பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Monday, 24 September 2012

யாழ் இலக்கிய குவியம் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா பற்றி

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த எச்.எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயரிலும் எழுதி வரும் ரிஸ்னா,

2004 இல் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் 'காத்திருப்பு' என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 300 க்கும் மேற்பட்ட கவிதைகளைஎழுதியுள்ளார்.

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம், இருக்கிறம், வேகம், நமது தூது போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், நிறைவு, நிஷ்டை, படிகள், அல்லஜ்னா, அல் ஹஸனாத், ஞானம், நீங்களும் எழுதலாம், மல்லிகை, பேனா மற்றும் இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம் இணைய தளங்களான வார்ப்பு, முத்துக்கமலம், கீற்று, தமிழ் ஆதர்ஸ், பதிவுகள், ஊடறு ஆகிய வலைத்தளங்களிலும் ஆக்கங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன்www.poemrizna.blogspot.com,www.vimarsanamrizna.blogspot.com, www.storyrizna.blogspot.comஎன்ற வலைப்பூக்களிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும்.

தற்போது BEST QUEEN FOUNDATION என்ற இலக்கிய அமைப்பின் உப தலைவராகவும் பூங்காவனம் காலாண்டு சஞ்சியின் துணை ஆசிரியராகவும் சேவையாற்றி வருவதுடன் முஸ்லிம் கலைஞர் முன்னணி அமைப்பிலும், இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்திலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

இவரது கவிதை நூல் - இன்னும் உன் குரல் கேட்கிறது.இவரது கவிதையொன்று.


லயத்து வீடும் கரத்தை மாடும்


கொழுந்த நாம பறிச்சு பறிச்சே
கையி காலு முறிஞ்சி போச்சி
தேங்கா மாவு குதிர வெல
ஒழக்கிறதும் எரிச்சலாச்சு

சப்பாத்து இன்றி போனதால
புள்ள படிப்பு பாழா போச்சி
பட்டணம் போன மூத்தவனின்
சம்பளமும் கொறஞ்சி போச்சி

மானியம், கடனுதவி
அர்த்மெல்லாம் பிழச்சி போச்சி
வாழையடி வாழையாக
கஷ்டங்களே நிலைச்சி போச்சி

நம்பிப் போட்டோம் வாக்குகள
எல்லாமே மோசம் போச்சி
தோரேமாரின் வேஷம் எல்லாம்
நல்லாவே வெளுத்துப் போச்சி

லயத்து வீடும் கரத்தை மாடும்
எங்களுடைய சொத்தாப் போச்சி
மாடி வீடும், மஹத்தியா பட்டமும்
அவங்களோட சேர்ந்துப் போச்சி

குடிக்கலாம்னு பாத்தோமே
கொஞ்சமாவது கஞ்சி வச்சி
கூரை ஓட்டை தண்ணி வந்து
அடுப்பும் இங்கு நூந்து போச்சி!!!

நன்றி - யாழ் இலக்கிய குவியம்

No comments:

Post a Comment