பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Monday, 17 September 2012

கிண்ணியாவின் மண் வாசனையை வளமாக்கும் கிராமியக் கவிகள்

கிண்ணியாவின் மண் வாசனையை வளமாக்கும் கிராமியக் கவிகள்


கிழக்கு மண்ணின் பாரம்பரிய சிறப்பம்சங்களில் ஒன்று கிராமியக் கவிகள் எனும் நாட்டார் பாடல்களாகும். இது இம்மண்ணின் பெருமைக்கு புகழ் சேர்த்து நிற்கின்றது.


அமைதியான கிராமத்து வாழ்க்கை தெளிந்த நீரோடையாக மக்களது மனங்களில் நிம்மதியை ஏற்படுத்தி நிற்கும்.

இத்தகைய வாழ்கையானது அதனை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே இன்ப மூட்டும்.
இதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் கிராமத்தவர் வாழ்க்கை ஆனந்தமாக் கழிகிறது.
இருந்தும் இவர்களது வாழ்விலும் பல்வேறுபட்ட துன்பங்களும், துயரங்களும் ஏற்படத்தான் செய்கின்றன.

இவர்களது வாழ்வில் ஏற்படுகின்ற இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை பாடல்கள் மூலம் இம்மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.

உள்ளக் கிடக்கைகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் கிராமிய கவிகள் ஆழமான கருத்தும் சுவை நயமும் கொண்டதாக விருக்கும்.

இவ்வாறான பாடல்கள் கிண்ணியாவில் 1950க்கு முந்திய காலப்பகுதியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது.

வயல் வேலை, சூடடித்தல், காவலுக்கு நிற்றல் போன்ற தொழிலோடு சம்பந்தப்பட்ட பாடல்களும் காதல் நயங்களும் பிரிவுத் துயரை எடுத்துக் கூறும் பாடல்களும் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கின.

இது கிண்ணியா மண்ணின் ஒரு சிறப்பம்சமாகும். கிண்ணியாவில்; கிராமத்துக்கவி ஒரு தனிக்கலை. மேலோங்கி நின்ற இக்கலை இன்று முற்றிலும் அருகிவிட்ட நிலையிலே காணப்படுகிறது.

இந்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கிராமியக் கவிகளுக்கு புத்துயிரளிக்க என்னால் மேற் கொள்ளப்பட்ட முயற்ச்சியில் பல கவிகள் உருவானது. அவை இரு புத்தகங்களாகவும் வெளி வந்தது. இக்கவிகள் இன்று மக்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்று வருவது கண்டு நான் பெருமகிழ்வடைகின்றேன்.

உதாரணத்திற்கு சில பாடல்கள்

அல்லாஹ்விடத்தில் உதவி தேடும் ஒரு தாயின் வேண்டுதல் இவ்வாறு 
சித்தரிக்கப்படுகிறது.

ஆலம் படைச்சவனே
எனை ஆளும் ரஹ்மானே!
எக் கோலமும் அறிஞ்சவனே
என் கொம ரெல்லாம்
கரை சேர
வகை செய்வாய்...


வயல் காவலில் நின்றிருக்கும் ஒரு இளைஞன் தனது துனைவியை நினைத்து ஏங்கி இவ்வாறு பாடுகிறான்.

காவலிலே நின்றிருக்கேன்
கன நாளாத் தானிருக்னே;
கோவம் பழ நிறத்தழகி
ஓன் சேதி ஒன்னும் தெரியலயே

கதிர் கொடல
காய் வணக்கம்
காண வர நேரமில்ல

ராப்பகலா
ஒன்னினைவு
என் நெஞ்சமெலாம்
வாட்டுதடி

பசும் பால
காச்சி வெச்சி
பச்சரிசி சோறாக்கி
பாவ ஒன்ன
நெனச்சி வுட்டன்
பசியெல்லாம்
போச்சிதடி...

கணவனை எதிபார்த்து காத்து நிற்கும் ஒரு மனைவியின் ஏக்கம் இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது.

சுத்தி வெச்ச பாயும்
அடுக்கி வெச்ச
தலையணையும்
விரிச்சி வெச்சிப்
பாத்திருந்தேன்
விரும்பியவர்
வருவாரென்டு...


ஒரு விவசாயி படும் மனக் கவலையை இப்பாடல் பிரதி பலிக்கின்றது.

வயலுக்குள்ள
நெல் வெதச்சி
வெளயும் வர
பாத்திருந்தேன்

சூடடிக்கும் வேலையிலே
பெரு வெள்ளம்
போட்டிருச்சி...


ஒரு தாயின் மன உளைச்சலின் சிறு துளி இது.

காது தோடு
வித்து
பழைய
ஓடு வித்து
ஓன்ன
படிக்க வெச்சன்
மகனே...


இளம் பெண்ணின் மன வேதனை இப்பாடலில் பிரதிபலிக்கப்படுகிறது.

ஈரச் சுவரானேன்
இடிஞ்சி விழுந்த
மண்ணானேண்
பாரா முகமானேன்
என்ன பாக்க
ஒரு மனுசரில்லை


ஒரு ஏழை விதவையின் துயரம் இது.

பென்னம் பெரிய
வயல் வெளியில்
சுத்தி வந்தேனே
என் சின்னஞ் சிறிய
போர உரயும்
நெரயவில்லையே


இவ்வாறு சுவை நயம் கருத்தாழமிக்க பல கிராமிய பாடல்கள் என்னால் உருவாக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல்கள் கிண்ணியா மண்ணிண் பாரம்பரியத்தை என்றும் பறைசாற்றி நிற்கும் என்பது எனது நம்பிக்கை.

நன்றிகள்:- கவிஞர் சாமசிரி  பி.ரி. அஸீஸ்அழகுமிகு கிண்ணியாப் பாலம்
உணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு


கவிஞர் பி.ரி. அஸீஸின் சிறுவர் பாடல்கள்

1 comment:

  1. உண்மையில் எப்படியான புதுக்கவிதைகள் எழுதப்பட்டாலும் கிராமத்துக் கவிதைக்கு இருக்கும் தனித்தன்மை மிகவும் சிறப்புமிக்கது...

    உண்மையில் இப்போதெல்லாம் கிராமத்து கவிதைகள் மருவிவருவது கவலைக்குறியதே... அதிகமாக மீனவர்கள் மீன் பிடிக்கும் போது பாடும் கவிதைகழும் பாடல்களும் அழகிலும் அழகு...

    ReplyDelete