பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, 8 August 2012

பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை


பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை

எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை

பூங்காவனத்தின் 09ஆவது நுழைவாயிலால் உள்ளே நுழைந்தால் உங்களுடன் ஒரு நிமிடம் எனும் பக்கத்தில் மனித இனத்தின் அறிவு முன்னேற்றத்தின் பிரதிபலனாக விளங்கும் கணினி, கைத்தொலைபேசி, தொலைக்காட்சி என்பன மனிதனுக்கு அன்றாடத் தேவைகளாகிவிட்ட அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டாலும், அதன் அடுத்த பக்கம் என்றொரு தீமை பயக்கக்கூடிய ஒரு பக்கமும் உள்ளது என்பதை தெட்டத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது பேஸ்புக்கிலும், மெகா சீரியல்களிலும், தெலைபேசி நீண்டநேர உரையாடல்களிலும் ஈடுபட்டு வீணே நேரத்தைக் கழிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனமில்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் மின்கதிர்கள் காரணமாக பல பெயரில்லாத நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதையும் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றுக்குள் இருக்கும் சிசுக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுகிறது என்பதையும் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள் ஆசிரியர் குழுவினர்.
மக்கள் வங்கி முகாமையாளராக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் மூத்த பெண் எழுத்தாளர் திருமதி யோகேஸ்வரி சிவப் பிரகாசம் அவர்கள் இம்முறை பேட்டியளித்திருக்கிறார்கள். இளம் பெண் கவிதாயினி வெலிகம ரிம்ஸா முஹம்மத், இளம் பெண் படைப்பாளி எச்.எப். ரிஸ்னா ஆகியோர் சிறப்பானதொரு நேர்காணலைச் செய்திருக்கிறார்கள். உணர்வின் நிழல்கள், ஈன்ற பொழுதில், கனநேர நினைவலைகள், மனம் விந்தையானதுதான் உட்பட இன்னும் பேசவேண்டும் (வெளிவர இருக்கும்) என்ற நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் ஆண்மீகக் கட்டுரைத் தொகுதி, பெண்களுக்கான அறிவுரைக் கடிதங்கள் என்பவற்றுடன் இன்னும் பல தொகுதிகளை வெளியிட்டுள்ள திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் சிறுகதைகளைப் பற்றி தனது அனுபவத்தினை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். அதாவது வாழ்க்கையின் அனுபவங்கள் அடிமனதைத் தொடும் போது அவை அனுபவ ரீதியான கதையாக உருவாகுவதாகவும் அவை யதார்த்தமாக இருந்தாலும் அதீத கற்பனைகள்  கதையாக உருவெடுக்கும் போது அதிலே யதார்த்தத்தைக் காண முடியாது என்பதற்கு தனது காத்திருப்பு என்ற கதையை உதாரணமாகக் காட்டியிருக்கிறார். அத்தோடு இந்தக் கதைக்கு இன்ன இன்ன அம்சங்கள் அமைய வேண்டும் என்று வரையறுத்துக் கொள்ளக்கூடாது. இலக்கணம் படி இலக்கியம் அமையத் தேவையில்லை என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார்.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்ந்துள்ளது. சிறுகதைகளைப் பொறுத்தவரையில் எஸ்.ஆர். பாலச்சந்திரனின் உருத்திராட்சப் பூனைகள் என்ற கதை பிஞ்சு, காய், கனி என்ற பேதம் பாராமல் பாலியல் வல்லுறவை மேற்கொள்ளும் வஞ்சகர்கள், தம்மை சமூகத்தில் நடமாடும் நல்லவர்களாக காட்டிக்கொள்ளும் உருத்திராட்சப் பூனைகளிடம் கவனமாய் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. மல்லவப்பிட்டி சுமைரா என்பவரின் மூன்றாவது திருமணம் என்ற சிறுகதை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மூன்று திருமணங்களைச் செய்து கொண்ட காவேரியை வக்கிரக் கண்கள் வித்தியாசமாகப் பார்க்கின்றன. ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சினைகள் அவர்களுக்குத் தானே தெரியும். வெளித்தோற்றத்தில்  அவற்றைக் கண்டு பிடிக்க முடியாது. காவேரி உடல் இன்பத்துக்காக மூன்று திருமணங்களையும் முடிக்கவில்லை. வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் அவளது இலட்சியம். என்றாலும் சமூகம் அவளது நடவடிக்கைகளை கறுப்புக் கண்ணாடி போட்டுப் பார்க்கின்றது. கறுப்புக் கண்ணாடிக்கு எல்லாம் கறுப்பாகத் தானே தெரியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அதே போல் ஆறறிவு படைத்த மனிதன் ஐயறிவு படைத்த குருவியிடம் தோற்றுப் போகும் அளவுக்கு சிறுமைப்பட்டுவிட்டான். குடியிலும் சூதிலும் தான் தேடும் பணம் முழுவதையும் அழித்துவிட்டு வெற்றுக் கையுடன் வீடு திரும்பும் போது தமது பிள்ளைகள் பட்டினியால் துடிப்பார்கள் என்பதை மறந்துவிடுகின்றனர். அந்தக் கல்லுத் தவறணைக்குப் பக்கத்தில் மரத்தில் கூடுகட்டியிருந்த குருவி தனது குஞ்சுகளுக்கு ஆனந்தமாக அமுதூட்டி மகிழ்வதையும் மழையில் நனையாமல் தனது சிறகுகளை அகள விரித்துப் பாதுகாத்துக் கொடுப்பதையும், மரக்கிளைகளில் தாவி இன்பமுடன் விளையாடுவதையும் பார்க்கும் போது ஆறறிவு படைத்த மனிதன் எங்கேயிருக்கிறான் என்ற பாடத்தைக் கற்றுத் தருகிறது சூசை எட்வேட்டின் குருவிப்(ன்) பாடம் என்ற கதை.

பிள்ளையைப் பெற்றெடுக்கும் தாய் ஈவு இரக்கமின்றி அதனைத் தெருவில் தூக்கியெறிந்துவிட்டு செல்வது இன்று ஒரு பாஷனாகிப் போய்விட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வறுமை அல்லது தப்பாகப் பிறந்ததாகவோ வேறு ஏதாவதாகவோ இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு குழந்தையின் அதிஷ்டம் அருணின் கையில் கிடைத்தது. எடுத்து அன்போடு வளர்த்தான். ஆயினும் குறைபாடுடையதாக அது காணப்படுகிறது என்பதையறிந்து மனமுடைந்து போனாலும் மனைவி நிலாவுக்கு ஏழு வருடங்களாக இல்லாதிருந்த குழந்தை பெறும் அதிஷ்டம் அந்தப் பிள்ளையின் மூலம் கிடைக்கப் பெற்றதை எண்ணி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க முடியாது என்பதற்கு ஏ.சி. ஜரீனா முஸ்தபாவின் அதிஷ்டம் சிறுகதை எம்மை அகம் மகிழச் செய்கிறது.

நவீன கவிதை யோட்டமும் அதன் பின்னணி என்ற தலைப்பின் கீழ் நாச்சியாதீவு பர்வீன் காத்திரமான சில கருத்துக்களை முன் வைத்திருப்பதோடு, மனிதர்களில் வாழும் தன்மைக்கு ஏற்ப கவிதையின் பாடுபொருள் வித்தியாசப்படுகிறது என்பதையும் கவிதையியலின் பின்னணியின் மாற்றங்களைத் தீர்மானிப்பதில் வாழும் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் கவியில் உறவாடி என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து உதாரணங்களைத் தந்து தனது கட்டுரைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

அதே போன்று மனிதனாகப் பிறந்தவன் தனது வாழ்க்கையின் போது சமூகத்துக்குப் பயனுள்ளவனாக வாழ வேண்டும். சமூகத்துக்கு நல்லதையே செய்ய வேண்டும். உதவும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும் என்ற உண்மையை மருதூர் ஜமால்தீன் உதவி வாழ்ந்திடு என்ற தனது உருவகக் கதை மூலம் விளக்கியுள்ளார்.

இதழில் உள்ள கவிதைகளின் பக்கத்தை நோக்கும் போது தாயாவாள் பெண் என்ற கவிதை மூலம் தாயின் பெருமை தனை வெலிப்பண்ணை அத்தாஸ், வாழ்க்கையின் அவலம் யாவும் நீங்கி சுகமாய் வாழ இறைவனிடம் இறைஞ்சும் நாளும் பொழுதும் என்ற கவிதை மூலம் கிண்ணியா பி.ரி. அஸீஸ், நாம் பேசுகின்ற பேச்சுக்கள் கசப்பானதாயினும் நெல்லிக் கனியாய் கசந்து இனிக்கும் தன்மையதாய் இருக்க வேண்டும் என்பதை அடக்கமாய் அழுதல் என்ற கவிதை மூலம் சமரபாகு சீனா உதய குமார், சோம்பேரி பல முறை பிறந்து தான் தவறவிட்டதை எல்லாம் திரும்பப் பெற முனையும் வீணான முயற்சியை சோம்பேரியின் காலம் என்ற கவிதை மூலம் பதுளை பாஹிரா, எவ்வளவு தான் பணக்காரனாக இருந்தாலும் ஏழையிடமும் ஒரு நாளிளேனும் உதவியை அவன் நாடி நிற்க வேண்டியேற்படுகிறது என்பதை யோ. புரட்சி, பாசம்கொண்ட தாய், தனது உயர்ச்சிக்காக எவ்வளவு தான் பாடுபட்டாலும் சிலர் அதனை எண்ணிப் பாராமல் வயதுப் பெற்றோரை அநாதை விடுதியில் சேர்க்கும் இதயமற்ற மனிதர்களின் மனித நேயம் மரணித்துவிட்டது என்பதை த. சிவசுப்பிரமணியம், ஊரான் தோட்டத்தை தன் தோட்டமாக சொந்தம் கொண்டாடும் வெறிபிடித்த காணி ஆசை கொண்டவர்கள் பலமான காப்பரண்களை ஏற்படுத்துக்கொண்டு பாவம், அப்பாவிகளின் காணிகளை சூறையாடுகிறார்கள் என்பதை சுதந்திரம் கம்பிகளுக்குப் பின்னால் என்ற கவிதை மூலமாக மன்னார் அமுதன்  ஆகிய கவிஞர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். மேலும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதத்தில் புண்ணியங்கள் செய்து மறுமை நாளில் மஹ்ஷரில் அர்ஷின் நிழல் தேடி புரிய வேண்டிய வணக்கம் தனை ரமழான் வந்ததே கவிதையினூடாக புத்தளம் ஜுமானா வேண்டி நிற்கிறார். காதலின் சரிவினால் ஏற்பட்ட ஏக்கம் தனை கவி வரிகளில் எதிரொலிக்க விட்டிருக்கிறார் நிலாக்குயில்.

நாகரிக மோகத்தில் இன்றைய பெண்களின் நிலையை விளக்கும் சிறந்ததொரு கட்டுரையை சந்திரகாந்தா முருகானந்தன் தந்திருக்கிறார். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் படிக்க வேண்டிய கட்டுரை இது.

இப்படியாக பூங்காவனத்தின் சிறப்பை அடுக்கிக் கொண்டே போகலாம். சிறுகதை, கவிதை, கட்டுரை, எழுத்தாளர் சந்திப்பு, வாசகர் கருத்து, நூலகப் பூங்கா என விசாலித்திருந்தாலும் கேள்வி பதில் என்ற ஒரு பகுதி வந்தால் சிறப்பாக இருக்கும். 48 பக்கங்களில் சகலதையும் அடக்குவது என்பது இயலாத காரியம். எதிர்காலத்தில் பக்கங்கள் அதிகரிக்கும் போது தேவையான அம்சங்களும் இடம்பெறும் என நம்பலாம்!!!

நூல் - பூங்காவனம் - இதழ் 09 (காலாண்டு சஞ்சிகை)
ஆசிரியர் குழு - ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா
முகவரி - 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.
தொலைபேசி - 0775009222, 0719200580.
மின்னஞ்சல் - bestqueen12@yahoo.com
விலை - 80 ரூபாய்

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்.


பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்.

தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும்Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த நிறுவனத்தின் மூலம் அண்மையில் பூங்காவனம் 09 வது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சஞ்சிகையின் இதழ்களில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன், ஆக்கங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

இச் சஞ்சிகைக்கான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன, பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும்.

இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது சந்தாவாக 500 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்துகொள்ளலாம்.

இவை எமது Account Number Details ஆகும்.

Commercial Bank, Mount Lavinia Branch, Best Queen Foundation, Account Number:- 8930016177.

என்ற இலக்கத்திற்கு காசு, காசோலைகளை வைப்பிலிட்டு அவற்றின் பற்றுச் சீட்டுக்களையும், அல்லது காசுக் கட்டளைகளாயின் (M.F. Rimza – Dehiwala Post Office)என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.

ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-

The Editor “Poonga Vanam Magazine” 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.

Mobile:- 077 5009 222

E-mail:- bestqueen12@yahoo.com

Website:- www.bestqueen12.blogspot.com