் ஓர் ஆய்வு கூடம் 2013 (ஆய்வு)
17. ஈராயிரம் நூல்களை ஆய்ந்த பேராசிரியர் அல்லாமா உவைஸ்
                                                                                         2014 (நவீன கவிதை)
18. நபிகள் நாயகமே 2014 (கவிதை)
19. பன்னீராகும் கண்ணீர் 2014 (கட்டுரை)
20. விடியலுக்கான விலாசங்கள் 2014 (கவிதை)
21. மார்க்கத்தின் மணித்துளிகள் 2014 (கட்டுரை)


07. உங்கள் இதர வெளியீடுகள் ஏதாவது உண்டா?

01.01.1998 ஆம் ஆண்டு 'பா' என்ற கவிதை பத்திரிகையை காத்தான்குடி பாவலர் பண்ணையின் மூலம் வெளியிட்டேன். இலங்கையின் முதலாவது கவிதை பத்திரிகையாக இது பேசப்படுகின்றது. 2000 ஆம் ஆண்டு மீலாத் நபி உரை பாகம் 1, பாகம் 2 பேருவிலை நபவிய்யா இயக்கத்தினால் வெளியிடப்பட்டது. (இது 2 மணிநேர ஒலி நாடாவாகும். 2005 ஆம் ஆண்டு சுனாமி ஒரு சோதனையா? படிப்பினையா? ஒலிநாடா (சுனாமி பற்றிய பேச்சு) இதனை பலப்பிட்டி இளைஞர் இயக்கத்தால் வெளியிடப்பட்டது.


08. உங்கள் திருமணம், பிள்ளைகள் பற்றிக் கூறுங்கள்?

1987 ஆம் ஆண்டு காத்தான்குடியைச் சேர்ந்த நூர்தீன் ஐனுல் ரிபாயா என்ற பெண்ணை மணமுடித்தேன். இவர் ஓர் இலக்கிய ரசிகை. எங்களுக்கு 1995 ஆம் ஆண்டு ஆண் மகன் பிறந்தார். அவரின் பெயர் முஹம்மத் ஸைனி கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்தர வகுப்பை முடித்து விட்டு மேலதிக கல்விக்காகக் காத்திருக்கின்றார்.


09. உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் யார்? 

கலைவாதி கலீல், கலைவானர் ரஜா B.A.,M.A அவர்களும், ஏ.ஆர்.எம். ஜிப்ரி, சாந்தி முகைதீன் புரவலர், அல்ஹாஜ் அஹ்மத் புவாத் போன்றேரை குறிப்பிடலாம்.


10. நூல்கள் வெளியிடும் போது ஏதேனும் சவால்கள் உண்டா?

பெரிய சவால்களை எதிர்கொள்வதில்லை ஆனாலும், வெளியீட்டு அன்று விடியலில் தொலைபேசி அலறும், வராதவர்களின் செய்திகளை அது வரிசைப்படுத்தும். அதில் நிறைய எழுத்தாளர்கள் இருப்பார்கள். மனம் தளரும், மனைவி, மகன், மாணவர்களின் உந்து சக்தியாலும், இறை உதவியாலும் வெளியிடுவேன்.

அல்லாமா உவைஸ் அவர்களின் நூலை வெளியீடு செய்யும் முன்பதாக, இந்த வெளியீட்டை கொச்சைப்படுத்த சில எழுத்தாளர்கள் தலை நீட்டி இருந்தார்கள். அழைப்பில் இருந்த எழுத்தாளர்களில் 100 பேர் வரவில்லை என்பது கவிஞர் கலைவாதியின் கணிப்பீடாகும். ஆனால் நூல் வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்றது.11. உங்கள் பத்திரிகை படைப்புக்கள் பற்றி கூற முடியுமா?

எனது ஆக்கங்கள் இலங்கை, இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் குறிப்பாக தினகரன் வார மஞ்சரி, தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, மித்திரன், தினக்குரல், ஞாயிறு தினக்குரல், சுடர்ஒளி, ஜூம்ஆ, நவமணி, பதுப்பாதை, கலைத்தீபம், பாசமலர், யாத்ரா, முஸ்லிம் இசை உலகம், ஜே, பிறை, சமரசம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


12. வானொலி பங்களிப்புக்கள் பற்றி கூற முடியுமா?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் பல்வேறு தலைப்புக்களில் குரல் கொடுத்து இருக்கின்றேன். அல்குர்ஆன் விரிவுரை, ஹதீஸ், பொன்மொழிகள், நினைவு தினப்பேச்சு, காலைச் சிந்தனைகள், கஸீதாக்கள், கவியரங்குகள் போன்றவற்றிலும், மலையக வானொலி, சூரியன் எப்.எம், சக்தி எப்.எம், வர்த்தக சேவை, றிஸாலா எப்.எம், பிறை எப்.எம், சர்வதேச ஒன்லைன் ஆகியவற்றிலும் பேசியுள்ளேன்.


13. உங்கள் தொலைக்காட்சி பங்களிப்புக்கள் பற்றி?

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் பயான், பேட்டிகள், கலந்தாலோசனைகள், கவிதைகள் போன்றவற்றிலும் அதுபோல் வசந்தம் ரீ.வி, சக்தி ரீ.வி, டயானாவின் ரீ.வி, நேத்ரா ரீ.வி, டான் ரீ.வி, ரீ.என்.எல். ரீ.வி, ஹிரு ரீவி, வெற்றி ரீ.வி ஆகியவற்றில் பங்களிப்புச் செய்துள்ளேன். பல ஆண்டுகளாக ஐ.ரீ.என் ரீவியிலும் டான் ரீவியிலும் காலைச் சிந்தனையை தொடர்ந்து வழங்குகின்றேன்.


14. உங்கள் படைப்புக்களுக்கு எழுத்தாளர்கள் மத்தியில் வரவேற்பு உண்டா?

எனது ஆக்கங்களை எழுத்தாளர்கள் நிறைய வாசிக்கின்றார்கள். வாழ்த்துச் சொல்கின்றார்கள். பல பல்கலைக்கழக வேந்தர்கள் என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வார்கள். சில எழுத்தாளர்கள் உடன் பாராட்ட மாட்டார்கள் காண்கின்ற பொழுது உங்கள் ஆக்கம் நல்லாயிருந்தது என நாவிருந்தும் நாவிழந்து நவிழுவார்கள்.


15. உங்களுக்கு தொடர்ச்சியாக எழுதும் வாய்ப்பு கிடைத்ததா?

அப்படியான வாய்ப்புக்கள் நிறையக் கிடைத்தது. 1977 ஆம் ஆண்டு ஜூம்ஆ பத்திரிகையில் பிரதி வாரமும் 'தூக்கம் தரும் குத்பா ஊக்கம் தரல் வேண்டும்' எனும் தலைப்பில் கவிதை எழுதினேன்.
1991 – 1992 ஆம் ஆண்டுகளில் ரமழான் மாதம் எனது கட்டுரை தொடர்ச்சியாக வெளிவந்தது.
01.10.2000 ஆம் முதல் 'நீரிழிவு ஒரு சீரழிவு' எனும் கேள்வி, பதில் நவமணியில் தொடர்ந்து வெளிவந்தது.
01.07.2001 முதல் பலஸ்தீன விடுதலைக் கவிதை தொடர்ச்சியாக நவமணியில் பிரசுரமானது.
02.11.2001 முதல் 'முஅத்தினின் முறைப்பாடு' கவிதை நவமணியில் தொடர்ச்சியாக வெளிவந்தது.
01.09.2002 இல் 'காதிகோட்' எனும் கவிதை நவமணியில் தொடராக பிரசுரிக்கப்பட்டது.
2002 முதல் 'மக்காவின் மார்க்கத் தீர்ப்புக்கள்' அஹதியா மாத இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தது.
2003 முதல் 'இஸ்லாமிய கட்டுரைகள்' மித்திரன் வார மலரில் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்டது.
2008 முதல் 2009 வரை இசை உலகம் சஞ்சிகையில் இசை பற்றிய கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதினேன்.

 
16. நீங்கள் பதவி வகித்த மன்றங்கள் பற்றி?

காத்தான்குடி இஸ்லாமிய நலன்புரிச் சங்கம், காத்தான்குடி நவ இலக்கிய மன்றம், காத்தான்குடி பாவலர் பண்ணை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, அகில இலங்கை கதீப்மார்கள் சம்மேளனம், உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம், மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவை, அகில இலக்கை எழுத்தாளர் ஒன்றியம், பாணந்துறை பிரதேச சர்வ சமய ஆலோசனைத் தலைவர், கல்முனை, தடாகம் கலை இலக்கிய வட்டம் ஆகிய வற்றில் இணைந்து செயல்பட்டேன்.


17. உங்கள் பொதுப்பணிகள் பற்றி கூறமுடியுமா?

எனது இளமைக்கால முதல் பொதுப்பணியில் ஈடுபட ஆரம்பித்தேன். காத்தான்குடி கலாச்சார பாலர் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றினேன். காத்தான்குடி இக்பால் சனசமூக பாலர் பாடசாலையில் அதிபராக கடமையாற்றினேன். சர்வோதய பாலர் பாடசாலைகளில் பயிற்சி வழங்கும் ஆசிரியராகக் கடமையாற்றினேன். பாணந்துறை ஹேனமுல்லையில் அல்முபாறக், அல்பலாஹ் போன்ற மத்ரஸாக்களின் அதிபராக கடமையாற்றினேன்.

சர்வோதயத்தில் எனக்குக் கிடைத்த பயிற்சிகளும் செஞ்சிலுவைச் சங்கத்தில் கிடைத்த பயிற்சிகளும் பல பள்ளிவாயல்களை, மத்ரசாக்களைக் கட்டி எழுப்ப பேருதவியாக அமைந்தது. பலப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாயலின் பல பகுதிகளை செப்பனிட ஒன்பது வருடங்கள் பாடுபட்டதோடு சிங்கள, முஸ்லிம் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்தினேன்.

பலப்பிட்டியில் முதன் முதலில் 'பர்தா' அணியும் பாங்கை முஸ்லிம் வித்தியாலயம், றேவத்தை மகா வித்தியாலயம், தர்மாஸோக்க வித்தியாலயம், போன்றவற்றிலும் அஸ்அரிய்யா மத்ரஸாவிலும் தோற்றுவித்தேன். பாணந்துறை அல்முபாறக் ஜூம்ஆ பள்ளியின் புணர் நிர்மாணத்திற்காக 24 வருடங்களாக முயற்சி செய்து சிறப்புக் காண்கின்ற இப்பள்ளியில் பிரதி வாரமும் ஜூம்ஆ ஓதி சமூக சிந்தனைகளை ஏற்படுத்தி வருகிறேன். 1994 ஆம் ஆண்டு முதல் இதுவரை 'சப்ரா டிரவல்ஸ்' மூலம் 16 ஹஜ்ஜூஹலுக்குச் சென்று, ஹாஜிஹளுக்கு என்னாலான உதவிகளைச் செய்து வருகிறேன். இன்னும் வயோதிபர்கள், அநாதைகள், சுகயீனமுடையர்களுக்கும் என்னாலான உதவிகளைச் செய்வதுடன் அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கும் சென்று நோயாளிகளை விசாரித்து அன்பளிப்புகளையும் வழங்கி வந்துள்ளேன்.


18. மெல்லிசைப் பாடல்கள் எழுதும் நீங்கள், பாடலாசிரியர்களுக்கு கூற நினைப்பது என்ன?

நான் இருபதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய கீதங்களை கருநாடக இசையில் எழுதி வானொலி முஸ்லிம் சேவையில் பாடவிட்டேன். பாடகர் சங்கீத வித்துவான் கலாபூஷணம் ஜப்பார் மாஸ்டர் பாடினார். அவரின் மகன் எம்.ஜே.எம். அன்ஸாரும் பாடினார். தொலைக்காட்சியில் கலைக்கமல் போன்றோரும் பாடியுள்ளனர். பாடலாசிரியர்கள் கருப்பொருளையும், இசைக்கேற்ப இலக்கிய நயங்களையும் கையாள்வது நல்லது.


19. இலக்கியம் இன ஒற்றுமைக்கு பாலமாக அமையுமா? 

நிச்சியமாக அமையும். இன்றைய கொழும்பு தமிழ் சங்கத்தில் இனவேறுபாடின்றி களம் கிடைப்பதும், வானொலி, தொலைக்காட்சியில் இலக்கிய கர்த்தாக்கள் எழுதுவதும், கலந்து கொள்வதும் இனத்துவேசம் துறந்த இலக்கிய இணைவாக அமைகிறது. இன ஒற்றுமைக்கு இலக்கியம் மட்டுமே பாலமாக அமைகிறது.


20. மரபுக் கவிதை, புதுக்கவிதை பற்றிய உங்கள் பார்வை எப்படியிருக்கின்றது?

கவிதை இலக்கியம் என்பது ஒரு மாடி வீடு போன்றது. மரபுக் கவிதை மாடிக்குச் செல்லும் படிகள். புதுக்கவிதை அதே மாடிக்கு அழைத்துச் செல்லும் மின்தூக்கி (லிப்ட்) போன்றதாகும்.


21. இலக்கிய வாதிகளின் எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

ஆரம்ப காலத்தில் எழுத்தாளர்கள் வாய்மை, வாக்குறுதி, சொன்னதைச் செய்யும் தன்மை, விட்டுக்கொடுப்பு, இளையவர்களை ஊக்குவித்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்தனர். இப்போதெல்லாம் எழுத்தாளர்களிடம் மேல் சொன்ன விடயங்களை சுழி ஓடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. சுழி ஓடியின் முடிவை எதிர் பார்ப்போம்.


22. இப்போது எவ்வகையான நூல்களை வாசிக்கிறீர்கள்? 

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எவ்வகையில் இருப்பு இருக்கிறது? என்பதை காட்டும் நூல்களை மட்டும் தேடி வாசிக்கின்றேன்.


23. உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்? 

1989 'சிறந்த அறிவிப்பாளர்' சான்றிதழ் யௌவன சமாஜ பலப்பிட்டிய.
1997 மாத்தளை முஸ்லிம் காங்கிரஸ் கவிதைப் போட்டியில் சிறப்பு சான்றிதழ்.
1999 சாம ஸ்ரீ கலாஜோதி பட்டம் அகில இன நல்லுறவு ஒன்றியம்.
2002 கொழும்பு துறைமுக அபிவிருத்தி கப்பல் துறை அமைச்சு நடாத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பாராட்டுப் பத்திரமும், நினைவுச் சின்னமும் பெற்றேன்.
2003 ஆம் ஆண்டு மர்ஹூம் கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸ் மன்றம் நடாத்திய ஷம்ஸ் நினைவு கட்டுரைப் போட்டியில் பாராட்டுச் சான்றிதழ் பெற்றேன்.
2003 ஆம் ஆண்டு 'தத்துவ வித்தகர்' பட்டம் பாணந்துறை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தினால் வழங்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாச்சார அகில இலங்கை மீலாத் விழா கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்று மலரில் கௌரவிக்கப்பட்டேன்.
2005 ஆம் ஆண்டு 'நாவேந்தர்' பட்டம் பலப்பிட்டிய இஸ்லாமிய நலன் புரிச் சங்கத்தினால் வழங்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டுகள் முன்னால் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வரினால் 'பத்ருல் மில்லத்' என்ற பட்டம் தரப்பட்டது.
2006 ஆம் ஆண்டு காத்தான்குடி பாவலர் பண்ணையினால் 'கவிச்சுடர்' விருது தரப்பட்டது.
2007 ஆம் ஆண்டு காத்தான்குடி பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட சாகித்ய விழாவில் 'இலக்கிய ஜோதி' எனும் பட்டம் கிடைக்கப் பெற்றேன்.
2009 இல் அகில இலங்கை முஸ்லிம் களைஞர் முன்னணியினால் 'மார்க்க மணிச்சுடர்' எனும் பட்டம் கிடைத்தது.
2011 ஆம் ஆண்டு இந்திய தமிழ் நாடு இஸ்லாமிய இலக்கிய கழகத்தினால் 15 ஆவது ஆண்டு இலக்கியப் பெருவிழா காயல்பட்டணத்தில் ஜூலை 8,9,10 திகதிகளில் நிகழ்ந்த போது 'ஷைகு முஸ்தபா நாயகம்' எனும் ஆய்வு கட்டுரையும் 'ஊடகம்' எனும் தலைப்பில் கவிதையும் பாடி சான்றிதழ்கள் பெற்றேன்.
20, 22 மே 2011 இல் மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு மலேசிய பல்கலைக்கழக சான்றிதழைப் பெற்றேன்.
13.08.2011 இல் இலங்கை பாயிஸ் மக்கீன் நிறுவனத்தினால் இந்திய ஆய்வுகளுக்காக விருதும், சான்றிதழும் பெற்றேன்.
13.05.2012 தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் இலங்கை வானொலி புகழ் ராஜேஸ்வரி சன்முக விருது தந்து கௌரவித்தனர்.
2012 மே அகில இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பினால் அய்றாஸ் விருது பெற்றேன்.
2012 இல் மலையக கலை, கலாச்சார இலக்கிய சங்கம் மட்டக்களப்பில் நடாத்திய மாநாட்டில் 'இரத்தின தீபம்' விருதைப் பெற்றேன்.
2014 இல் பேராசிரியர் அல்லாமா உவைஸின் நினைவாக கொழும்பு தமிழ் சங்கத்தில் 'பல்கலைச் செல்வர்' எனும் விருதை உவைஸ் பணி மன்றத்தினால் பெற்றேன்.


24. வேறு ஏதும் விசேட சான்றிதழ்கள் கிடைத்ததா?

2011 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய பேரவையினால் மிகச் சிறந்த நூலுக்கான கான்றிதழ் 'எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசை ஞானம்' எனும் எனது நூலுக்குக் கிடைத்தது.
2012 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய பேரவையினால் மிகச் சிறந்த நூலுக்கான சான்றிதழ் எனது 'அல்குர்ஆன் ஓர் ஆய்வு கூடம்' நூலுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.


படைப்புகளை எழுதும் போதும், எழுதி முடிந்த பின்பும் உங்கள் மனது எப்படி இருக்கும்?
படைப்புகளை எழுதும் போது எப்போதும் தலைப்புக்களைத் தீர்மானித்துக் கொள்வேன். அந்தத் தலைப்புக்கான கருத்துக்கள், விடயத்தனங்கள், 
ஒப்புவமைகள், இலக்கியத் துணுக்குகள் அனைத்தையும் என் மனக்கண்முன் 
நிறுத்திக்கொள்வேன். 
சில வேளை எழுதிக்கொண்டு போகும் போது தானாகவே விடயங்கள் ஊற்றெடுத்து வந்து கொண்டிருக்கும். அது ஆண்டவனின் அருள். சிலவேளை அவசரமாக பல மீடியாக்களில் எழுதும்படி அழைப்புவரும் அவ்வப்போது அவைகளை விரைவாக எழுதினாலும், இது சமூகத்தின் முன்னாள் நாளை வரப்போகிறது. கருத்துப் பிழைகளோ, எழுத்துப் பிழைகளோ இருக்கக்கூடாது என்று 
எண்ணுவதுண்டு, பதருவதும் உண்டு. 
சமூகத்தில் பல கண்ணோட்டத்துடன் நோக்குவார்கள். சமயக் கட்டுரைகளாயின் மேலும் கவனம் எடுத்துக்கொள்வேன். ஆதாரங்கள், ஆய்வுகள் பிழைக்கக் கூடாதென்பதில் உறுதியாக இருப்பேன். சில நேரத்தில் பல தலைப்புகளில் எழுதவேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறாயின் இரவு பகல் பாராமல் இருந்து எழுதுவேன்.
எனது எழுத்துக்களுக்கு எனது மனைவி, மகன் ஆகியோர் உந்து சக்தியாக 
இருப்பார்கள். எனது படைப்புகளுக்கு எப்போதும் பிரதி வைத்து எழுதுவேன். 
ஆரம்பகால எழுத்துக்கள் அத்தனையும் பிரதி செய்யப்பட்டு பைல்களில் (Files பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. நூல்களாக எழுதும் கட்டுக்கட்டான குறிப்புகள், 
கட்டுரைகள் இன்றும் பத்திரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. எனது ஆக்கங்களை எழுதும் போது இன்னுமொரு மானுடனுக்கு பிரயோசனம் நல்குவதாக 
அமைய வேண்டுமென எனக்குள் எப்போதும் எண்ணிக்கொள்வேன். ஒரு 
ஆக்கத்தை எழுதிவிட்டு பல முறை படித்துப் பார்ப்பேன். பிழைகள் இருப்பின் அதனை திருத்துவேன். முடியாது போனால்; திருப்பி எழுதுவேன். பல 
எழுத்தாளர்கள் பிழையான குறிப்புகளை பல முறை திருத்தி எழுதியதை 
மனதில் கொள்வேன்.

எனது ஆக்கம் வெளிவந்ததும், அதிகாலையில் ஓடோடி பத்திரிகை, 
சஞ்சிகைகளை வேண்டுவேன். முதலில் எனது ஆக்கத்தை படித்துப் 
பார்ப்பேன். குழந்தை சரியாக பிறந்திருக்கிறதா? என்பதுதான் அந்த வாசிப்பின் தேடலாக அமையும். அதிகமாக நல்ல அமைவுகளுடன், படங்களுடன், 
தலைப்புகளுடன், வர்ணங்களுடன் ஆக்கங்கள் வெளிவந்திருக்கும். சில 
வேளைகளில் வரிக்கு வரி பிழையாக அங்கவீனப்பட்டு அந்த ஆக்கங்கள் 
வெளிவந்திருக்கும். அன்றைய காலை நேரம் ஆக்கம் வந்த சந்தோஷம் 
ஒருபுறம் இருந்தாலும் அதிகமான அச்சுப் பிழைகளுடன் வந்திருக்கிறதே 
என்பதை நினைத்து மன வேதனைப்பட்டுக்கொள்வேன். 
அதன் பின்னர் வெளிவந்த எனது ஆக்கங்களை ஒட்டுப் புத்தகத்தில் 
ஒட்டிக்கொள்வேன். சிலருக்கு எனது ஆக்கம் வந்த செய்தியைச் சொல்லி 
படிக்கச் சொல்வேன். சிலர் எனக்கு தொலைபேசியில் கருத்துச் சொல்வார்கள். இப்போதெல்லாம் குறுந்தகவல்கள் நிறைய வரும், பாராட்டி வந்த கடிதங்கள் அதிகம் எனக் கூறலாம். சமகால எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்? 
முருகேசு ரவீந்திரன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், அஷ்ரப் சிஹாப்தீன், கலைவாதி கலீல், கிண்ணியா அமீர் அலி, அன்புமணி, மு. மேத்தா, கவிக்கோ அப்துல் 
ரஹ்மான், குருவிப்பேட்டை சண்முகம், எழுத்தாளர் பாலகுமாரன், 
தமிழவவன், கவிஞர் காலப்பிரியா, கவிஞர் சாந்தி, முகைதீன், எஸ்.எச்.எம். ஜெமீல், பேராசிரியர் அனஸ், டாக்டர் தாஸிம் அஹ்மத், மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத், எம்.எம். நிழாம் (தினக்குரல்), சுஐப் எம். காசிம், கவிஞர் எம்.எச்.எம்.
புஹாரி, திக்குவல்ல கமால், முகைதீன் ரஜா, நயிமா ஸித்தீக், ஜெரீனா 
முஸ்தபா, வெலிகம ரிம்ஸா முஹம்மத், ஹிதாயா ஏ. மஜீத், லுனுகல சிறி, 
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா என்று அடுக்கிக்கொண்டே போகலாம். 
இவர்களின் எழுத்துக்களில் சமூகத் துடிப்பை காண்கிறேன். 

தற்கால பாடசாலை மாணவர்களின் இலக்கிய ஆர்வம் குறித்து உங்களது கருத்து என்ன? 
தற்கால பாடசாலை மாணவர்கள் தமிழ், இஸ்லாமிய முக்கிய தினங்கள், 
பண்டிகைகள், பெருநாள்கள் போன்றவற்றை கௌரவிக்கும் பொருட்டு
பாடசாலைகளில் இலக்கியக் கட்டுரைகள். கவிதைகள், விவாத அரங்குகள், 
நாடகங்கள், வில்லுப்பாட்டு என்றெல்லாம் இலக்கியப் பணியை 
செய்துகொண்டு போகின்றார்கள்.  
ஆசிரியர்களின் தூண்டுதலால்தான் அதிகமாக இலக்கிய முயற்சியில் 
ஈடுபடுகின்றார்கள். இன்னும் பல பாடசாலைகளில் நூலங்களைப் பயன்படுத்தி நல்ல இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். அதனால் தூண்டப்பட்டு, கவரப்பட்டு இன்று பலர் மீடியாக்களில் கூட நல்ல பெயரெடுத்து பிரசித்தம் 
பெற்றுள்ளார்கள். வெள்ளையாடையில் நாம் வீற்றிருப்போம். பாடசாலை 
கல்வி மட்டும் போதும் என்று ஒற்றையடிப் பாதையில் கால் வைக்காமல் 
இயல்பாக இலக்கியத்தில் கால் பதிக்க வேண்டும்.
ஹைக்கு கவிதையொன்றில் `கடிக்கும் கொசு அடிக்க மனசில்லை, வெள்ளையாடை' வெள்ளையாடையில், வேறென்ன இலக்கியம்? என்றிருக்காமல் மனிதனை 
புனிதனாக்கும் இலக்கிய முயற்சியில் பாடசாலை மாணவர்கள் ஈடுபட 
வேண்டுமென்பது எனது அவா! ஈழத்தில் நாவல் இலக்கியம் எவ்வாறு வளர்ந்துள்ளது?
இந்தியாவிலும், இலங்கையிலும் நாவல்கள் வெளிவரத் தொடங்கியது 6 
வருட இடைவெளி எனக்கூறலாம். 1979 ஆம் ஆண்டு தமிழ் நாட்டைச் சேர்ந்த மயூரம் சினா. தேவநாயகம் பிள்ளை எழுதிய `பிரதாப முதலியார் சரித்திரம்' வெளிவந்தது. இதன் பின்னர் 6 வருடங்கள் கழித்து 1985 ஆம் ஆண்டு 
முஹம்மது காசிம் சித்திலெப்பை ஷஅசன்பே சரித்திரம்| என்ற நூலை 
இலங்கையில் எழுதி வெளியிட்டார். 1991 ஆம் ஆண்டு திருகோணமலையைச் சேர்ந்த எஸ். இன்னாசித்தம்பி எழுதிய `உசைன் பாலந்த கதை', 1893 ஆம் 
ஆண்டு எஸ்.வை. குருஸ்வாமி ஷர்மா எழுதிய `பிரேம கலாவதியம்' என்ற 
நாவலும், 1895 திருகோணமலையைச் சேர்ந்த திரு. சரவணமத்து பிள்ளை 
எழுதிய `மோகனாங்கி நாவல்' 1896 இல் ராஜம் ஐயர் எழுதிய `கமலாம்பான்' சரித்திரம் எனும் நாவல் வெளிவந்தது. 1898 அ.மாதவையா எழுதிய `பத்மாவதி' சரித்திரம் நாவல் வெளிவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் 7 நாவல்கள் வெளிவந்தது. 1901 ஆம் ஆண்டு `இன்பவதி' என்ற நாவலை த. கைலாசபிள்ளை எழுதினார். 
1904 ஆம் ஆண்டு சுவாமி சரவணமுத்து `கலாவதி' என்ற நாவலையும், 1995 சி.வை. சின்னப்பிள்ளையின் `வீரசிங்கன் கதை' நாவலும், 1918 இல் புலோலி 
சுப்ரமணியம் சன்மார்க்க ஜெயம் நாவலையும், 1923 இல் `நீலாக்ஷி துண்மார்க்க முடிவு' நாவலையும், 1924 இல் செல்லம்மானின் `இராசதுரையும்' 1929 இல்
`காணாமல்போன பெண்' என்ற நாவல் வெளிவந்தது. இப்படியாக 1930 முதல் 
1940 வரை நாவலுக்கென சிறந்த காலமென்று கூறமுடியும். 2000 ஆம் ஆண்டு பிற்பகுதியில் பெண்களும் ஆண்களுமாக பலர் நாவல்களைப் படைத்திருக்கின்றனர். ஜெரீனா முஸ்தபாவின் ஒரு அபலையின் டயரி, இது ஒரு
ராட்சஷியின் கதை, 37ஆம் நம்பர் வீடு முதல் இன்ஷிரா இக்பாலின் நிழலைத்தேடி போன்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் வரை நாவல்கள் எழுதி நல்ல 
பயன்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.

பிற மொழியிலான இலக்கியங்களை தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்துள்ளீர்களா?
அரபு மொழியில் ஆக்கப்பட்ட ஆக்க இலக்கியங்களை தமிழ் வடிவிற்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். அந்த வகையில் அல் வகீலு அலியுல் பைபிய்யு என்ற கவிஞரின் பாலஸ்தீன கவிதைகளை 1976 ஆம் ஆண்டு மிக 
ஆக்ரோஷத்துடன் தமிழில் மொழி பெயர்த்து பரிதாபகரமான யுத்தகால 
படங்களுடன் 02 செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு நூல் வடிவாக வெளியிட்டேன். அதன் பின்னர் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதிய இஹ்யா 
உலூமுத்தீன் எனும் நூலில் ஷகிதாபுஸ்ஸமா| என்ற இசை சம்பந்தப்பட்ட 
பகுதியை அப்படியே மொழிபெயர்த்து ஷஎகிப்து முதல் இலங்கை வரை 
இஸ்லாமியர்களின் இசை ஞானம்| எனும் தலைப்பில் 06.06.2011 இல் நூலாக வெளியிட்டேன். இந்நூல் யாழ்ப்பாணத்தில் ஆய்வு நூலாக 
பிரகடனப்படுத்தப்பட்டு பல்கலைகழகங்களில் ஆராயப்படுகின்றது. இது 
போன்ற பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.
கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் இவற்றில் ஈழத்தில் அதிக வரவேற்பு எதற்கு? ஏன்? 
இலங்கையில் கவிதை பிரியர்கள் அனேகப்பேர் இருக்கின்றனர். அதனால் 
அடிக்கடி கவிதை நூல்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. சிறுகதை 
இலக்கியம் சிலரையே சென்றடைந்துள்ளது. பாடசாலை மாணவர்கள் 
விருப்பில் படிக்கின்றார்கள். நாவலை பொறுத்தவரையில் இதற்கு வாசகர் 
வட்டமுண்டு. ஆபாச நாவல்கள், துப்பறியும் கதைகளை நூலகங்களில் 
நுகர்வோர் அதிகம் உள்ளனர். சிறுவர் இலக்கியம் இன்று அதிகம் விற்பனை 
ஆகிக்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் டொலர், பவுண்களை 
செலவு செய்து வேண்டுகின்றனர். சிறுவர் இலக்கியத்திற்கு அதிக கிராக்கி 
உள்ளது. காரணம் சிறுவர்களுக்கான வாசிப்புக்கள் வர்ணங்களில் 
படங்களுடன் வெளிவருவது ஒரு காரணமாகக் கொள்ளலாம்.

25. இப்பேட்டியின் மூலம் நீங்கள் சொல்லப்போவது என்ன? 

இலக்கியம், படைப்புகள் அனைத்தும் பொறாமையற்ற நிலையில் படைக்கப்படுவதுடன் துவேசம் இல்லாத யுகத்தை நோக்கி பேனா ஊன்றப்பட வேண்டும். ஆண்களைப் போல் பெண் எழுத்தாளர்களும் மதிக்கப்பட வேண்டும். மற்றவர்களின் இலக்கியங்களை மதித்து வாசிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்த வேண்டும்!!!

No comments:

Post a Comment