பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, 18 September 2012

ஜனாப் உ. நிசார் அவர்களுடனான நேர்காணல்

01. உங்கள் பிறந்த இடம், கல்லூரி வாழ்க்கை என்பவற்றைக் கூறுங்கள்?

கண்டி மாவட்டம் உடுநுவரைத் தேர்தல் தொகுதியில் அமைந்த முருத்தகஹமுல கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி நான் பிறந்தேன். எனது தந்தையின் பெயர் இ. ஹாமிது லெப்பை மத்திசம். தாயாரின் பெயர் செ. ஹவ்வா உம்மா. எனக்கு ஏழு சகோதர சகோதரிகள் இருந்தார்கள். அவர்களுள் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினராக இருந்து, காலஞ்சென்ற ஜனாப் எச்.எல்.எம். ஜவ்பர் அவர்கள் எனது சகோதரர்களுள் ஒருவராவார்.

மகாவலி நதியின் பிரதான நீர் ஓடைகளில் ஒன்றான கெலிஒயா, எமது கிராமத்தின் ஊடாகவே ஓடுகிறது. அன்று அதன் சுற்றுப்புரங்கள் எங்கும் போல மலைகள், காடுகள், வயல் வெளிகள், நீர் நிலைகள் என இயற்கை வளங்கள் நிறைந்ததாகக் காணப்பட்டன. நான் சிறுவயது முதல் இங்கிருந்த இயற்கையின் அழகை இரசித்தது மட்டுமல்லாமல் இயற்கையின் இரகசியங்களை கண்டறியவும் சில முயற்சிகள் செய்துள்ளேன். அதனால்தான் எனது அதிகமான சிறுவர் பாடல்களில் இயற்கையுடனான எனது உறவு பிரதிபலிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அது மட்டுமல்ல நான் எழுதிய அதிகமான கவிதைகளில் படிமங்களும் குறியீடுகளும் இயற்கையை ஒட்டியதாகவே அமைந்திருப்பதையும் அவதானிக்கலாம்.

நான் தரம் 3 வரையிலான கல்வியை எமது கிராமத்திலும் பக்கத்துக் கிராமங்களிலும் அமைந்திருந்த மூன்று பாடசாலைகளில் பெற்றுள்ளேன். அவற்றுள் முதலாவது பாடசாலை தெஹிப்பாகொடை முஸ்லிம் வித்தியாலயம். இரண்டாவது பாடசாலை தலவத்துரை முஸ்லிம் வித்தியாலயம். மூன்றாவது பாடசாலை தற்போது உடுநுவரை அல்மனார் தேசிய பாடசாலை என அழைக்கப்படும் கல்லூரி. அங்கு நான் 3 ம் வகுப்புக் கல்வியைத் தொடரும் போதுதான் கம்பளை சாஹிரா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் (முன்னால் கல்வியமைச்சர்) அவர்கள் முஸ்லிம் கிராமங்களில் அமைந்திருந்த பள்ளிவாசல்களுக்கு விஜயம் செய்து, முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். அதன்படி எமது கிராமத்தில் இருந்த ஒரு சில பெற்றோர் தமது பிள்ளைகளை சிங்கள மொழி மூலம் கல்வியைத் தொடர்வதற்காக வேண்டி எமது ஊருக்குப் பக்கத்து ஊரில் அமைந்திருந்த, தற்போது உடுநுவர டீ.பி. விஜேதுங்கா தேசிய பாடசாலை என அழைக்கப்படும் கல்லூரியில் சேர்த்து விட்டனர். அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர் ஐந்தாறு பேர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். மொழி புரியாத, அன்னியோன்யம் இல்லாத புதிய பாடசாலைச் சூழல், எமது கண்களைக் கட்டி காட்டில் கொண்டு போய் விட்ட கதை போலவே ஆரம்பத்தில் அமைந்துவிட்டது.

அவ்வாறு இருந்தாலும் அங்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் போல, எம்மில் எவ்வித வேற்றுமையும் காட்டாது அவர்களது சொந்த இனப்பிள்ளைகளுக்குப் போல் எமக்கும் அறிவைப் பெற்றுத் தந்தனர். அதுமட்டுமல்ல, அவர்கள் அன்று எம்முடன் அன்பாகவும் ஆதரவாகவும் அன்னியோன்யமாகவும் பழகிய அவர்களது உயர்ந்த ஆசிரியப் பண்புகளுக்கு ஒரு நன்றிக் கடனாகவே நான் இங்கு இவ்விடயங்களைக் குறிப்பிட்டுக் கொண்டேன்.

மேற்சொன்ன பாடசாலைக்கு நான் மாற்றப்பட்டது 1956 இல் என்றே நினைக்கிறேன். தமிழ் மொழிப் பாடசாலையில் 3ம் தரம் சித்தி அடைந்திருந்த நாம் சிங்கள மொழிப் பாடசாலை அதிபரின் ஆலோசனைக்கு இணங்க மீண்டும் 3ம் தரத்திலேயே சேர்க்கப்பட்டோம். அதன்படி தரம் 8 வரை அதே பாடசாலையில் தொடர்ந்து கற்ற நான் தரம் 9 இல் கற்பதற்காக வேண்டி கம்பளை சாஹிரா கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். இவ்வருடமே சுயபாஷைகள் மூலம் விஞ்ஞானக் கல்வி அறிமுகமாகியது. அதன் படி நானும் விஞ்ஞானப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். சுய பாஷைகள் மூலம் விஞ்ஞானக் கல்வி கற்பிக்கும் போது ஏற்பட்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் தட்டுப்பாடும் புத்தங்களின் தட்டுப்பாடும் அன்று எமக்கு ஒரு சவாலாகவே இருந்தது. எனினும் சிங்கள மொழி மூலம் கற்று க.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தி அடைந்த நான், இன்று கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலை என அழைக்கப்படும் கல்லூரியில் க.பொ.த. (உ.த) வகுப்புக்கு சேர்க்கப்பட்டேன். அங்கிருந்து க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த நான், 1973 ம் ஆண்டு உகுரஸ்ஸ பிட்டிய மீரா மகா வித்தியாலயத்தில் கணித - விஞ்ஞான ஆசிரியராக நியமனம் பெற்றேன்.

02. உங்களது இலக்கிய பிரவேசம் எப்போது நடந்தது?

ஒரு சிறந்த எழுத்தாளனாக வரவேண்டும் என்ற ஆவல் தரம் 7, 8 வகுப்புகளில் கற்கும் போதே எனக்குள் ஏற்பட்டது. அதனால் பல்கலைக்கழகம் வரை சென்று மொழியியல் துறையில் பட்டம் பெற வேண்டும் என ஒரு உந்துதல் சதா மனதுக்குள் இருக்கவே செய்தது. அது அவ்வாரிருக்க தரம் 9, 10 வகுப்புகளில் படிக்கும் போது கவிதை எழுதும் ஆற்றல் தானாக வந்து விட்டது. அவ்வாறு நான் எழுதிய கவிதைகளை சிங்கள மொழியைக் கற்பித்த ஆசிரியர்களிடம் காட்ட அவர்கள் எனது திறமையைப் பாராட்டினார்களே தவிர, வேறு எந்த ஊக்கமும் அவர்களால் எனக்கு அளிக்கப்படவில்லை. அத்துடன் க.பொ.த. (உ.த) வகுப்பில் விஞ்ஞானப்பாடங்களையே கற்றதனால் மொழியில் இருந்த ஆர்வமும் குறைந்துவிட்டது. அவ்வாறு இருந்தாலும் 1979 ம் ஆண்டு நான் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு ஆசிரியப் பயிற்சி பெறச் சென்ற போது, அங்கு ஒரு விரிவுரையாளராகக் கடமையாற்றிய பிரபல எழுத்தாளர் அ.ஸ. அப்துல் சமத் அவர்களின் உறவு கிடைத்தது. அத்துடன் ஆசிரிய பயிற்சிக்கு வந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு சில ஆசிரியர்களின் உறவும் கிடைத்தது. அதனால் எனக்குள் எழுத்தார்வம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. எனது முதல் கவிதை 1979 ம் ஆண்டு தினகரன் வார மஞ்சரியில் 'உலகசாதனை' எனும் தலைப்பில் வெளிவந்தது. அதே ஆண்டு தினகரன் வார மஞ்சரியில் சிறுகதை ஒன்றும் வெளிவந்தது. அதிலிருந்து எச்.எல்.எம். நிசார், ஹமீட் எம். நிசார், உடுநுவரை நிசார், உ. நிசார் என பல பெயர்களில் எனது ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தாலும் இன்று உ. நிசார் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அது உடுநுவரை நிசார் என்பதன் சுருக்கமாக அமைந்திருக்கிறது.


03. இலக்கியப் பணிகளுக்கு உந்து சக்தியாகஇருந்தவர்கள் யார்?

ஏற்கனவே குறிப்பிட்ட பிரபல எழுத்தாளர் அ.ஸ. அப்துஸ் ஸமத் அவர்களை நன்றிக் கடனோடு குறிப்பிட்டாக வேண்டும். அவர் நான் எழுதிய சிறுகதைகளையும் கவிதைகளையும் குறைநிறை பார்த்து என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். அத்துடன் 2000 ஆம் ஆண்டு ஆகும் போது பத்திரிகைகளில் பிரசுரமான ஏராளமான கவிதைகளும் சிறுகதைகளும் என் கைவசம் இருந்தன. அவற்றை நூல் உருவில் கொண்டுவர வேண்டும் என ஓர் ஆவல் சதா மனதை உறுத்திக்கொண்டிருந்தது. அதற்கான அனுபவங்களோ ஏற்ற அனுசரணையாளர்களோ கிடைக்கவில்லை.

அப்போது நான் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஜே.எம். நயிமுதீன் அவர்களை அனுகி ஆலோசனையொன்று கேட்டேன். அதற்கான ஏற்ற ஆலோசனையொன்றை அவர் அன்று வழங்கியதனால்தான் எனது முதலாவது கவிதைத் தொகுதியான கனவுப் பூக்களை அச்சுருவில் கொண்டுவர முடிந்தது. அத்துடன் அதிபர் எம்.ஜே.எம். நயிமுதீன் அவர்கள் அந்நூலின் வெளியீட்டு விழாவை கல்லூரி விழாவொன்றாக நடாத்தி சிறப்பித்துத் தந்தார். அதுமட்டுமல்ல, அப்போது இருந்த கல்லூரியின் ஆசிரியர் குழாமும் மாணவர்களும் பெற்றோர்களும் கூட அவ்விழா சிறப்புற தமது பூரண ஒத்துழைப்பை நல்கினார்கள்.

04. நீங்கள் வெளியிட்ட நூல்களைக் கால ஒழுங்கில் குறிப்பிடுங்கள்?

01. கனவுப் பூக்கள் (கவிதைத் தொகுதி) 2005
02. நட்சத்திரப் பூக்கள் (சிறுவர் பாடல் தொகுதி) 2006
03. ஓயாத அலைகள் (கவிதைத் தொகுதி) 2007
04. வெண்ணிலா (சிறுவர் பாடல் தொகுதி) 2007
05. மலரும் மொட்டுக்கள் (சிறுவர் பாடல் தொகுதி) 2007
06. சிறகு விரி (சிறுவர் பாடல் தொகுதி) 2008
07. திராட்சை ரசம் (கவிதைத் தொகுதி) 2009
08. பாவிருந்து (சிறுவர் பாடல் தொகுதி) 2009
09. இளைய நிலா (சிறுவர் பாடல் தொகுதி) 2009
10. உயிர்வலி (சிறுகதைத் தொகுதி) 2009
11. முத்துக்கணையாழி பாகம் 1 (சிறுகதைத் தொகுதி) 2010
12. நல்ல தங்காள் (சிறுவர் பாடல் தொகுதி) 2010
13. யானையும் பானையும் (சிறுகதைத் தொகுதி) 2011
14. முத்துக்கணையாழி 2 (சிறுவர் கதைத் தொகுப்பு) 2011


05. சிறுவர்களுக்கான நூல்களை வெளியிடுவது சிரமம் என்று நினைத்ததுண்டா?

சிறுவர் நூலொன்றுக்குத் தேவையான பாடல்களையோ கதைகளையோ ஏற்கனவே நான் எழுதி வைத்தவற்றில் இருந்து தேர்ந்தெடுப்பது மிக இலகுவானதே. அது அவ்வாறாக இருப்பினும் தேவையான அட்டைப்படத்தையும் ஏனைய படங்களையும் வரைந்து கொள்வதற்கு ஓவியக் கலைஞர்களின் பின்னால் அலைவது மிகவும் சிரமமான ஒரு விடயமாக இருக்கும். எனினும் பல ஓவியக் கலைஞர்கள் அவற்றை உரிய காலத்தில் வரைந்து தந்தமைக்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அதன் பிறகு நூலை அச்சுருவத்தில் கொண்டுவருவதும் பல போராட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் ஒரு விடயமாக இருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில், அதுவும் தமிழ் மொழியில் சிறுவர் நூல்களை வெளியிட்டு வெற்றி அடைவதென்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும்.

06. மலையகப் பிரச்சினைகள் பற்றி மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களால் மட்டும்தான் அவர்களின் படைப்புக்கள் மூலம் கொண்டு வர முடியும் என்று எண்ணுகிறீர்களா? ஏன்?

இல்லை, மலையகப் பிரச்சினைகள் பற்றி எவரும் தமது படைப்புகள் மூலம் முன்வைக்கலாம். எனினும் மலையகப் பிரச்சினைகளுடன் இரண்டரக் கலந்து வாழும் மலையக எழுத்தாளர்கள் அவற்றைத் தமது படைப்புகள் மூலம் வெளிக் கொண்டுவரும் போது அவற்றிற்காக தமது அனுபவங்களுக்கு ஊடாக பரிகாரமொன்றையும் முன்வைப்பார்கள் என்பதை எதிர்பார்க்கலாம். அத்துடன் அப்படைப்புக்களில் ஒரு மண்வாசனையும் தவழும். மேலும் மலையகப் பிரச்சினைகள் பற்றி உலகுக்கு எடுத்துச் சொல்லி அவற்றுக்குப் பரிகாரங்களை முன்வைப்பது மலையக எழுத்தாளர்களின் ஒரு கடமையுமாகும்.

07. மலையத்தின் தற்போதைய இலக்கிய வளர்ச்சி பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது மலையக இலக்கிய வளர்ச்சி குறைவாகவே உள்ளது. அதே போல மலையக இலக்கியங்கள் ஒரு சிலரால் புறக்கனிக்கப்படுவது போல சில சமயங்களில் மலையகத்துக்குள்ளும் அவை புறக்கனிக்கப்பட்டு வருகின்றன. அதற்கொரு உதாரணம் குறிப்பிடலாம். மத்திய மாகான சபையின் கலாசாரத்திணைக்களம் ஆண்டு தோறும் மத்திய மாகாணத்தில் வாழும் சிங்கள எழுத்தாளர்களிடம் இருந்த பல ஆயிரக் கணக்கான ரூபாக்கள் பெறுமதி கொண்ட நூல்களைக் கொள்வனவு செய்து வருகின்றது.

அது மட்டுமல்ல அந்நூல்கள் மத்திய மாகாணசபைக்கு உட்பட்ட நூலகங்களில் பாவனைக்கு உகந்ததென ஒரு சான்றிதலும் வழங்கி எழுத்தாளர்களை கௌரவிக்கின்றது. அவ்வகையான நூல் கொள்வனவோ சான்றிதழ் வழங்குதலோ தமிழ் மொழி மூல இலக்கியங்கள் சம்பந்தமாக நடைபெறாதது ஒரு கவலைக்குரிய விடயமே. உரிய அதிகாரிகள் இது சம்பந்தமாக ஏற்ற நடவடிக்கையொன்று எடுக்க ஆவன செய்வார்களாயின் அது மலையக எழுத்தாளர்களுக்கு ஓர் உந்து சக்தியாக அமையும். அத்துடன் மலையக இலக்கியம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமெனின் புதிய தலைமுறையினரின் பங்களிப்பு மிக மிக அவசியம். பிரதேசத்துக்குப் பிரதேசம் இலக்கிய மன்றங்கள் உருவாக வேண்டும். அவற்றின் செயற்பாடுகள் அதிகரிக்க வேண்டும். இலக்கிய வாதிகளிடையே கலந்துரையாடல்கள் ஏற்பட வேண்டும். போட்டிகள் நடாத்தப்பட்டு எழுத்தாளர்கள் பாராட்டப்பட வேண்டும். நூல் வெளியீடுகளுக்கு அனுசரணையாளர்கள் முன்வந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

08. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள் விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

1) கலாசார அலுவல்கள் திணைக்களம் 2008 தேசிய இலக்கிய பெருவிழாவின் பொருட்டு அகில இலங்கை      ரீதியாக நடாத்தப்பட்ட கவிதை ஆக்கப் போட்டியில் முதலாம் இடம் கிடைத்தது.

2) சப்ரகமுவ மாகாணசபை 2009 இல் சாஹித்திய விழாவுக்காக நடாத்திய பாடல்களுக்கான கையெழுத்துப் பிரதிப் போட்டியில் 'பாவிருந்து' சிறுவர் பாடல் தொகுதிக்கு முதலாம் இடம் கிடைத்தது.

3) 2009 மூன்றாம் காலாண்டில் இலங்கையில் வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகளுள் தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) மதிப்பீட்டில் எனது 'காலம் பதில் சொல்லட்டும்' சிறுகதைக்கு மூன்றாம் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கிடைத்தது.

4) தேசிய இளைஞர்கள் சேவை மன்றம் 1993 ம் ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடாத்திய கவிதையாக்கம் போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்தது.

5) பத்திரிகை சஞ்சிகைகளால் நடாத்தப்பட்ட பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பல பரிசுகள் கிடைத்திருக்கின்றன.

6) கலாசார அலுவல்கள் திணைக்களம் 2008 இல் எனக்கு கலாபூஷன விருதை வழங்கி கௌரவித்தது.

09. கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டும் உங்களுக்கு மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபாடு காட்டும் எண்ணம் இருக்கிறதா?

தமிழ், சிங்கள மொழிகளில் தேர்ச்சி இருப்பதனால் இதற்கான ஆர்வம் இருக்கிறதுதான். எனினும் அதற்கு நேரம்தான் குறுக்கிடுகின்றது. அது எவ்வாறாயினும் எனது உயிர்வலி சிறுகதைத் தொகுதியை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட ஓர் எண்ணம் இருக்கிறது.

10. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முதலில் தமிழ் மொழி மூலமும் இரண்டாவது சிங்கள மொழி மூலமும் கற்று, தமிழ் மொழி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க நேர்ந்த சமயம், இரு மொழிச் சிந்தனைகளில் சிக்கி ஏற்பட்ட தாக்கத்தைப் பொருப்படுத்தாது, தமிழ் இலக்கியத்துக்கு என்னால் இயன்ற ஏதோ ஒரு சிறு பணியைச் செய்துள்ளேன்.

''இலங்கையில் ஆசிரிய வழியிலான சிறுவர் ஆக்க மரபில் வித்துவான் க.வேந்தனார், புலவர் மு.நல்லதம்பி, அல்வாயூர் மு.செல்லையா... ஏ.இக்பால், கேனிப்பித்தன், ஏ.குணநாதன், உ.நிசார் முதலியோர் தடம்பதித்தனர்'' என பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள். தனது 'சிறுவர் இலக்கியம்' எனும் நூலில் இலங்கையில் சிறுவர் இலக்கியத்துக்கு தொண்டாற்றிய ஒருவர்களுள் என்னைப்பற்றியும் குறிப்பிடுவது மனதுக்கு திருப்தியாய் இருக்கிறது.  இதே திருப்தி கவிதை, சிறுகதை, நாவல் துறைகளிலும் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. அப்போதுதான் சிறுவயதிலேயே ஒரு சிறந்த எழுத்தாளனாக வரவேண்டும் என எனக்குள் ஏற்பட்ட ஆவல் நிறைவுரும் என நினைக்கிறேன்.

பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக கண்டி, கேகாலை மாவட்டகங்களில் அமைந்த பல அரசாங்கப் பாடசாலைகளில் 35 வருட கால சேவையின் பின் ஓய்வுபெற்று பிறந்து வளர்ந்த உடுநுவரைப் பிரதேசத்துக்கு சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் மாவனல்லையில் தற்போது நான் மனைவி மக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழ் இலக்கியம் மேலும் வளம்பெற இன்னும் பல ஆக்கங்களை அளிக்க வேண்டும் என்பதே எனது இன்றைய அவாவாக இருக்கிறது!!!

2012.10.14 தினகரன் வாரமஞ்சரியில் திரும்பிப் பார்க்கிறேன் பக்கத்தில் இவரது நேர்காணலை வாசிக்க கீழே க்ளிக் பண்ணவும்.

http://thinakaran.lk/Vaaramanjari/2012/10/14/?fn=f12101417


No comments:

Post a Comment