பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, 29 February 2012

02. திருமதி ஜரீனா முஸ்தபா அவர்களுடனான நேர்காணல்02. திருமதி ஜரீனா முஸ்தபா அவர்களுடனான நேர்காணல்சந்திப்பு :- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

மனித நேயங்களையும், இணக்கங்களையும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாது நமது வாழ்வில் ஐக்கியமாக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலமாக மட்டுமே உண்மையான வெற்றியை அடைந்து கொள்ள முடியும் என்கிறார் பூங்காவனம் இதழ் 02 அட்டைப் படத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் நாவலாசிரியையான திருமதி. ஜரீனா முஸ்தபா அவர்கள். அவரிடமிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களை பூங்காவனம் வாசகர்களுக்காக தருகிறோம்.

உங்களைப் பற்றிய அறிமுகத்தை பூங்காவனம் வாசகர்களுக்காக கூறுங்கள்?

1985 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட ஓர் முடிவில் ஓர் ஆரம்பம் என்ற நாடகத்தின் மூலமாக இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தேன். அன்று தொடக்கம் இன்றுவரையில் கிட்டத்தட்ட 600 ஆக்கங்கள் வரையில் (சிறுகதை, கவிதை, நாடகங்கள், கட்டுரைகள், நாவல்கள்) என எழுதியிருக்கிறேன். அது தவிர A to Z Fancy House & Communication உரிமையாளரும் நிர்வாகியுமாக உள்ளேன். நான்கு பிள்ளைகளும், மூன்று பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

நீங்கள் இதுவரை மூன்று நாவல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். அவற்றின்போது கிடைத்த அனுபவம் எப்படி இருந்தது?எனது முதல் நாவல் ஓர் அபலையின் டயறி. அதைத் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புக்களும், பாராட்டுக் கடிதங்களும் என்னை பிரமிக்க வைத்தன. எனது நிலையே இவ்வாறு என்றால் பிரபல படைப்பாளிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என வியந்துவிட்டேன். இந்த நாவல் நான் எதிர்பார்த்திராத வெற்றியை ஈட்டித் தந்ததுடன் அதன் வரவேற்பு இரண்டாம் பதிப்பையும் வெளியிட வைத்தது.எனது இரண்டாவது வெளியீடு இது ஒரு ராட்சயின் கதை என்ற நாவலாகும். இந்தியாவில் நடத்த சர்வேதே போட்டிக்காக நான் அதை எழுதிக்கொண்டிருக்கும் போது மிகக்கடுமையாக சுகயீனமுற்றேன். அதனால் அது இடைநிறுத்தப்பட்டது. நான் வைத்தியமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இது குறித்து இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டது. எனது நிலைக்காக இன்னும் பதினைந்து நாட்கள் போட்டியின் தவணை நீடிக்கப்பட்டாலும் பூரண சுகத்தை அடையாத நிலையிலேயே மிகுதியை எழுதி அனுப்பினேன். இந்த நாவலுக்கு கிடைத்த பரிசை என் எழுத்துக்கும், கருத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே எண்ணுகிறேன். எனது மூன்றாவது நாவல் 37ம் நம்பர் வீடு என்பதாகும்.கவிதை, சிறுகதைகளைவிட நாவலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

நான் நீண்ட காலமாக கட்டுரைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து எழுதினேன். ஆனால் மக்கள் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது கதைகள்தான் என்பதை காலப்போக்கில் என்னால் உணர முடிந்தது. நான் நாவல் எழுதிய காலம் மிகக்குறைவு. இப்போதுதான் ஏழாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். பொங்கி எழுகின்ற கற்பனைகளில் சில துளிகளை தெளித்ததும் கட்டுரை பிறந்துவிடுகிறது. சமகால யதார்த்தங்களைத் தெளித்தால் சிறுகதை பிறந்துவிடுகிறது. எல்லாமாக ஒன்றிணைந்து விரிவாக விபரிக்க நாவல்தான் சிறந்த வழியாக தோன்றுவதால் நாவல் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

நீங்கள் சிங்கள மொழியில் கல்வி கற்றபோதும், தமிழில் பரிச்சயம் ஏற்பட்டது எப்படி?

கண்ணில் காண்பவைகளை வரைவதும், மனதில் தோன்றியவற்றை எல்லாம் எழுதுவதும் சிறுபராயம் முதல் எனது பழக்கமாகும். ஆயினும் தமிழில் எழுதத் துவங்கியது பருவகாலத்தை அடைந்த பின்னர்தான். தொடர்ச்சியான வாசிப்பு தமிழ் எழுத்துக்களை இனங்காண வைத்தது. எழுதும்போது அகராதியின் உதவியைப் பெற்றுக்கொள்வேன். தாய்மொழி தமிழ் என்பதால் இது சிரமமாகத் தோன்றவில்லை.

எழுத்துத் துறையில் ஈடுபடுவதற்கு முன்னோடியாய் இருந்தவர்கள் பற்றி?

நான் ஆரம்பத்தில் நிறைய எழுதிக் குவித்தபோதும் அவற்றை ஊடகங்களுக்கு அனுப்பும் துணிவு எனக்கு இருக்கவில்லை. முதன் முதலில் எனக்கு அந்தத் துணிவை ஏற்படுத்தித் தந்தவர் பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர்தான். படிப்பினாலும், பணத்தாலும் பெறமுடியாத அவற்றுக்கு அப்பாற்பட்ட விடயம்தான் திறமை என்பது. அது உங்களிடம் நிறைய இருக்கிறது. அதை வெளிப்படுத்துங்கள் என்றார். அதன் பிறகே வானொலி நிகழ்ச்சிகளில் எழுத ஆரம்பித்தேன். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் எனது படைப்புக்கள் ஒளிபரப்பாகி வந்தன. அந்த நாட்களில் ஏ.சி. கமருன்னிஸா என்ற பெயரில் எழுதினேன். திருமணத்தின் பின்னர்தான் எனது சொந்தப் பெயரில் எழுத ஆரம்பித்தேன்.

தொடராக 25 ஆண்டுகளாக எழுதி வந்தபோதும் இலக்கிய உலகம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. எக்மி பதிப்பகத்தாரின் அறிமுகம் கிடைத்த பிறகுதான் இலக்கிய உலகம் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. அத்தோடு எனது கணவரின் பூரண ஒத்துழைப்பும் கிடைத்ததால் என்னால் மூன்று நாவல்களையும், ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும் வெளியிட முடிந்தது. விரைவில் இன்னும் பல நூல்கள் வெளிவரவுள்ளன.உங்கள் படைப்புகள் மீது வாசகர்களின் எதிர்பார்ப்பு எந்தளவில் இருக்கிறது?

எனது படைப்புகள் இந்த சமுதாயத்துக்கு பிரயோசனப்பட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதை வாசகர்கள் மிகத் துல்லியமாக புரிந்து ஏற்றுக்கொள்வதை அவர்களது தொலைபேசி உரையாடல்களும், வாழ்த்து மடல்களும் தெளிவுபடுத்துகின்றன. அவர்களது எதிர்பார்ப்புகளும் அதுவாகவே உள்ளன.

சமூக நீதியான கருக்களை மையமாக வைத்தே உங்கள் படைப்புகள் எழுதப்படுகின்றன. அவ்வாறு எழுதுவதற்கு தூண்டுகோலாய் அமைந்த காரணி என்ன?

இது ஒரு முக்கியமான கேள்வி. சமூக ரீதியான பலதரப்பட்ட பிரச்சினைகளோடு வாழ்கின்ற பல ஜீவன்களுக்கு அறிவுரைகள் பகருவதற்கும் ஆலோசனைகளை வழங்குவற்குமான சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. வெறும் கற்பனைகளைவிட நிஜங்களில் பல படிப்பினைகள் உண்டு. ஆகவே தான் சமகால யதார்த்தங்களையும், எனது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்து எழுதுவதை தனித்துவமாக்கிக் கொண்டேன். எனது எல்லாப் படைப்புக்களிலும் நிஜங்களைக் காணலாம்.

உதாரணமாக ஓர் அபலையின் டயறி என்ற என் நாவலைச் சொல்லலாம். அது இளம் தம்பதியருக்காக சொல்லப்பட்ட கதை. ஒரு கணவன் தன் மனைவி பற்றி தனது நண்பனிடம் சொல்வதிலும், ஒரு மனைவி தன் தோழி பற்றி தனது கணவரிடம் சொல்வதிலும் ஏற்பட்ட விபரீதத்தை விபரிப்பதுதான் அந்தக் கதை. இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதோடு வெள்ளம் வந்தபின் அணை கட்ட முயற்சிப்பதைவிட வெள்ளம் வருமுன் அணை கட்டுவதே சிறந்தது என்பதை உணர்த்தியிருந்தேன். அக்கதையை படித்த பலர் அதனை ஏற்றுக்கொண்டதுடன் இதே போல நடந்த பல சம்பவங்கள் பற்றி கூறி உங்கள் அறிவுரைகள் காலத்தின் தேவையாக அமைகிறது என்றனர். அத்தோடு இது ஒரு ராட்சசியின் கதை, 37ம் நம்பர் வீடு என்ற நாவல்களிலும் வாசகர்கள் பல படிப்பினைகளைப் பெறுவார்கள் என நம்புகிறேன்.

உங்கள் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கும் பணியாகத்தான் எழுத்துத் துறையை கணிக்கிறீர்களா? ஏன்?

ஆமாம். என்னைப் பொறுத்தவரை என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவற்றில் இந்த எழுத்துத் துறையும் ஒன்று. ஒரு குடும்பத் தலைவி என்பதோடு பல கடமைகளையும் பொறுப்புக்களையும் சுமந்து கொண்டிருப்பதால் இடைக்கிடையே உள்ளம் சோர்வடைந்து விடுவதுண்டு. அவ்வேளையில் மனம் அதிகமாக விரும்புகின்ற ஒன்றில் நம் கவனத்தை ஈடுபடுத்தினால் நமது உள்ளமும் உடலும் புத்துணர்வு பெறும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நான் எழுதத்துவங்கி விடுவேன். இதன் மூலமாக் எனது உள்ளம் விபரிக்க முடியாத அளவில் திருப்தி அடைவதை உணர்கிறேன். அத்தோடு எனது எழுத்துக்களும், கருத்துக்களும் மரணத்துக்குப் பின்னாலும் உயிர் வாழக்கூடியவை என்பதில் ஓர் அலாதியான மன நிறைவைக் காண்கிறேன்.

சமகாலத்தில் ஈழத்தின் நாவல் வளர்ச்சி பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

திறமைமிக்க படைப்பாளிகள் ஈழத்தில் நிறைந்துள்ள போதும், அவர்கள் இன்னும் இலைமறைக்காயாக இருப்பது கவலைக்குரிய விடயம்தான். சிலர் பல தடைகளுக்கு மத்தியில் முன்னேற முயன்றாலும் அவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட விரும்பாமல் விமர்சன அம்புகளைக் கொண்டு தாக்கி, வீழ்த்தி விடுவதில் இன்பமடைகின்ற முன்னோடிகளால் பலர் உளரீதியாக பாதிப்படைந்து பின்நிற்கின்ற நிலையை அவதானிக்க முடிகிறது. இந்த நிலை மாறினால் பல நாவலாசிரியர்களை இனங்காண முடியும் என நம்புகிறேன். அத்தோடு கலைஞர்களுக்கு தோள் கொடுக்கின்ற சில நல்லிதயங்கள் இயங்கி வருவது ஆறுதலான விடயம். இதே போன்று இன்னும் பல நல்லிதயங்கள் முன்வந்தால் இலக்கியவாதிகள் வெறும் விடிவெள்ளிகளாக மட்டும் மிளிராமல் நிலவுகளாகவும் பிரகாசிக்க முடியும்.

வளர்ந்து வரும் படைப்பாளிகளிடமிருந்து இலக்கியத்திற்கான எத்தகைய பங்களிப்பை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

என்னைப் பொறுத்தவரையில் எல்லோரும் வளர்கின்றவர்கள்தான். கல்விக்கு அளவில்லை, வளர்ச்சிக்கு நிறைவில்லை. இவைகள் இரண்டும் முடிவடைவது மரணத்தில் மட்டும்தான். முட்டாள் ஒருவரைக் காண வேண்டுமானால் தன்னை ஓர் அறிவாளி என்று பெருமைப்பட்டுக் கொண்டவரைப் பாருங்கள் என்றுதான் நான் சொல்வேன். அறிவிலும் அனுபவத்திலும் எத்தகைய முதிர்ச்சியுடையவனாக இருப்பினும், சில வேளைகளில் தனது மூன்று வயது பேரக்குழந்தையிடம் ஏமாறுவதைக் காணலாம். இது இயற்கை. நாம் யாவரும் அறிவாளிகள் இல்லை. பெருமைக்கும் புகழுக்கும் உரியவர்களும் இல்லை. அவை யாவற்றுக்கும் சொந்தக்காரன் இறைவன். இப்படி எவனுடைய உள்ளத்தில் உள்ளதோ அவன்தான் உண்மையான சிந்தனையாளனாக இருக்க முடியும். இலக்கிய உள்ளங்கள் யாவருக்கும் பொதுவாக நான் சொல்ல விரும்புவது இதைத்தான்.

மனித நேயங்களையும், இணக்கங்களையும் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாது நமது வாழ்வில் ஐக்கியாமாக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலமாக மட்டுமே உண்மையான வெற்றியை அடைந்து கொள்ள முடியும். ஓர் எழுத்தாளனிடத்தில் பெருமை இருக்கக் கூடாது. அந்தப் பெருமைதான் தலைக்கனத்தை ஏற்படுத்துகிறது. அதுதான் மற்றோரை புண்படுத்துகிறது. ஓர் எழுத்தாளனின் பேனா வாளைவிடக் கூர்மையானது. அதைக்கொண்டு வளர்கின்றவர்களை வெட்டுவதற்காகவும், வீழ்த்துவதற்காகவும் பிரயோகிப்பதைவிடுத்து முதலில் தனது கர்வத்தினை வீழ்த்துவதன் மூலமாக மட்டுமே மனித நேயங்களையும் ஒற்றுமைகளையும் வளர்க்கவும் நிலை நிறுத்தவும் முடியும்.

நிச்சயமாக இலக்கியவாதிகள் யாவரும் ஈகோவைக் கலைந்துவிட்டு ஒரே குடும்பம் போன்று ஒற்றுமையாக செயல்பட்டால் பல வெற்றிகளை அடைய முடியும்.

ஒன்றுபடுவோம். ஒற்றுமையாக வாழ்வோம். வெற்றி பெறுவோம்!!!

------------------------------------------------------------------------------------

படைப்பாளி திருமதி. ஏ.சி. ஜரீனா முஸ்தபா பற்றிய தகவல்கள்மேல் மாகாணம், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த படைப்பாளி ஜரினா முஸ்தபா, அப்துல் கரீம் - பாத்திமுத்து சொஹரா தம்பதியினரின் எட்டாவது புதல்வியாவார். ஜயவர்தனபுர - பிடகோட்டையில் 1967 பெப்ரவரி மாதம் 06ம் திகதி பிறந்த இவர் சென் மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவியாவார். சிங்கள மொழி மூலம் இவர் கல்வி கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் A to Z Fancy House & Communication என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் நிர்வாகியுமாவார்.

வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபா என்ற பெயரில் எழுதி வரும்~இவரது ஒரு முடிவில் ஓர் ஆரம்பம்| என்ற நாடகம் முதன் முதலில் 1985ல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகியது. அதனைத் தொடர்ந்து இதுவரை சுமார் 800க்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார். இதுவரை சுமார் ஏழு நாவல்களை எழுதியுள்ள இவர் 01. ஓர் அபலையின் டயறி, 02. இது ஒரு ராட்சஷியின் கதை, 03. 37ம் நம்பர் வீடு ஆகிய நாவல்களையும், 04.ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் இலக்கிய நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

37ம் நம்பர் வீடு, இது ஒரு ராட்சஷியின் கதை ஆகிய இவரது நாவல்களுக்கு இலங்கை தேசிய கல்வித் திணைக்களத்தினால் அரசாங்க அங்கீகாரமும், மல்ஹாரி பதிப்பகமும், நர்கிஸ் சஞ்சிகையும் இணைந்து நடாத்திய சர்வதேசப் போட்டியில் இவரது இது ஒரு ராட்சஷியின் கதை என்ற நாவலுக்கு பரிசு கிடைத்துள்ளது. ரோஜாக்கூட்டம் என்ற இவரது சிறுவர் இலக்கிய நூல் கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளர் நாயகத்தினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஞானம் சஞ்சிகை தேசிய ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவருக்கு பரிசும், சான்றிதழும் கிடைத்துள்ளது. பூங்காவனம் சஞ்சிகை இவரை நேர்கண்டு இவரது அட்டைப் படத்தை பிரசுரித்து கௌரவித்திருக்கிறது.

1985ல் மதுகரம் சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும், 1986ல் வெண்ணிலா சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் கடமையாற்றிய இவர் தற்போது பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் ஆலோசகராகவும் சேவையாற்றி வருகிறார்.

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம் போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, படிகள், அல் ஹஸனாத், ஞானம், நீங்களும் எழுதலாம், பேனா மற்றும் இந்திய சஞ்சிகையான நர்கிஸ் ஆகியவற்றில் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.


Address - Mrs. A.C. Jareena Musthaffa, 120 H, Bogahawatta Road, Welivita, Sri Lanka.

Phone - 011 5020936, 011 5050983

-----------------------------------------------------------------------------------


படைப்பாளி திருமதி. ஏ.சி. ஜரீனா முஸ்தபா பற்றிய தகவல்கள்பெயர் - திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா

முகவரி - Mrs. A.C. Jareena Musthaffa, 120 H, Bogahawatta Road, Welivita, Sri Lanka.

தொலைபேசி இலக்கம் - 011 5020936, 011 5050983

பிறப்பிடம் - ஜயவர்தனபுர – பிடகோட்டை

பாடசாலை – சென். மேரிஸ் கல்லூரி, வெளிவிட்ட

கல்வி கற்ற மொழி – சிங்களம்

இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் -

01. ஓர் அபலையின் டயறி
02. இது ஒரு ராட்சஷியின் கதை
03. 37ம் நம்பர் வீடு
04. ரோஜாக்கூட்டம்

இதுவரை கிடைத்துள்ள பரிசுகள்> விருதுகள்

37ம் நம்பர் வீடு, இது ஒரு ராட்சஷியின் கதை ஆகிய நாவல்களுக்கு இலங்கை தேசிய கல்வித் திணைக்களத்தினால் அரசாங்க அங்கீகாரம்.

மல்ஹாரி பதிப்பகமும், நர்கிஸ் சஞ்சிகையும் இணைந்து நடாத்திய சர்வதேசப் போட்டியில் இது ஒரு ராட்சஷியின் கதை என்ற நாவலுக்கு பரிசு.

ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் இலக்கிய நூல் கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளர் நாயகத்தினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளமை.

ஞானம் சஞ்சிகை தேசிய ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசும், சான்றிதழும்.

பூங்காவனம் சஞ்சிகை நேர்கண்டு அட்டைப் படத்தை பிரசுரித்து கௌரவித்துள்ளமை.

ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள்

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம், ஓசை, படிகள், அல் ஹஸனாத், ஞானம், நீங்களும் எழுதலாம், பேனா, இந்திய சஞ்சிகையான நர்கிஸ்

No comments:

Post a Comment