பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, 3 February 2010

இலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி


1. உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்?


என் படைப்புகளில் தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா என்ற சொந்தப் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். எனினும் ஓரிரு இடங்களில் கவிநிலா, குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. என் சொந்த ஊரான தியத்தலாவையிலிருந்து வந்து உயர்படிப்புக்காக தலைநகரில் தங்கியிருக்கிறேன். அது என் இலக்கிய வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பதை நான் இங்கு வந்த பின்பு தான் உணர்ந்து கொண்டேன்.


வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, நிறைவு மற்றும் இணையங்களான www.vaarppu.com,www.oodaru.com,vikatan.com,போன்ற வலைப்பதிவுகளிலும் என்னுடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் www.riznapoems.blogspot.com
www.riznastory.blogspot.com ஆகிய வலைப்பூக்களிலும் என் படைப்புக்களைப் பார்வையிட முடியும்.


இது வரை பல கவிதைகள் என்னால் எழுதப்பட்டாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னமும் ஒரு புத்தகத்தைத் தானும் வெளியிட்டுக் கொள்ள முடியாதது குறித்து எனக்கு மிகவும் வருத்தம் தான். எனினும் பேய்களின் தேசம், இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற இரு கவிதைத் தொகுப்புக்களும் கனவுகள் உயிர் பெறும் நேரம் என்ற சிறுகதைத் தொகுதியும் இலக்கிய உலகத்துக்குள் நுழைய காத்திருக்கிறது.


2. கவிதை என்பது இலகுவான இலக்கிய நடை என்றொரு கருத்து சமூகத்தில் நிலவுகிறது. உங்களது கருத்து என்ன?


என்னைப் பொறுத்த வரை, கவிதை என்பது நான்கு வரிகளுக்குள் அடங்கியிருந்தாலும் அது சொல்லும் சேதிகள் ஆழமானவை. கவிதை எழுதும் வல்லமை எல்லோருக்கும் இருப்பதில்லை. கட்டுரை வடிவிலோ அல்லது வேறொரு வடிவிலோ ஒரு விடயத்தை சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு உதாரணங்காட்டி, உவமான உவமேயம் காட்டி எப்படியோ புரிய வைத்து விடலாம். ஆனால் அதே விடயத்தை, கவிதையாக குறிப்பிட்ட சில வரிகளுக்குள் ரசனையாக சொல்லி முடிப்பதென்பது இலகுவான விடயமல்ல.


3. பெண் படைப்பாளிகளிடமிருந்து அதிகமாய் கவிதைத் தொகுதிகள் வெளிவருகின்றன. ஓரிரண்டு சிறுகதைத் தொகுதிகளும், நாவல்களும் அவ்வப்போது வெளிவருவதோடு இலகுவான இலக்கிய நடையையும் பெண்கள் கையாள்கிறார்கள். ஏன் பெண்கள் அதிகமாக கவிதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்? ஏன் இலகுவான நடையை கையாள்கிறார்கள்?


பொதுவாக பெண்கள் என்ற ரீதியில் நோக்கும் போது அவர்கள் பாரிய பொறுப்புக்களை சுமந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். குடும்பப் பெண்கள், தொழிலுக்குச் செல்லும் பெண்கள் என்று பிரித்து நோக்கினாலும் தினம் தினம் அவர்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. அதனாலோ என்னவோ அவர்கள் கவிதைத் துறையில் அதிக நாட்டம் காட்ட முயல்வதாய் தோன்றுகிறது. காரணம் கருத்துக்களை, மனதின் ஏக்கங்களை, சோகங்களை, சந்தோஷங்களை இப்படியான உள்ளுணர்வுகளை இரத்தினச் சுருக்கமாகவும் காத்திரமாகவும் சொல்லி முடிக்க கவிதை நல்லதொரு களமாக காணப்படுகிறது.


இலகுவான நடை என்ற சொல்லாடல் பெண்களுக்கு மட்டும் உரித்தானதொன்றல்ல. நூற்றில் ஒரு வீதத்தினர் மட்டுமே இந்தத் தளத்திலிருந்து விலகி புற உலகின் யதார்த்தங்கள் பற்றியும், யதார்த்தங்களின் நடப்புகள் பற்றியும் தமக்கேயுரிய பாணியில் சொல்லி முடிக்க விளைகிறார்கள். இதில் பல அபிப்பிராய முரண்பாடுகள் காணப்படுகின்றன. இன்று மரபுக்கவிதைகளை விடவும், பின்நவீனத்துவ கவிதைகளை விடவும் புதுக்கவிதைகளே பெரும்பாலும் வரவேற்கப்படுகின்றன. இலகுவான மொழிநடையில் எழுதப்படும் பண்முகப்பட்ட தாக்கங்களை உள்ளடக்கிய கவிதைகள் எல்லோராலுமே உணரப்படும் என்பது தான் நிதர்சனம். படித்தவர்கள், இலக்கணம் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் கடின சொற்களைக் கொண்டு புனையப்படும் கவிதைகளுக்கான பின்புலங்கள் வரவேற்புகள் அற்றதாகவே காணப்படும் என்பது என் கருத்து.


4. உங்களுள் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் எழுந்தது?


பூ மலர்வது, பொழுது புலர்வது... இப்படி எல்லாமே ஒரு கவிஞனுக்கு உவகையளிப்பன தான். அவ்வாறு பிறப்பவைகள் கூட காலப்போக்கில் பனியின் தொடுகையாகவும், தணலின் சுடுகையாகவும் மாறிப் போகின்றன.


என் வாழ்க்கையிலும், பாடசாலை பருவத்திலும் அவ்வாறான சில்லறை சேட்டைகள் அமைந்ததால் என் கவிதைகளில் விரக்கி, தனிமை, துன்பம், சந்தோஷம், இனிமை போன்ற எல்லா உணர்வுகளும் கலந்திருக்கின்றன. எனினும் பெண்ணியம், சீதனக் கொடுமை, மலையகம் சார் பிரச்சனை குறித்த கருத்துக்களும் இழையோடாமல் இல்லை. இவைகளால் வந்த ஊக்கத்தால், தாக்கத்தால் கவிதைக் காதலனிடம் என்னை நான் இழந்தேன். அத்துடன் ஆறுதலும், ஆத்ம திருப்தியும் தருகிற ஒரு உருவமில்லாத நண்பியைப் போல் கவிதைகளை இணங்கண்டதாலுமே என் இலக்கிய தேடல் அதிகரித்தது.


5. உங்களது படைப்புகளுக்கு எழுந்த விமர்சனங்கள் குறித்து கூறுங்கள்?


யதார்த்தம் படைப்பாகிற போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும். வெறுமனே கற்பனைத் திறனை மாத்திரம் வைத்துக் கொண்டு கவிதை படைப்பது சற்று சிரமம் தான். ஆனால் கற்பனை மறந்த அனுபவங்கள் கவிதைகளாகினாலும் சிலநேரம் கவிதை சுவாரஷ்யமற்றதாகி விடவும் கூடும்.


இளமைப் பருவத்தில் வரும் இயற்கையான தடுமாற்றங்களை வைத்துத் தான் பல கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். என் படைப்புக்களைப் பார்த்து விட்டு விமர்சனங்களால் இதயத்தை கட்டிப் போட்டவர்கள் சிலர். வார்த்தை வாளால் வெட்டிப் போட்டவர்கள் பலர்.


இலக்கியத்தில் மட்டும் பல தசாப்தங்களைக் கண்டவர்கள் மத்தியில் என் வயதே இரண்டு தசாப்தங்கள் தான். இலக்கியத் துறையில் நான் ஒவ்வொரு கட்டமாக வளர ஆசைப்பட்டுக் கொண்டிருந்த போது தான், மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் என் சிறுகதைகளில் ரசம் இருப்பதாகவும் விரசத்தைத் தவிர்க்கும் படியும் அடிக்கடி விமர்சித்தார். விமர்சனங்களை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்பவள். என் ஆரம்ப படைப்புக்களில் பெண்ணியம், சீதனக் கொடுமை, மலையகம் சார் பிரச்சனைகளை கொஞ்சமாக நான் தொட்டுக் காட்டினாலும் காதல், அன்பு மற்றும் அது தொடர்பான உணர்வுகளை அறவே தவிர்க்க முடியாதிருந்தது.


மக்கள் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தி சமூகத்தை சீர்திருத்தும் கவிதைகளை சொல்ல வாழ்க்கையில் எனக்கு எந்த அனுபவமும் ஏற்பட்டு விடவில்லை. நான் வளர்ந்து வரும் படைப்பாளியே தவிர இன்னொருவருக்கு அறிவுரை சொல்லுமளவுக்கு வளர்ந்து விட்ட படைப்பாளியல்ல. மூத்த படைப்பாளிகளின் ஆலோசணைக்கிணங்க காலப்போக்கில் என் படைப்புக்களும் மிகக் காத்திரமானவையாக வெளிவர வேண்டும் என்பதே எனது ஆர்வமும் கூட.


ஆனாலும் இவ்வாறான எதிர்மறை விமர்சனங்களைக் கண்டு நான் ஒரு நாளும் ஓய்ந்து விடப் போவதில்லை. காரணம் என் வயதையொத்த படைப்பாளிகளாலும், நண்பர்களாலும் ஏன் இவற்றை புரிந்து கொண்ட இலக்கியவாதிகளாலும் கிடைத்த என் படைப்புகளுக்கான விமர்சனங்கள் என்னை உற்சாமூட்டுவதாகவே இருக்கின்றன.


6. அதிகமாக தேர்ந்தெடுத்து வாசிக்கும் நூல்களைப் பற்றிக் கூறுங்கள்? உங்கள் வாசிப்பின் தேடல் என்ன?


கவிதை, நாவல், சிறுகதை நூல்களைத் தான் அதிகமாக வாசிப்பதுண்டு. ஆனாலும் பவானி சிவகுமாரன் மற்றும் சுதாராஜ் ஆகிய இருவரின் சிறுகதை தொகுப்புக்களும் என் சிந்தையைக் கவர்ந்தவை. மறைந்த இந்திய எழுத்தாளர் சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகளும், ரமணி சந்திரனின் நாவல்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அத்துடன் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதும் துப்பறியும் நாவல்கள் மீதும் மிகையான விருப்பமுண்டு. வாசித்து முடிக்கையில் ஐயோ முடிந்து விட்டதே. இன்னும் தொடர்ந்து இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்ற உணர்வை தரக்கூடிய படைப்புக்களை இனங்கண்டு வாசிப்பது தான் இதுவரை என் தேடலாக இருக்கிறது.


7. உங்களைப் பாதித்த எழுத்துக்கள் எவை? ஏன்?


என்னை சிறுகதை எழுதத்தூண்டிய காரணம் ரமணி சந்திரனின் நாவல்கள் என்றால் மிகையில்லை. அவர் அதில் கையாண்டிருக்கும் அழகிய உவமானங்கள், நுட்பங்கள், அர்த்தப்பாடுகள் என்பன என்னுள் சிறுகதை எழுத வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தின. பலரது கணிப்பு, ரமணி சந்திரனின் படைப்புக்கள் ஜனரஞ்சகமாக இருப்பதால் அது இலக்கியம் படைக்க வழிவகுக்காது என்பது தான். இந்த கருத்துக்கான காரணம் இன்னமும் எனக்கு புதிராகவே இருக்கிறது.


அத்துடன் மாவனல்லை ரிஷான் ஷெரீப் அவர்களின் வலைப்பூக்களை பார்த்தும் பிரம்மித்ததுண்டு. ஒரு சின்ன விடயத்தைக் கூட மிகத் துல்லியமாக கதை வடிவில் சொல்லிவிடும் திறமை அவருக்கு நிறையவே இருக்கிறது. அவரது எழுத்துக்களைப் பார்த்த பிறகு நிறைய எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இன்னமும் தலைதூக்கியிருக்கிறது.


8. நீங்கள் கூற விரும்புவது என்ன?


இலக்கியத்துறையில் மட்டுமே உயர்ந்திருக்கும் சிலர், உலக தரத்தில் முதல் நிலையில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில்; எவ்வளவு தான் முன்னேறினாலும் தலைக்கனமும் நான் என்ற அகம்பாவமும் ஒருவருக்கும் இருக்கக் கூடாது. கவிஞர்களாக இருப்பதை விட மனித நேயமுள்ள நல்ல மனிதனாக இருக்க வேண்டும். நானும் அவ்வாறு இருக்கவே விரும்புகிறேன். அத்துடன், மூத்த தலைமுறையினரின் விமர்சனங்கள் இளம் படைப்பாளிகளை பாதிக்கும் படி இருந்து விடாமல் அவர்களது பிழைகளை நயமாக சுட்டிக்காட்டி வளர்த்து விடக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.


புதைகுழி நோக்கி புறப்படுகிறேன் !

ஷ்.. ஷ்... சற்று தாமதப்படுங்கள்

எனை மணவரைக்கு அழைத்துச் செல்ல

உத்தேசமா?

கொஞ்சமே கொஞ்சம் என்

மன அறையை உற்று நோக்குங்கள்!


கடந்து போன என் காதலின்

கால் தடங்கள் புரிகிறதா?

உதிரம் போல என்

உடலெங்கும் ஊடுறுவி விட்ட

உணர்வுகள் தெரிகிறதா?


அவன் ஸ்வாசத்தால்

வாசம் தடவி வைத்திருக்கிறேன்

அதை விஷம் என்றா நச்சரிக்கிறீர்கள்?


என் கழுத்தோடு கை கோர்த்து சிரிக்கிறானே

இந்த மாலை கட்டாயம் தேவை தானா?

கரங்களை பற்றி இழுக்கும் போது..

வளையல்களுக்கு இங்கென்ன வேலை?


கூரைச்சீலை!

அவன் நினைவுகளை முழுசாய்

போர்த்தியிருக்கும் போது

இது அவசியமில்லை அகற்றுங்கள்!


உதடு கன்னம் கண் என அழுகையால்

சிவந்திருக்க..

உதட்டுச் சாயம் மட்டும் எதற்கு?ம்;.. இப்போது அழைத்துச் செல்லுங்கள்

அந்த ம(ர)ண அறைக்கு!!!தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

1 comment:

  1. நான் ஒர் விடுமுறையில் உள்ளபோது தங்களின் பேட்டிஒன்றினை பார்வையிட்டேன்
    அனறு தங்களின் நட்புகிடைக்க நினைத்திருந்தேன்
    இன்று அடையாளம் கண்டுகொண்டேன் மிக்க நன்றி

    ReplyDelete